29/04/2018

சிகிச்சைக்கு சென்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் கைது...


சென்னையில் சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் அத்துமீறி நடந்து  பாலியல் தொல்லை செய்ததோடு, அவற்றை செல்போனில் படம்பிடித்து வைத்திருந்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்த போது, நெஞ்சுவலி ஏற்பட்டதால், சிகிச்சைக்காக நாட்டுசுப்பராயன் வீதியில் உள்ள ஆர்.எம்.கிளினிக்குக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணிடம் பரிசோதனை என்று கூறி மருத்துவர் சிவகுருநாதன் அத்துமீறியுள்ளார்.

மேலும் பெண்ணின் ஆடைகளை களையச் செய்து, தனது செல்போனில் மருத்துவர் சிவகுருநாதன் படம்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த பெண் மிரட்சியுடன் வெளியே வந்த போது, சிகிச்சைக்காக காத்திருந்த உமாபதி என்பவர் என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். அப்போது மருத்துவர் சிவகுருநாதன், பரிசோதனை என்ற பெயரில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறியுள்ளார்.

இதனை அறிந்து சுதாரித்துக் கொண்ட மருத்துவர், செல்போனில் பதிவு வீடியோவை அழித்து விட்டு மெமரி கார்டையும் எடுத்து உடைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணின் கணவர் அளித்த புகாரின்பேரில், மயிலாப்பூர் போலீசார் மருத்துவர் சிவகுருநாதனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவரிடம் மற்றொரு செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் சிகிச்சைக்கு வந்த பெண்களின் ஆடைகளை களைந்து பரிசோதிக்கும் காட்சிகள் இருந்தன.

இவற்றின்பேரில், மருத்துவர் சிவகுருநாதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். பெண்களிடம் அத்துமீறியது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.