28/04/2018

சித்தர் ஆவது எப்படி ? - 15...


பேரருளை உணர்த்தாத குருவருள் பாழ்...

அன்பே சிவம் என யாரும் அறிகிலர் என சித்தர் பாடிய பாட்டின் படி, அன்பை பற்றி சதா பேசிக் கொண்டே இருக்கும் மனித வர்க்கம் அதன் உண்மை தன்மையை உணராது இருக்கிறது..

அது முக்தியில் மட்டுமே தோற்றத்திற்கு வரும்.. விளக்கம் கிடைக்கும்... அந்த மூன்று இணைக்கக் கூடிய ஒளி நிலை பெறவே முதலில் முனைய வேண்டும்... அந்த மூன்று கிடைத்த ஒளி நிலையில் மட்டுமே மரணமற்ற நீங்காத பேரன்பு கிடைக்கும்.. முதலில் பேராற்றல் மிகுந்த பேரருளின் தோன்றா நிலையின் தொடர்பு..

அப்படி அப்படி பெற்ற ஆற்றலை உருவ சக்தியாக மாற்றும் வல்லமை வாய்ந்த ஒரு ஊடகமான குருவருளின் தொடர்பு.. அது இரண்டாம் நிலை..

பின் குருவின் தொடர்புடன் உருவ பொருள்களுடன் உலகத்தோடு தர்மமாக வாழுதல்.. இது மூன்றாம் நிலையான திருவருள்..

பேரருள் குருவருள் திருவருள் இந்த மூன்று நிலைகளையும் ஒரே நேரத்தில் பூரணமாக பெற்று இயங்குகிற அந்த தருணம் தான் முக்தி அடைந்த நிலை என்பர்..

அந்த நிலை தான் நிகழ் கால தொடர்பாகிய அன்பு என்பர்..

அந்த நிலையில் வற்றாத சக்தியை பிரபஞ்சமாகிய தோன்றா நிலையில் பெற்று பெற்று, அதனை சத்திய பொருளாக குருவின் துணையால் உருவமாக மாற்றி உலக சார்புகளோடு, சத்திய வாழ்க்கை தர்ம வாழ்க்கை, கருணையோடு வாழும் தகுதி பெறுகிறோம்.

முக்தி ஆனது தோன்றா நிலையாகிய பேரருளையும், அந்த பேரருளை வேண்டிய வண்ணம் பொருளாக மாற்றும் ஒரு ஊடகமான குருவருளையும், அதனால் உண்டான சத்திய நிலையில் ஏற்படும் உலக பந்தங்களில் பயன் தூய்ப்பு என்ற அனுபவநிலையும் ஒன்று சேர்ந்த நிலையில், இணைந்த நிலையில், இருக்கும் தன்மையாகும்..

அதாவது மூன்றும் பூரணமான செயல் நிலைதான் முக்தி என்பது..

இதில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டோ நீங்கிய நிலையில் குறைவு பட்டவர்களாக உள்ளோம்..

பேரருளும் குருவருளும் குறைவு பட்ட காரணத்தால், தொடர்பு மையமாகிய உலகியலில் பல வேதனைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்...

தோன்றா நிலையாகிய பேரண்டமும் பேரறியும் அதன் பேராற்றலும் உணர்த்த வேண்டிய மதங்கள், இடையில் உள்ள குருவருளை மற்றுமே பற்றிக்கொண்டு, முயன்று முயன்று மூல ஆதார சக்தியை பற்ற முடியாமல், விதிக்கப் பட்ட சக்தியையும் செலவு செய்து தோற்றுப் போய் கொண்டே இருக்கின்றன..

சூரிய வெளிச்சத்தை முறைபடுத்தி குவித்து ஒரு குவி ஆடி ( lense ) தன் கீழ் உள்ள பஞ்சை எரிய வைக்கிறது.. இதில் சூரிய வெளிச்சம் பிரபஞ்ச ஆற்றல் என்ற பேரருள் என்றால், குவி ஆடி குருவருள் ஆகும்..

பஞ்சு என்பது உலக சம்பந்த பட்ட சார்புகளான திருவருள் ஆகும்.. இந்த மூன்றும் சேர்ந்த பூரணமாக பெற்ற நிலையே முக்தி என்பதாகும்..

இன்று நிழலிலே குவி ஆடி வைத்துக் கொண்டு பஞ்சை எரிக்க, படாதபாடு அனைவரும் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்..

எல்லா மதங்களும் யோக பயிற்சிகளும் இன்று மூல ஆதாரத்தை விட்டு விட்டு வெறும் வழிபாட்டிலும், வெற்று பயிற்சியிலும் ஈடுபட்டு, இருக்கும் விதிக்கப் பட்ட ஆற்றலையும் இழந்து இழந்து நாசமாகி போய் கொண்டு இருக்கிறது.. எல்லாமே சூரிய ஒளி படாத குவி ஆடிகளாக இருக்கின்றன..

ஆனால் சில அற்புதங்கள் மதங்களில் நடக்கின்றனவே என்று வாதாடலாம்.. அற்புதங்கள் நடந்தபின், அதன் பின் வந்த நிலையை யாரும் வெளிப் படுத்துவது இல்லை..

அற்புதங்கள் நடந்த ஆனந்தத்தில் பின்னால் தொடர்ந்து வரும் அவல நிலையை மறைக்கப் பட்டு விட்டது..

காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை போல் நடந்த அற்புதங்கள் பின், ஏற்படும் அவலங்களை சொல்லாமலே போய் விட்டனர்..

அற்புதங்கள் நடந்த போது பெருமை பட்ட போது, அந்த பெருமையே தனக்கு ஏற்பட்ட அவல நிலையை சொல்ல தடையாக இருந்தது..

சித்தர்களை தவிர எந்த மதவாதிகளுக்கும் எந்த அற்புதமும் நடக்கவே இல்லை..

உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் ஒன்றுக்கு நூறாக மிகை படுத்தப் பட்ட அந்த அற்புதங்கள் பொய்யாகவே இருக்கும்..

முக்தி என்ற ஞான நிலையில் மட்டுமே அவைகளின் உண்மை தோற்றம் புலப்படும்..

தோன்றா நிலையில் உள்ள பேரருளின் துணை இல்லாமல் சத்தியமாக எந்த அற்புதமும் நடக்காது.. அந்த மூலாதார சக்தியின் துணையின்றி எந்த அற்புதமும் நடக்கவே நடக்காது..

மூலசக்தியின் துணையின்றி எல்லை கடந்து பலப்படுத்தப் பட்ட குருவருள் நாசத்தையே உருவாக்கும்.. பெருகி வரும் கோவில்களும் மசூதிகளும் சர்ச்களும், பேரருளுக்கு எதிரானவை.. பேரருளை பெற மிகப் பெரும் தடையாக உள்ளன..

அவைகள் எல்லாம் நிழலில் பயன் படுத்தப் படும் குவி ஆடிகள்.. எந்த கனலையும் எழுப்ப தகுதி அற்றவை.. மாறாக இருக்கின்ற கனலையும் கிரகித்து மனிதனை சக்கையாக செய்து விடும்.. இன்றைய குருமார்களும் அப்படியே இருக்கின்றார்கள்.. அதனால் தான் நிலைதடுமாறிய நிலையில் மனிதன் எண்ண செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறான்...

இந்த தோன்றாநிலையை உணர்த்தாத எதுவும் பலன் அளிக்காது..

மூலக்கனலோடு தொடர்பு அற்ற எதுவும் வெறும் சடப் பொருளே..

தோன்றும் நிலையில் உள்ள தொடர்பு, தோன்றா நிலையை உணர தடையாக இருப்பதால், தோன்றும் நிலையில் உள்ள குருவருள் மறைந்திருந்து ஒருவனுக்கு தோன்றாநிலையை உணர்த்த வேண்டும்.. அப்படி எதுவும் இன்றைய சூழ்நிலையில் நடப்பது இல்லை...

தானே கடவுள் என பிரகடனப் படுத்தி மனித குலத்திற்கு நாசமே விளைவிக்கின்றனர்..

தோன்றா நிலையில் பெறப்பட்ட மூல சக்தியால் மட்டுமே முக்தியின் விளைவாக ஒருவர் அன்பு உடையவராய் ஆகி திருவருளான உலக சார்புகளுக்கு, அதாவது உலக உயிர் இனங்களுக்கு நன்மை செய்ய முடியும்..

மற்றபடி மற்றவர்கள் அன்பை பற்றி பேசிக் கொண்டு இருக்கலாமே தவிர அன்பாய் இருக்க முடியாது..

ஆகவே இன்றைய மனிதக் குலத்திற்கு தோன்றா நிலைக்கு அழைத்து சென்று பேராற்றல் என்ற மூலக் கனலை பெற வேண்டிய கட்டாயம் அவசியம் உள்ளதால், தோன்றா நிலைக்கு அழைத்து செல்லும் பயிற்சியே தலை சிறந்த பயிற்சி என்பது சத்தியமான உண்மை..

தோன்றா நிலையில் இருக்கும் மூலதார மூலக்கனலுக்கு அழைத்து செல்லாமல், தோன்றும் நிலையில் உள்ள பொய்யான மூலாதாரத்தினை காட்டி காட்டி பயிலும் இன்றைய முறையற்ற வாசி பயிற்சி நாசம் மட்டுமே விளைவிக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்...

தோன்றா நிலை என்பது எண்ண ஆதிக்கங்கள் இல்லாத கனல் பொருந்திய சுத்த மனம் ஆகும்..

அம்மனம் ஒன்றே தோன்றா நிலையில் அகப்படும் கனலை ஈர்த்து வைக்கக் கூடிய ஆற்றல் உடையது..

எண்ண ஆதிக்கங்களால் ஆளப் படும் அசுத்த மனம் இருக்கின்ற ஆற்றலை எண்ணங்களில் விரையம் செய்து கொண்டிருக்கும்....

தோன்றா நிலையில் மட்டுமே இறைவனும், இறை ஆற்றலும், இருப்பதால் தோன்றா நிலையில் இருக்கும் அந்த தருணம் மட்டுமே இறைவன் வழிபாடு பயன் உள்ளதாக இருக்கும்..

மற்றபடி எண்ண ஆதிக்கங்களான வேண்டுதல்களை முன் வைத்து சிலைகளுக்கு முன் செய்யும் எந்த பிரார்தனையும் தகுந்த பலனை தராது..

எண்ணியவாறு எண்ணிய வண்ணம் எதுவும் உடனே நடைபெற தோன்றா நிலையில் நின்றால் மட்டுமே சாத்தியமாகும்...

தோன்றா நிலையில் முன் வைக்கப் படும் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப் படும்.. காரணம் அங்கே மட்டுமே பேரண்ட பேராற்றலின் கனல் என்ற கடவுளின் கருணை சுலபமாக அகப்படும்...

ஆகவே முக்தியின் முன் நின்ற நிலையான பேரருளின் ஆசியை பெற வாசியோகத்தில் தோன்றா நிலை அனுபவப் பட வேண்டும் என வற்புறுத்தப் படுகிறது..

தோன்றா நிலையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்ட அந்த தருணம் முதல் மனிதனுக்கு வாழ்வு உயர நல்ல தருணம் தொடங்கி விட்டது என்பது சத்தியமான உண்மை...

ஆகவே தான் பேரருள் பொருந்திய தோன்றா நிலையை முன்வைத்து விளக்கத் தவறிய எந்த ஒரு மதமும் யோகமும் மன்னிக்க முடியாத ஒழுங்கின்மையை செய்கிறது என சொல்லப் படுகிறது..

எல்லாமே ஒழுங்கின்மையாக உள்ள நிலையில் சுவாச ஒழுங்கு என்ற மிக அற்புத மிக மிக சாதாரணமான பயிற்சியை, செய்ய மனித குலத்திற்கு மிக மிக கடினமாக உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.