1978 ம் ஆண்டு ஏப்ரல் 9 ல் மின்கட்டண குறைப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 6 விவசாயிகளின் 40 ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்றது.
எப்போதும் போல சில விவசாய சங்க தலைவர்களும் நன்றியுள்ள சில விவசாயிகள் மட்டுமே வருவார்கள் என நினைத்து அமைதியாக இருந்த வேடசந்தூர் தியாகிகள் மண்ணில் மாலை 5 மணிக்கு ஒரு பிரளயம் ஏற்பட்டதுபோல ஆயிரக்கணக்கான விவசாயிகளும் இளைஞர்களும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் திரண்டு வந்து நினைவிடத்தில் வீரமுழக்கமிட்டு புகழஞ்சலி செலுத்தி உழவர் திடல் நிறைந்த மாபெரும் பொதுகூட்டம் நடைபெற்றது.
தியாகி திரு வே.நாச்சிமுத்துகவுண்டர் புதல்வர் நா.முருகேசன் பேசுகையில் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு பிறகு இத்தனை விவசாயிகள் ஒன்றுதிரண்டு நினைவஞ்சலி செலுத்த வந்துள்ளதாகவும் உழவர் இயக்கங்களுக்கு இளைஞர்கள் வருதில்லை என்ற கூற்றை பொய்யாக்கி பெருந்திரளான இளைஞர்களை பச்சைத்துண்டோடு திரட்டிய "ஏர்முனை இளைஞர் அணி" தான் எதிர்காலத்தில் உழவர்களின் ஒரே நம்பிக்கை என உணர்ச்சிவயபட்டு பேசினார்.
கடந்த 40 ஆண்டுகளாக நினைவஞ்சலி நிகழ்வை ஒருங்கிணைக்கும் தமிழக விவசாயிகள் முன்னேற்ற சங்க துணைத்தலைவர் திரு குணசேகரன் பேசும்போது இதுபோல ஆயிரக்கணக்கான விவசாயிகள் வருவார்கள் என தாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனவும் NSP என்ற உழவர்களின் போராளி மறைந்தாலும் அவரால் உருவாக்கபட்ட "கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்" தியாகிகளுக்கு நன்றி செலுத்த பெருந்திரளாக பங்கேற்றது மிகுந்த மனநிறைவு கொடுப்பதாக கூறினார்.
உழவர் இயக்க ஏர்கொடியை திருப்பூர் மாவட்டத்தில் புத்தரச்சல், மேட்டுக்கடை, குண்டடம், தாராபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அலுவலகம் திறந்து ஏர்கொடியேற்றி காலை முதல் பயணபட்டு வந்தாலும் ஏர்முனை இளைஞர்களும் சங்கத்தினரும் சற்றும் களைப்பின்றி பொதுகூட்டத்தில் பங்கேற்றனர்.
கட்டணமில்லா மின்சார சலுகையை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது பற்றியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு துரோகம் செய்வது பற்றியும் ,ஆற்று மணலை விற்கும் மாநில அரசை கண்டித்தும்,தொடர்ந்து தமிழகத்திற்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டம் செய்ய வேண்டும் எனவும், உழவர்கள் வாழ்வாதாரம் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டும் ஏர்முனை பொறுப்பாளர்களும் சங்க தலைவர்களும் விரிவாக பேசினார்கள்.
1970 -80 களில் எழுச்சியோடு உழவர் பெருந்தலைவர் சி.நராயணசாமிநாயுடு தலைமையில் நடந்த உழவர் போராட்டத்தை போல இனி ஒரு போராட்டத்தை எதிர்காலத்தில் கட்டியமைக்கும் வல்லமை "ஏர்முனை இளைஞர் அணியால்" மட்டுமே சாத்தியமாகும் என உழவர் இயக்க பெரியவர்கள் பேசியது விரைவில் தொடங்கவேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.