ஓ.என்.ஜி.சி-யின் ஒரு கிணறுக்குக்கூட லைசென்ஸ் கிடையாது.. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்..
துரை.நாகராஜன் துரை.நாகராஜன் இரா.கலைச் செல்வன்(விகடன்.காம்)..
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்கும் விஷயமும், ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்களும், அதனைத் தொடர்ந்த நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட போராட்டங்களும் உலகறிந்த ஒன்று.
காவிரி டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்டவை எடுக்கப்படுவதன் மூலம் டெல்டாவின் மொத்த விவசாயமும் முடங்கிப் போவதோடு அல்லாமல், நிலத்தடி நீரின்றி, மக்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் எனப் பல சூழலியலாளர்களும், இயற்கை ஆர்வலர்களும் ஆதாரங்களோடு குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து அறம் சார்ந்தும், சட்ட ரீதியாகவும் போராடி வருகின்றனர். மக்கள் போராடும்போதெல்லாம் மத்திய, மாநில அரசுகள் ஓ.என்.ஜி.சியின் பக்கம்தான் ஆதரவாக நின்றது. ஓ.என்.ஜி.சிக்கு எதிராகப் போராடியதற்காக மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த.செயராமன் கைது செய்யப்பட்டு 42 நாள்கள் சிறை வைக்கப்பட்டார்.
இதுதவிர போராடும் மக்களுக்கு எதிராகக் காவல்துறையின் அடக்குமுறையும் உச்சக்கட்டத்தை எட்டியது.
நிலை இப்படியிருக்க,
காவிரி டெல்டா கண்காணிப்பு இயக்கத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, ஓ.என்.ஜி.சி கிணறுகள் குறித்து ஆர்.டி.ஐயில் மனு செய்கிறார்.
அப்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தங்களிடம் உள்ள விபரங்களை அளிக்கிறது. அதில் உள்ள தகவல்படி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரப்பில் 219 ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணறுகள் மட்டுமே தமிழ்நாட்டில் இருப்பதாகவும், அதில் 71 கிணறுகள் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அதே சமயம், ஓஎன்ஜிசி தரப்பில்
தங்களுக்கு இந்தியாவில் திரிபுராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான்
700 எண்ணெய்க் கிணறுகள் இருப்பதாகத் தகவல் சொன்னது.
அதில் 183 கிணறுகள் இயங்கி வருவதாகவும் அது குறிப்பிட்டது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சொன்ன தகவலுக்கும், ஓ.என்.ஜி.சி சொன்ன தகவலுக்குமே அதிகமான வித்தியாசங்களும் முரண்பாடுகளும் நிறைந்திருக்கின்றன.
இதற்கெல்லாம் மேலாக முரணாகவும், அதிர்ச்சி தரக்கூடியதாகவும் ஒரு செய்தியை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அத்தகவல்படி,
காவிரி டெல்டாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எந்த எண்ணெய்க் கிணறுகளுக்குமே உரிமம் கிடையாது எனத் தெரிவித்துள்ளது ஓஎன்ஜிசி..
அதாவது, மக்களின் உயிர்களையே பலி வாங்கக்கூடிய வாய்ப்புகள் நிறைந்த ஒரு திட்டத்திற்கு அனுமதியே பெறப்படவில்லை. அது எல்லா வகையிலும் சட்ட விரோதமான செயல். அதே சமயம், தங்கள் மண்ணிற்கும், வாழ்விற்கும் பெரும் ஆபத்து தரக்கூடிய இந்தத் திட்டத்தை எதிர்த்து, சட்டத்திற்கு உட்பட்டு அறவழியில் போராடிய மக்கள்மீது மிக மோசமான வன்முறையை ஏவியது காவல்துறை.
கதிராமங்கலத்தில் உரிமம் பெறாமல் இருக்கும் எண்ணெய்க் கிணற்றில் இருந்து செல்லும் எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டு ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் வரத் தாமதமானதால் தீப்பற்றி எரிந்தது.
அப்போது அங்கே சட்டப்பூர்வமாக போராடிக்கொண்டிருந்த மக்கள்மீது காவல்துறை தடியடி நடத்தியது சட்டவிரோதமானதுதானே? தடியடியில் சிக்கிய கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டதற்கும், போராடிய மக்கள்மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்ததற்கும் அரசாங்கம் என்ன பதில் சொல்லப்போகிறது?
ஓ என் ஜி சி எண்ணெய் கசிவு...
ஒரு நிலத்தை குழாய் பதிப்பதற்காக குத்தகைக்கு வாங்கும்போது, அவர்களின் நிலத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று உத்திரவாதம் அளிக்கும் ஓ.என்.ஜி.சி. குழாய்களில் ஒரு பிரச்னை ஏற்படுவதற்கு முன்னரே 'வரும் முன் காப்போம்' கொள்கையில் மிகத் துரிதமாக செயல்படுவோம் என்பதும் அவர்கள் கொடுக்கும் வாக்குறுதி. ஆனால், இதுவரை டெல்டா பகுதிகளில் அப்படி அவர்கள் வரும் முன் காத்ததாக எந்த வரலாறுமே கிடையாது.
மாறாக, பிரச்னைகள் வந்தும்கூட காக்கப்படாத கதைகள்தான் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன.
நெடுவாசலில் இருந்து சில கி.மீ. தொலைவில் இருக்கும் நல்லாண்டார் கொல்லையில் இன்றுவரை எண்ணெய் கொப்பளித்துக் கொண்டே தானிருக்கிறது.
திருப்புஞ்சை, ஆனைமங்கலம் கிராமங்களில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட வயலில் இன்றும் அதன் பாதிப்புகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒரு காலத்தில் தன் மடியில் விதைகளைச் சுமந்து தன் செழிப்பை வெளிப்படுத்திய மண், இன்று இந்த எண்ணெய்க் கசிவினால் மலடாகி மட்கிக் கிடக்கிறது.
கடந்த வாரம்கூட, திருவாரூர் அருகே எருக்காட்டூரில் வயலில் கொட்டிய எண்ணெயைத் தீ வைத்து எரித்ததே தவிர, முறையாகச் சுத்தம் செய்ய முன்வரவில்லை ஓ.என்.ஜி.சி.
ஒருவேளை தீ வைத்து எரிப்பதுதான் ஓ.என்.ஜி.சியின் உலகத்தர தொழில்நுட்பம் போல...
கதிராமங்கலம்...
இதுவரை தோண்டப்பட்ட எண்ணெய்க் கிணறுகளுக்கே உரிமம் பெறவில்லை. அந்தக் கிணறுகளால் பாதிக்கப்பட்ட நிலங்களை எந்நாளும் மீட்க முடியாத நிலை. தங்கள் வாழ்வாதாரத்திற்காக இந்தத் திட்டங்களை எதிர்த்தவர்களை 'தேச விரோதிகள்', 'வளர்ச்சிக்கு எதிரானவர்கள்' என்று பச்சை குத்தியது மத்திய அரசு.
சட்டவிரோதமாக நடக்கும் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக நோட்டீஸ் கொடுத்த வளர்மதிக்கு குண்டர் சட்டத்தில் சிறை தண்டனை. எதிர்த்துப் பேசினால் தடியடி. உக்கிரமாக இன்னும் எதிர்த்தால் உறுதியாய் கடுமையான சிறை தண்டனை.
இதோ... அரசின் எல்லாப் பொய் முகங்களும் வெட்டவெளிக்கு வந்துவிட்டன.
மழை பெய்யவில்லை... இந்த வெயிலிலேயே அதன் சாயம் வெளுத்து விட்டது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.