07/05/2018

தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான்...


முக்கடலும் முத்தமிழும் மூவேந்தர் பரம்பரையும் கோட்டையிலே வில், புலி, மீன் கொடிகள் நாட்டி செந்தமிழ் தாய் சீரிமை திறம் விளங்க சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியனும் அவன் அமைத்த தமிழ் சங்கத்திலே எழுத்தாணி ஏந்தி தலைமைப்புலவனாய் தமிழாய்ந்த புலவர்களில் ஒருவர் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் ஆவார்.

அதன்கோட்டின் அமைவிடம்..

தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்கள் வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க இடம்தான் அதங்கோடு. இவ்விடம் குமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு பின்னர் விளவங்கோடு என மருவிய விளவங்கோடு தாலுக்காவில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளது.

அதன்கோட்டில் சூரியமுக்கு என்னும் இடமுண்டு. இவ்விடத்தின் அருகில் பக்றுளி ஆறு என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட குழித்துறை தாமிரபரணி ஆறு செல்கிறது. தொன்றுதொட்டே அதங்கோடு ஒரு ஆற்றங்கரை நாகரீகப் பகுதியாக இருந்து வந்துள்ளது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.

அதங்கோடு சூரியமுக்கில் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்களால் நடத்தப்பட்டு வந்த தமிழ் சங்கம் தண்ணீர் பெருக்கால் அழிக்கப்பட்ட காரணத்தினால் அவரும் அவரோடு சார்ந்த தமிழ்ப்புலவர்களும் பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த கபாடபுரத்தில் நடந்த தமிழ் சங்கத்தில் இணைந்தார்கள். கபாடபுர தமிழ்ச்சங்கத்தை கும்பவம்பக் குறுமுனி என்று அழைக்கப்பட்ட அகத்தியர் தலைமைதாங்கி நடத்தி வந்தார். அவருடன் கீழ்க்கண்ட பன்னிரு பெரும் சீடர்களாயினர்.

தொல்காப்பியர்
அதங்கோட்டாசான்
துராளிங்கன்
செம்புத்செய்
வையாபிகன்
வாய்ப்பியன்
பணம்பாரன்
கலாரம்பன்
அவினயன்
காக்கை பாடினியன்
நட்டதன்
வாமணன்

இவர்களை அகத்தியரின் பன்னிருமாணாக்கர் என அழைக்கிறோம்.'

கபாடபுரத்தில் அகத்தியர் தலைமையில் நடந்து வந்த தமிழ் சங்கத்திற்கு, முதல் தமிழ் இலக்கண நூலாக இருந்தது அகத்தியம் என்னும் இலக்கண நூல் ஆகும்.

அகத்தியம் கால வெள்ளத்தால் அழிந்த காரணத்தால் அதற்கு வழி நூலக ஒரு இலக்கண நூலை இயற்ற தனது தலை மாணாக்கரான தொல்காப்பியரை அழைத்துச் சொன்னார் அகத்தியர்.

இந்நிலையில் தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இயற்றினார். மதுரை தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப்பட்டது என்பது வரலாறு.

தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில் எழுத்து, சொல்,vபொருள் ஆகிய மூன்று அதிகாரங்களிலும் எக்குற்றமும் இல்லை என அறுதி இட்டு கூறினார் அதங்கோட்டாசான்.

பணம்பாரரின் கருத்து..

தொல்கபியப் பாயிரத்திற்கு உரை எழுதிய பணம்பாரன் என்னும் தமிழ்ப் புலவர் தனது சிறப்புப் பாயிரத்தில்...

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அரங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதன்கோட்டாசாற்கு அகில் தபத்தெரிந்து.

இதன் விளக்கம் யாதெனில்..

மாற்றானது நிலத்தை தன் கீழ் வாழ்வார்க்கு கொண்டு கொடுக்கும் மன்னன் மாகீர்த்தியது அவையின் கண் நான்கு மறைகளையும் அதாவது ரிக், யஜூர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களையும் முற்றும் உணர்ந்த அதங்கோடு என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என விரிவாக எழுதிஉள்ளார்.

இளம்பூரணரின் கருத்து...

தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரைப்பாயிரம் எழுதிய இளம்பூரணம் என்னும் தமிழ்ப்புலவர் நான்கு மறைகளையும் முற்றும் உணர்ந்த அதங்கோடு என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்று எழுதி உள்ளார்.

அடைமொழி இன்றி தனிமொழியாக அதங்கோடு என்கிற ஊர் திகழ்கிறது.அதனால் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்தை அரங்கேற்றியவர் அதன்கோட்டில் பிறந்து தமிழ் ஆய்ந்த இடம் அதங்கோடு என உறுதி செய்யப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.