100-வது நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அமைதியான முறையில் ஊர்வலம் சென்று முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானித்தனர்.
100 நாட்களாக போராட்டம் நடத்தும் மக்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தவில்லை. முதல் மந்திரியும் மற்ற சம்மந்தப்பட்ட மந்திரிகளும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை.
இன்றைய ஊர்வலத்திற்கு அனுமதி தரவில்லை. குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் ஊர்வலத்திற்கும் கூட்டம் கூடுவதற்கும், அரசு தடை விதித்தது. நள்ளிரவில் வீடு புகுந்து பல போராட்டக்காரர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்கள்.
இப்படியெல்லாம் போராட்டத்தை முடக்க அரசு நடவடிக்கை எடுத்ததால், போராட்டம் இன்று மேலும் தீவிரமடைந்தது. அதற்கு அரசே காரணம்.
அமைதியான முறையில் ஊர்வலத்தையும் முற்றுகை போராட்டத்தையும் நடத்த அரசு அனுமதித்து இருந்தால் எந்த அசம்பாவிதமும் நடந்திருக்காது.
ஊர்வலத்தை காவல் துறை தடுத்தது. லட்சக்கணக்கில் ஊர்வலம் சென்ற மக்கள் காவல் துறை தடுப்பதை மீறி ஊர்வலம் செல்ல முயன்றனர். ஊர்வலம் சென்ற மக்கள் வெள்ளத்தின் மேல் கண்ணீர் புகை குண்டை வீசியும், தடி அடி நடத்தியும் கூட்டத்தை கலைக்கப் பார்த்தது காவல் துறை. லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம். கண்ணீர் புகையும் தடி அடியும் கண்டு அஞ்சாமல் ஊர்வலம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி முன்னேறியது. உடனே காவல் துறை அமைதியான மக்கள் கூட்டத்தின் மேல் துப்பாக்கி சூடு நடத்தியது. துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். பலர் படுகாயமுற்றனர். இறந்தோர் எண்ணிக்கை மிக கூடுதலாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்காக தமிழக அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும். 144 தடை போடாமல் ஊர்வலத்தையும் முற்றுகை போராட்டத்தையும் அரசு அனுமதித்து இருந்தால், மக்களின் உயிர் பறிக்கப் பட்டிருக்காது; பலர் படுகாயத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.
தமிழக அரசு ஸ்டெர்லைட் கார்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு பல அப்பாவி மக்களின் உயிரை குடித்துவிட்டது; பலரை படுகாயப்படுத்திவிட்டது.
உடனே ஸ்டெர்லைட் ஆலையை மத்திய அரசும் மாநில அரசும் நிரந்தரமாக மூட வேண்டும்; ஆலையின் விரிவாக்க பணிகள் நிறுத்தப் படவேண்டும். உயிர் இழந்த மக்களுக்கு செய்யும் முதல் நீதி இது தான்.
அடுத்து, மக்களின் உயிரை பறித்ததற்கும், படுகாயப்படுத்தியதற்கும் இந்த அரசு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
துப்பாக்கி சூடு நடத்தி பலரை கொன்று, பலரை படுகாயப்படுத்திய காவல் துறையினரை உடனடியாக சஸ்பெண்டு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...
- judge Hariparanthaman
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.