உண்மையிலேயே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் அக்கறை இருக்குமென்றால் தமிழக அரசே முன்வந்து இந்தத் தீர்மானத்தை இயற்றிடச் செய்து தனது பிரதிநிதிகள் மூலம் அதனை மத்திய அரசிடம் சேர்க்க வேண்டும்...
மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு இவ்விதம் எச்சரிக்கை மணியை அடிக்க தமிழக அரசும் மக்களும் தயாராக வேண்டும் என அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் இன்று 28.04.2018 விடுத்துள்ள அறிக்கையில் ...
காவிரி பிரச்சனையில் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்ற மீளாய்வுத் தீர்ப்பு என எந்தத் தீர்ப்பையுமே நிறைவேற்றவில்லை.
காரணம் அதனை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசே இதில் கர்நாடகத்துக்கு ஆதரவாகவும் தமிழகத்துக்கு எதிராகவும் செய்வது தான்.
கடைசியாக ஆறு வார கெடு கொடுத்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. மேலும் தற்போது மீண்டும் இரண்டு வார காலம் அவகாசம் கேட்டு கோரிக்கைவிடுத்துள்ளது மத்திய அரசு இது தமிழகத்திற்கு செய்கிற மாபெரும் துரோகம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தை முடக்கி போராட்டம் நடத்தினர் அதிமுக எம்பிக்கள்.
முதல்வர், துணை முதல்வர் உட்பட தமிழக அமைச்சரவை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள், அமைப்புகள் என தமிழகமே இன்றுவரை போராட்டக் களத்திலேயே உள்ளது.
ஆனால் ஸ்கீம் என்ற வார்த்தையை திட்டமிட்டே உருவாக்கி வைத்துக் கொண்டு, அரசமைப்புச் சட்டத்துக்கும் நீதித்துறைக்குமே புறம்பாகவே நடந்து வருகிறது மத்திய அரசு . மோடி இன்றைய நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பார் என்று சொல்வதற்கில்லை.
இப்போது கர்நாடகத் தேர்தலை வைத்து தான் இப்படி நடந்துகொள்கிறார் என்று சொல்வதாயிருந்தாலும், அடுத்து நாடாளுமன்றத் தேர்தலும் வர இருக்கிறதே, அதற்கு என்ன சொல்வது?
ஆக, மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா என்ற கேள்விகளுக்கு விடை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
எனவே நாம் போராடித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. ஆனால் வேறு வழிமுறைகளிலும் நாம் போராட்டத்தை முன்னெக்க வேண்டும்.
தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலிருந்தும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும் மேலும் டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்திக் குரல் எழ வேண்டும்.
ஓங்கி ஒலிக்கும் அந்தக் குரல் டெல்லி செங்கோட்டையை எட்ட வேண்டும்.
அந்தக் குரல் கண்டனக் குரலாக, குறிப்பாக மோடி அரசை எச்சரிக்கும் குரலாக இருக்க வேண்டும்.
மே 1ந் தேதி கூடும் கிராம சபைக் கூட்டத்தில் உள்ளாட்சி அதிகாரிகளிடம் நாம் கோரும் ஒற்றைக் கோரிக்கையாக காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்பதையே வலியுறுத்த வேண்டும்.
அனைத்து கிராம சபைகளிலும் இந்த ஒற்றைத் தீர்மானத்தினை ஒட்டுமொத்த தமிழகமும் ஒருங்கிணைந்து நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.
தமிழக அரசே முன்வந்து இந்தத் தீர்மானத்தை இயற்றிடச் செய்து தனது பிரதிநிதிகள் மூலம் அதனை மத்திய அரசிடம் சேர்க்க ஆவன செய்ய வேண்டும்.
மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு இவ்விதம் எச்சரிக்கை மணியை அடிக்க தமிழக அரசும் மக்களும் தயாராக வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.