17/05/2018

முதுமையை தடுக்கும் தண்ணீர்.. தண்ணியடிப்பவர்களுக்கு இது பொருந்தாது...


உலகிலேயே மிகவும் சிறப்பான ஒரு அழகு பொருள் என்று சொன்னால், அது தண்ணீர் தான். தண்ணீர் குடிப்பதால், உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் தண்ணீரைக் குடிப்பதால், உடலில் உள்ள ஒவ்வொரு கலங்களும் நன்கு ஆரோக்கியமாக செயல்படும்.

இத்தகைய தண்ணீரை தினமும் தவறாமல் குடித்து வந்தால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம். ஒரு தினமும் போதிய அளவில் தண்ணீர் பருகினால், ஆரோக்கியமான உடல், பொலிவான சருமம் மற்றும் பட்டுப்போன்ற கூந்தலைப் பெற முடியும்.

ஏனெனில் தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால், நச்சுக்களால் உடல் மட்டுமின்றி, சருமம் மற்றும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கிறது. சரி, இப்போது அந்த தண்ணீரினால் கிடைக்கும் சில அழகு நன்மைகளைப் பற்றி பார்ப்போமா..

நல்ல மாய்ஸ்சுரைசர்...

தினமும் தண்ணீரை போதுமான அளவில் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் சருமமும் வறட்சியின்றி, மென்மையாக இருக்கும்.

சரும சுருக்கத்தை...

தடுக்கும் தண்ணீர் குடித்தால், இளமையிலேயே சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்கலாம்.

பொலிவான கண்கள்...

நீர்ச்சத்து உடலில் குறைவாக இருந்தால், கண்கள் பொலிவிழந்து காணப்படும். எனவே தண்ணீரை தினமும் போதிய அளவில் குடித்து வந்தால், நீர்ச்சத்து அதிகரித்து கண்கள் பளிச்சென்று காணப்படும். மேலும் தண்ணீரைக் கொண்டு பொலிவிழந்த கண்களை கழுவினாலும், கண்களில் உள்ள நச்சுக்கள் வெளியேறி கண்கள் அழகாக இருக்கும்.

நல்ல க்ளின்சிங்..

முகத்தை தண்ணீரால் கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.

பருக்களைக் குறைக்கும்...

வெதுவெதுப்பான நீரில் ஒரு துணியை நனைத்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்துளைகளில் தங்கியிருக்கும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, பிம்பிள் வருவதைத் தடுக்கும். குறிப்பாக இதனை தினமும் செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

பொலிவான சருமம்...

தண்ணீர் பிணி நீக்கல் (therapy) எடுக்கும் போது, வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தினால், இறுதியில் குளிர்ந்த நீரை ஒரு முறை பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் வெதுவெதுப்பான தண்ணீர் சருமத்துளைகளை திறக்கவும், குளிர்ந்த நீர் திறந்த சருமத்துளைகளை மூடவும் உதிவியாக இருக்கும். இதனால் தேவையற்ற மாசுக்கள் சருமத் துளைகளில் தங்குவதை தவிர்த்து, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளலாம்.

முதுமையை தடுக்கும்...

இளமையை தக்க வைக்க தண்ணீர் ஒரு சிறந்த மருந்து. ஏனெனில் இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை சீராக பராமரித்து, சுருக்கம், சரும வறட்சி போன்றவற்றை தடுத்து, எப்போதும் இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.

அழகான உதடுகள்...

உதடுகளின் அழகைக் கெடுப்பதே வறட்சி தான். ஆகவே அத்தகைய வறட்சியை போக்க, தண்ணீர் அதிகம் பருகினால், போதிய நீர்ச்சத்து கிடைத்து, உதடுகள் எப்போதும் அழகாக வெடிப்புக்களின்றி இருக்கும்.

மென்மையான சருமம்..

சரும வறட்சி ஏற்பட்டால், சருமம் கடினமாகி மென்மையிழந்து காணப்படும். எனவே தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், வறட்சி நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

எடை குறைய...

தண்ணீர் அதிகம் குடித்தால், சாப்பிடும் அளவு குறைந்து, செரிமான மண்டலம் சீராக இயங்கி, உடல் எடை குறைவிற்கு பெரிதும் துணையாக உள்ளது.

சரும தொற்றுகள்..

ச(ஷ)வரில் குளிக்கும் போது, சருமத்தில் தங்கியிருக்கும் நோய்த்தொற்றுகள் நீக்கப்படுவதோடு, சருமத் துளைகளில் தங்கியுள்ள நச்சுக்களும் வெளியேற்றப்பட்டு, உடலை நன்கு புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்கிறது.

உடல் முழுவதற்கும் நல்லது...

உடல் ஆரோக்கியத்தை சருமத்தை வைத்து சொல்லலாம். இத்தகைய சருமம் அழகாக இருக்க வேண்டுமெனில், தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.

உடல் வெப்பத்தை சீராக வைக்கும்...

தண்ணீரை தினமும் போதுமான அளவில் பருகினால், உடலின் வெப்பநிலையானது சீராக பராமரிக்கப்பட்டு, உடலை மற்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.

உடல் துர்நாற்றத்தைப் போக்கும்...

குடிக்கும் நீரின் அளவை அதிகரித்தால், உடல் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். எப்படியெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வாயிலாக வெளியேறுவதால், அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறுவதைத் தவிர்க்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.