நேற்றைய அறிவியல் உண்மை இன்றைக்கு உண்மையல்ல என்று நிரூபிக்கப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆணித்தரமாக உண்மை என்று நம்பி வந்த நியூட்டனின் பௌதிகம் ஐன்ஸ்டீனின் கண்டு பிடிப்புகளுக்குப் பின் உண்மையில்லை என்றாகி விட்டது.
இப்படி வருடங்களில் அறிவியல் சித்தாந்தங்கள் முன்னுக்குப் பின் முரணாக மாறி வருகின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் உண்மைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன என்றால் ஆச்சரியமே அல்லவா?
முதலில் இன்றைய அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். பெரிய டெக்னிகல் வார்த்தைகளுக்குப் போகாமல் பொதுவாக கண்டறியப்பட்ட சில உண்மைகளைப் பார்ப்போம்.
அணுக்களில் இருந்து x கதிர்களும், பலவிதமான சக்தி வெளிப்பாடுகளும் வெளிப்படுவதைக் கண்ட விஞ்ஞானிகளுக்கு அணுவுக்குள் என்ன இருக்கிறது என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அணுவை அதை விட நுட்பமான ஆல்பா கதிர்களால் துளைத்துப் பார்த்தார்கள்.
அணுவுக்குள் உள்ளே பெரும்பாலும் வெட்ட வெளியாக இருப்பதையும் மையத்தில் கரு போல சில ப்ரோட்டான் துகள்களும் அவற்றைச் சுற்றியபடி சில எலக்ட்ரான் துகள்களும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டனர்.
உதாரணமாக ஒரு மிகப் பெரிய மண்டபத்தை அணுவென்று எடுத்துக் கொண்டால் கடுகு அளவு தான் அதன் உட்கரு இருந்தது.
அந்த அணுத்துகள்களை ஆராய்ந்த போது தான் விஞ்ஞானிகள் குழம்பிப் போனார்கள். எதையும் ஆணித்தரமாக சொல்லும் சக்தி படைத்ததாக கருதப்பட்ட விஞ்ஞானம் அணுவைப் பிளந்து பார்த்த போது பிரமித்து பேச்சிழந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.
காரணம் அந்தத் துகள்கள் சில சமயங்களில் திடப் பொருளாகக் காணப்பட்டாலும் சிலசமயங்களில் அலைகளாக மாறுவதைக் கண்டு அதிசயித்தார்கள். துகள் என்றால் அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது ஓரிடத்தில் இருக்க வேண்டும். அலை என்றால் அது எங்கும் பரவி இருப்பது. ஆனால் ஒரே வஸ்து இந்த முரணான இரட்டை நிலைகளில் எப்படி இருக்க முடியும்?
சில சமயங்களில் பார்க்கின்ற போதே பார்க்கும் விதத்திற்குத் தக்க துகள்கள், அலைகள் என மாறிக் காட்சி அளிக்கும் இந்த வினோதம் விஞ்ஞானம் இது வரை கண்டிராதது. இதுவே ஐன்ஸ்டீன் சொன்ன க்வாண்டம் சித்தாந்தத்தின் அடிப்படை தத்துவம்.
மேலும் ஒரு துகள் அணுவுக்குள் இந்த இடத்தில் இருக்கும் என்று சொல்ல முடியாது. அங்கு துகள் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
ஒரு கோணத்தில் பார்க்கும் போது துகளாகத் தெரிவது வேறொரு கோணத்தில் காணாமல் போய் அலையாக மாறி கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒரே நேரத்தில் இரண்டுமாய் எப்படி அது இருக்க முடியும் என்பதை விஞ்ஞானம் விளக்க முடியாமல் திணறியது.
கடைசியில் அணுவைப் பிளந்த விஞ்ஞானம் உள்ளே இருக்கும் இருக்கும் துகள்களை சக்தியின் வெளிப்பாடான பல வடிவங்களாகக் கண்டது. அவை சதா சஞ்சரித்துக் கொண்டிருப்பதையும், ஒன்றுடன் ஒன்று உறவாடுவதையும், தத்தம் சக்திகளைப் பரிமாறிக் கொள்வதையும் விஞ்ஞானிகள் கண்டனர். அவை சக்திகளை பல விதங்களில் வெளிப்படுத்துவதையும், புதிது புதிதாக மாறுவதையும் கண்டு அதிசயித்தனர்.
இயற்கை விஞ்ஞானிகளுக்கு வசதியாக எதையும் தனியாகப் பிரித்துக் காட்டவில்லை. அவர்களால் உணர முடிந்ததெல்லாம் அந்த துகள்களின் இயக்கத்தின் விளைவுகளையே. முடிவில்லாத இந்த இயக்கத்தின் விளைவாக ஏற்படும் ஒட்டு மொத்த வடிவமைப்பே நாம் காணும் பொருள்கள். உண்மையில் பிரபஞ்சம் முழுவதுமே ஓர் சக்தி இயக்கம் தான், உலகமே சக்தியின் துடிப்பு தான் என்ற முடிவுக்கு விஞ்ஞானம் வந்திருக்கிறது.
சில உண்மைகள் தெளிவாக வார்த்தைப்படுத்த முடியாதவை என்பதையும் அறிவியல் ஒத்துக் கொண்டு இருக்கிறது.
இப்போது சில உபநிடதங்கள் சொல்வதைப் பார்ப்போம்...
சாண்டோக்கிய உபநிடதத்தில் பிரபஞ்சத்தின் மூலத்தை விளக்க முற்பட்ட ஒரு குரு தன் சிஷ்யனிடம் ஒரு ஆலமரத்தின் பழத்தைக் கொண்டு வரச் சொன்னார்.
"இந்தாருங்கள் குருவே"
"அதை உடை"
"உடைத்தேன் குருவே"
"உள்ளே என்ன இருக்கிறது?"
"மிக நுணுக்கமான சில துகள்ப் பொடிகள்"
"அதையும் உடை"
"உடைத்தேன் குருவே"
"அதனுள் என்ன பார்க்கிறாய்?"
"ஒன்றும் இல்லையே குருவே"
"உன் கண்ணுக்குப் புலப்படாத அந்த சூட்சும சூனியத்தில் தான் அந்தப் பெரிய ஆலமரத்தின் மூலம் இருக்கிறது. அது போல சூட்சும சக்தியில் தான் ஒவ்வொன்றின் மூலமும் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சமும் அந்த சூட்சும சக்தியில் தான் இருக்கிறது. இயங்குகிறது."
அணுவை உடைத்து அறிவியல் அறிஞர்கள் கண்டதும் இதையே அல்லவா?
கதோபநிடதத்தில் எமதர்மன் நசிகேதனிடம் சொல்கிறார். ஆத்மா என்பது நுணுக்கத்திலும் மிக நுணுக்கமானது. அதை வாதங்களால் அறிய முடியாது. உணர மட்டுமே முடியும்?
ஈசோப நிடதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது...
அது நகர்கிறது. அது நகர்வதில்லை. அது தூரத்தில் இருக்கிறது. அது போல அருகேயும் இருக்கிறது. அது எல்லாவற்றின் உள்ளேயும் இருக்கிறது. அது எல்லாவற்றின் வெளியேயும் இருக்கிறது.
பிரகதாரண்ய உபநிடதம் சொல்கிறது: பிரம்மம் என்பது வடிவில்லாதது. அழிவில்லாதது. சதா இயங்கிக் கொண்டிருப்பது.....
இதையெல்லாம் முதலில் சொன்ன அறிவியல் ஆராய்ச்சிக் கண்டு பிடிப்புகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.
நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த அறிவியல் உண்மைகளை அறிந்தும் உணர்ந்தும் இருந்தார்கள் என்று தோன்றுகிறது அல்லவா?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.