தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாசி (ஜி) அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது...
இந்திய விடுதலைக்காக நேதாசி (ஜி) மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர். இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும் என்று நேதாசி (ஜி) அறைக்கூவல் விடுத்தார்.
அந்த அறைக்கூவல் நம் வீர இனத்தின் காதுகளில் விழ, தமிழ்நாட்டிலும் மலாயாவிலும் பர்மாவிலும் இருந்த தமிழின மக்கள் இந்திய தேசிய ராணுவத்தில் உயிரை பொருட்படுத்தாமல் இணைந்தனர். பல உயர் பதவிகளிலும் இருந்தனர். அரக்கான் போரில் பல தமிழர்கள் வீர மரணம் அடைந்தனர்.
மடிந்த ஒவ்வொரு தமிழனும் தான் உயிர் போகும்வரை போராடியதாக நேதாசி (ஜி) யிடம் சொல்லுங்கள் என்று அருகில் இருந்தவரிடம் உயிர் பிரியும் வலியோடு கூறிவிட்டு வீரமரணம் அடைந்தார்கள்.
ஒரு காலக்கட்டத்தில் 600க்கும் மேற்பட்ட தென்னிந்திய இ.தே. ரா. (இ.தே. ரா. - இந்திய தேசிய ராணுவம்) வீரர்களை கைது செய்ய நேர்ந்தது. அப்போது நேதாசி(ஜி) தளபதி (General) திலானை அழைத்து கூறினார் - இவர்கள் மிக சிறந்த வீரர்கள். இவர்கள் கடுமையுடன் இறுதிவரை போராடுவார்கள். இவர்கள் தவறான புரட்சி செய்வதற்கு காரணம் இவர்கள் தலைவரின் தவறான போக்குத்தான். அதனால் நீ இவர்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்து என்றாராம்.
பின் ஒருநாள் தலைவரான திலான் கூறுகிறார். தமிழ் வீரர்களுக்கு நான் தலைவராக இருந்தது என் பெரும் பேறு இ.தே. ரா. த்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான். இ.தே. ரா.த்தில் தலைவராக இருந்த மற்றொரு வீரர் தளபதி (General) கியானி கூறுகிறார்.. தமிழர்கள் மிக சிறந்த வீரர்கள், இறுதிவரை போரிட்டார்கள். எதிரியிடம் பிடிப்பட்ட போதும் இவர்கள் ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்ததே இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
நேதாசி(ஜி)யின் இ.தே. ரா. கண்டு எரிச்சல் அடைந்த வின்ஸ்டன் சர்ச்சில் ரேடியோவில் கூறினார்.. மலேயா ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் ரத்தம் நேதாசி(ஜி) மூலையில் கட்டியாக உள்ளது என்றார். அதற்க்கு பதில் அளித்த நேதாசி(ஜி) இந்த தமிழர்கள்தான் பின்னாளில் ஆங்கில ஏகதிபத்தியத்தின் ரத்தத்தை குடிப்பார்கள் என்று கூறினார்.
1945 இல் மார்ச் மாதம் நேதாசி(ஜி) படையில் ஒற்றர்களாக இருந்த நான்கு தமிழ் வீரர்கள் தூக்கிலிடபட்டனர்.
இந்தியா விடுதலைப் பெற்ற பின்னரும் இவர்களைப் பற்றி நாம் அறியாது விந்தையிலும் விந்தை. ஒரு தமிழனாக பிறந்ததால் தான் ராமுத்தேவர், இராமசாமி ஒன்றியார் போன்றோர்கள் புகழ் அறியப்படவில்லை.
தலைசிறந்த படைத்தலைவர்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நேதாசி(ஜி) 46 பேர்களைத் தேர்ந்தெடுத்து ய(ஜ)ப்பான் டோக்கியோவிற்கு ராணுவ பயிற்சி பெற்று திரும்ப அனுப்பினார். அதில் கூட 16 பேர்கள் தமிழர்கள். ஒரு ஈழத்தமிழர் உட்பட. இ.தே. ரா. சேர ஆர்வம் கொண்டு ஒரே நேரத்தில் 25000 பேர் அணி திரண்டனர்.
உடல் வலிமை இல்லாதவர்களும் கூட தங்களை இணைத்து கொள்ளுமாறு வலியுறுத்தினர். 14 வயது சிறார்களும் 16 வயது என்று பொய் கூறி கொண்டு இ.தே. ரா.வில் இணைந்தனர். ஒருவர் தன்னிடம் இருந்த 200 பசுக்களை நன்கொடையாக இ.தே. ரா.க்கு நேதாசி(ஜி)யிடம் கொடுத்துள்ளார். கிழிந்த சேலையுடன் வந்த மூதாட்டி ஒருவள் தன்னிடம் இருந்த மூன்று டாலரை கொடுத்துள்ளார். அதை கண்ணீர் மல்க நேதாசி(ஜி) பெற்று கொண்டார்.
நேதாசி(ஜி)யை சுற்றி பலர் தமிழர்கள் இருந்தனர். அவருடைய சமையல்க்காரர் பெயர் காளி. நேதாசி(ஜி)யின் இறுதி கடிதத்தை எழுதியவர் திவி என்ற தமிழர். நேதாசி(ஜி) சிங்கபூருக்கு வந்த போது அவரை வரவேற்றவர் சிதம்பரம் ஒரு தமிழர். யெ(ஜெ)ர்மனியில் தமிழ் வானொலி நடத்தியவர் திரு நாயுடு. அவர் அக்காலத்தில் பிரான்சில் உள்ள பாரிசில் உணவு விடுதி ஒன்றை நடத்திய பெரிய வியாபாரி. நேதாசி(ஜி)யின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு விடுதியை மூடிவிட்டு யெ(ஜெ)ர்மனியை அடைந்து தமிழ் நிகழ்சிகளை நடத்தினார்.
குண்டு மழை பொழிந்தபோதும் கூட தொடர்ந்து தமிழ் நிகழ்சிகள் நடத்தினார். நாலரை ஆண்டுகளில் ஒரே ஒரு நாள்தான் நிகழ்ச்சி நடக்கவில்லையாம். மலேயாவிலும் நேதாசி(ஜி)க்கு ஆதரவாக யுவபாரதம், சுதந்திர இந்துசு(ஸ்)தான் போன்ற தமிழ் இதழ்கள் வெளிவந்தன. ராணி யா(ஜா)ன்சி படையின் இராணுவத் தலைவியாக (Captain) இலட்சுமி இருந்தார்.
இந்த படையில் கேப்டன் யா(ஜா)னகி தேவர் பெரும்பங்கு ஆற்றினார். இவர் இந்தியாவில் பிறக்காதவர், இந்தியாவை பார்க்காதவர். எனினும் வீரத்தமிழ் இன உணர்வோடு போராடினார்கள். விவசாய குடும்பங்களில் இருந்து வந்த இளம் பெண்கள் தங்கள் நீண்ட கூந்தலை கத்தரித்து விட்டு ராணுவ பயிற்சிக்கு பின் பர்மா போர் முனைக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் செவிலியர்களாக பணிபுரிய மறுத்து தூப்பாக்கி ஏந்தி ஆங்கிலேயருடன் போரிட விரும்பினார்கள்.
அத்தனை வீரம் மிகுந்த தாய் வழி வந்தவர்கள் நாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் மார்பில் குடித்த பால் இன்னும் நம் மரபணுக்களில் கலந்திருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.