01/03/2018

பலாப்பழம் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்...


முக்கனிகளில் இரண்டாவது இடத்தை வகிக்கும் பலாப்பழம், தமிழ்நாட்டில் பண்டைக் காலத்திலிருந்தே பழமாகவும், பல வகைப் பண்டங்களாகவும் செய்து பயன் படுத்தப்பட்டு வருகிறது.

பல வழிகளில் மருத்துவக் குணங்களும் இப்பழத்திற்கு உண்டு. குற்றாலக் குறவஞ்சி மற்றும் தமிழ் இலக்கியங்களிலும் பலா பற்றிய குறிப்புகள் ஏராளம் உள்ளன.

தாயகம்: பலாவின் தாயகம் இந்தியா ஆகும். இலங்கை, இந்தியா, மலேசியா, பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பரப்பளவில் பலா பயிரிடப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஒரிசா, அசாம், பீகார், மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பலா கணிசமான பரப்பளவில் பயிராகிறது.

பலாவின் தாவரவியல் பெயர்: "ஆர்ட் டோ கார்பஸ்ஹைட்டிரோஃபில்லஸ்" (Artocarpus heterophyllus). அர்ட்டிக்-கேசிய தாவர குடும்பத்தைச் சார்ந்தது.

தமிழில் வேறு பெயர்கள்: பலாவிற்கு தமிழில், ஏகாரவல்லி, சக்கை, பலவு, பலாசம், வருக்கை, பனசம் முதலிய வேறு பெயர்களும் உள்ளன.

பல்மொழிப் பெயர்கள்:

ஆங்கிலத்தில் "ஜாக் ஃபுரூட்" (Jack fruit) என்று பெயர். இந்தியில் பனஸ், மலையாளத்தில் சக்கே, தெலுங்கில் பனஸபண்டு, கன்னடத்தில் பேரளே, குஜராத்தியில் பனஸ’, காஷ்மீரியில் பனஸ்சு என்று பெயர்.

சத்துப் பொருட்கள்:

நாம் சாப்பிடும் நூறு கிராம் பலாச்சுளையில் உள்ள சத்துப் பொருட்களின் அளவு கீழ்கண்டவாறு உள்ளன.

புரதம் 2.1 கிராம், கொழுப்பு 0.2 கிராம், மாவுப்பொருள் 19.8 கிராம், நார்ப்பொருள் 1.4 கிராம், சுண்ணாம்பு சத்து 20 மில்லிகிராம், பாஸ்பரஸ் 41 மில்லிகிராம், இரும்புச் சத்து 0.7 மில்லிகிராம், தயாமின் 0.04 மி.கிராம், ரைபோஃபிளோவின் 0.15 மி.கிராம், நியாசின் 0.4 மி.கிராம் வைட்டமின் "சி" 7.1மி. கிராம், மெக்னீசியம் 27 மில்லிகிராம், பொட்டாசியம் 19.1 மில்லிகிராம், சோடியம் 41.0 மில்லிகிராம், தாமிரம் 0.23 மில்லிகிராம், குளோரின் 9.1 மில்லிகிராம், கந்தகம் 69.2 மில்லிகிராம், கரோட்டின் 306 மைக்ரோகிராம்.

இத்தனை சத்துப் பொருட்கள் உள்ள பலாச்சுளையை, "சத்துப்பேழை" என்று சிறப்பாகச் சொல்லலாம்.

எப்படிச் சாப்பிடலாம்:

கொட்டையை நீக்கிவிட்டு, பலாச்சுளைகளை அப்படியே சுவைத்துச் சாப்பிடலாம். பலாக்கூழ், பலாப்பழ கீர், பலாப்பழ ஜாம், பலாப்பழ ஜெல்லி முதலியன செய்தும் சாப்பிடலாம்.

பலாப்பழத்தை பயன்படுத்தி பலவகை இனிப்புப் பண்டங்கள் தயார் செய்து உண்ணலாம்.

முக்கிய குறிப்பு:

பலாப் பழச்சுளையை அப்படியே தின்னும் போது, முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியதைத் தெரிந்து கொள்வோம்.

பலாப் பழத்திலுள்ள சில கேடு பயக்கும் தன்மையை நீக்கி, பழத்தின் முழு சத்துப் பொருட்களும் கிடைக்க, பலாச்சுளையுடன் சிறிது வெல்லம், கருப்பட்டி, தேன் இவைகளில் ஏதாவது ஒன்றைச் சேர்த்து சாப்பிடுவது மிக நல்லது. இது எளிய வழிமுறைதான்.

மருத்துவப் பயன்கள்:

பலாப்பழத்தில் வைட்டமின்களும், பிற சத்துப் பொருட்களும் கணிசமாக இருப்பதால், உடல் வளர்ச்சிக்கும், வலிமை பெறவும் ஒப்பற்ற பழம் பலாப்பழம்.

சருமத்தை பளபளப்பாக வைக்கும் சிறப்புக் குணம் பலாப்பழத்திற்கு உண்டு.

பல் உறுதி பெற, ஈறு கெட்டியாக இருக்க, பலாப்பழம் žராகச் சாப்பிட வேண்டும்.

உடம்பில் தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்தில் இருக்கிறது.

எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை பலாப்பழத்திற்கு உள்ளது என ஜெர்மனி, அமெரிக்காவில் மேற்கொண்ட ஆரம்ப நிலை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து இதுபற்றிய ஆராய்ச்சி நடந்து வருகிறது.

பலாப்பழ பானகம் உடம்புக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மையது.

உடலில் உள்ள தசைகளை சீராக இயங்க வைக்கும் ஆற்றல் பலாப்பழத்திற்கு உண்டு.

தோல் வறட்சி அடையாது பாதுகாக்கும் சத்துப் பொருள் பலாப்பழத்தில் உரிய அளவு இருக்கிறது.

பலாப்பழ கீர் இரவில் அருந்தினால் நன்கு தூக்கம் வரும். தூக்கமில்லாமல் அவதிப்படுவோர்க்கு நல்ல எளிய மருந்து.

பலாப்பழத்துடன் சிறிது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடல் அசதி, களைப்பு நீங்கி, உற்சாகம் ஏற்படும்.

பலாப்பழத்துடன் சிறிது கசகசாவை மென்று தின்றால், குடல் அழற்சி நீங்கும்.

பலாப்பழத்துடன், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் அத்தனையும் வெளியேறி, நலன் பயக்கும்.

எச்சரிக்கை:

நீரிழிவு நோய் உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிடக் கூடாது.

வெறும் பலாப்பழத்தை அதிகம் தின்றால் அஜிரணம் ஏற்படும்.

ஆஸ்துமா நோயை அதிகரிக்கும்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.