உணவுக்காய் கடலில் மீன் பிடிக்க ஆரம்பித்த தமிழ் மக்கள் கடற்கலங்களின் பயன்பாட்டை அறிந்து கொண்டார்கள். அத்தோடு அவற்றினைக் கட்டவும் சுயமாகவே கற்றுக் கொண்டார்கள். அவர்களினால் அமைக்கப்பட்ட மாபெரும் கடற்கலங்கள் நாவாய்கள் என அழைக்கப்பட்டதாக பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
கடற்கலங்களில் கடலை அளக்க முயன்ற தமிழன் கடலை முழுதாய்க் கற்றுக் கொண்டான். இதனால்க் காற்று வீசும் திசைகளில் கடற்டகலங்களை செலுத்தவும் இரவினில் திசை மாறாது பயணிக்கவும் கற்றுக்கொண்டான். இதற்கு உதவியாக கலங்கரை விளக்குகளையும் அமைத்துக் கொண்டான்.
கடலில் பிரயாணம் செய்யத் தொடக்கி கடலில் அனுபவம் பெற்றுக்கொண்ட தமிழன் தன் கடற் பிரயாண எல்லைகளை அதிகரித்து ஏனைய நாடுகளுக்கும் செல்லத் தொடங்கினான்.இவை வர்த்தகம், ஆக்கிரமிப்பு, படையுதவி எனப் பல வடிவங்களில் விரிந்து நின்றது. ஆரம்ப காலங்களில் ஈழத் தமிழன் தன் தொப்புள் கோடி உறவான தமிழகத்துடனேயே பெரும்பாலும் கடல்வழியே ஆனா தொடர்புகளைக் கொண்டிருந்தான்.
ஆரம்பத்தில் மேற்கு நாடுகளுடனான வணிகத்தில் ஈழத் தமிழனும், தமிழகத்தவர்களும் மட்டுமே தொடர்புபட்டிருந்தார்கள். இவற்றுக்கு வசதியாக சேர நாட்டின் பெருந் துறைமுகம் புகாரும், பாண்டிய நாட்டின் முத்துக்குப் பெயர்போன மிகச்சிறந்த துறைமுகம் கொற்கையும் விளங்கின. இவற்றுக்கு நிகராக ஈழத்தின் மேற்கு கரையில் கற்பிட்டி முதல் யாழ்ப்பாணம் வரையான தமிழனின் துறைமுகங்கள் செயற்பட்டு வந்தன.
தூர கிழக்கு நாடுகளான சீனா, யா(ஜா)வா, அரேபியா, எகிப்து, உரோமாபுரி என்பவற்றுடன் ஆரம்ப வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்தியவர்கள் தமிழர்களே. பின் காலங்களில் சீனர்கள் மேலைத்தேய வணிகத்தில் பங்கு கொண்ட காலத்தில் இலங்கையின் வடகரையில் இருந்த துறைமுகங்கள் மேலும் முக்கியத்துவம் பெற்றன. அவற்றுள் மாதகல், மயிலிட்டி, காங்கேசன்துறை,தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, சாட்டி, பெரியதுறை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை, கச்சாய், கொழும்புத்துறை, பண்ணை, மணித்தலை, நாகர்கோவில், தாளையடி, வெற்றிலைக்கேணி என்பன குறிப்பிடத்தக்கனவாகும்.
7ஆம் நூற்றாண்டளவில் மாந்தையூடான வர்த்தகம் தடைப்பட்டு ஊர்காவற்துறைமுகம் மேற்கிலும், கிழக்கிலும் இருந்து வந்த கப்பல்களுக்கு பிரதான துறைமுகம் ஆனது. இதுவே போர்த்துக்கேயர் வரும் வரை ஐரோப்பிய முகமதிய வர்த்தகர்களால் பயன்படுத்தப் பட்டது.
இலங்கை சுகந்திரம் அடைந்து சிங்கள அரசு ஆட்சிக்கு வரும் வரை ஈழத்தின் வல்வெட்டித்துறையும், ஊர்காவற்துறையும் கடற்கலங்களை உருவாக்கும் இடங்களாகவும்; பழுது பார்க்கும் இடங்களாகவும் பிரசித்திபெற்றிருந்தன.
1938 இல் அமெரிக்காவின் மசாசுசெட் மாநிலத்தைச் சேர்ந்தவரால் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட அன்னபூரணி என்னும் கப்பல் விரும்பி வாங்கப்பட்டது.இது அக்காலத்தில் தமிழன் கப்பல் கட்டும் தொழிலில் கொண்டிருந்த திறமைக்குச் சான்று பகிர்கின்றது.
1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்து பாராளுமன்ற ஆட்சி ஏற்பட்ட போது தமிழனின் கடல் மார்க்க அறிவையும், திறமையையும், அவனின் கடல் வணிக வளர்ச்சியையும் சிதைக்கும் நோக்குடன் வட இலங்கைத் துறைமுகங்களுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான கடற் போக்குவரத்துப் பாதை சட்டரீதியாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. இதனால் கொழும்புத் துறைமுகம் முக்கியத்துவம் பெற்றது. இதன் மூலம் தமிழனின் கடல் சார் உரிமைகள் பறிக்கப்பட்டு சிங்களவர்களிடம் அரச ஆதரவுடன் ஒப்படைக்கப்பட்டது.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். யுத்தங்கள் ஓய்ந்துவிட்ட நிலையில் வடக்கில் இயற்கையாக அமைந்த எண்ணற்ற துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதனைத் தவிர்த்துவிட்டு சிங்களவர்களாலேயே மிகப் பெரிய நீச்சல் தடாகம் என நகையாடப்படும் ஓர் துறைமுகத்தை செயற்கையாக நிர்மாணிக்க வேண்டியதன் அவசியம் தான் என்ன?
மேலும் கடற்கலன்களை கட்டவும், ஓட்டவும் உலகிற்கே கற்றுத் தந்த தமிழன் இன்று கப்பல்களில் என்ன செய்து கொண்டிருக்கிறான்? இதற்குக் காரணம் தான் என்ன?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.