22/05/2018

ஆவிகள் உலகம்...


ஆவிகள் என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலோருக்கு ஒருவித அச்சம் ஏற்படும். சிலர் அதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை எனக் கூறுவர். ஆனால் இறந்த தங்கள் முன்னொர்களை குல தெய்வமாக வணங்குவர். இல்லாவிட்டால் இறந்தவர்களது நினைவு நாளில் சிலைகளுக்கு மாலையிட்டு, அவர்கள் நினைவாக அன்னதானங்கள் செய்து வணங்குவர்.

இதுவே ‘நீத்தார் கடன்’ என தமிழில் கூறப்படுகின்றது. கடவுள் இல்லை, ஆவிகள் இல்லை என்று கூறுபவர்கள், சிலைகளுக்கு மாலையிட்டு வணங்குவதும், நினைவு நாள் கொண்டாடுவதும் உருவ வழிபாட்டை ஒத்ததே! வழிபாட்டின் அடிப்படையே நினைவைப் போற்றுதலும், நன்றி உணர்வுடன் இருத்தலுமே! இதையே பக்திமான்களும் செய்கின்றனர். நாத்திகர்களும் செய்து வருகின்றனர். ’ஆவிகள்’ என்பது பற்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலிருந்து சில தகவல்களை இங்கே பார்ப்போம்.

ஆவிகள் - மனிதன் இறந்த பின் அவன் உயிரானது அடையும் நிலையே ‘ஆவிநிலை’ எனப்படுகிறது. இந்த ஆவி நிலையில் அவனுக்கு புலன்களின் உதவி தேவைப்படுவதில்லை. காலம், இடம், நேரம் என அனைத்தையும் கடந்த இந்த ஆவிகளால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்ற முடியும். தங்களது சக்திகளுக்கு ஏற்ப இவ்வகை ஆவிகள் பிறர் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். இவ்வகை ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. பெரும்பாலும் ஒத்த கருத்துடைய ஆவிகள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கின்றன. ஆன்மாவின் பரிபக்குவ வளர்ச்சியில் இந்த ஆவி நிலை அதனை மேலும் வளர்க்க உதவுகிறது.

ஆவிகள் உலகம் - கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த ஆவிகள் தங்கள் பக்குவத்திற்கேற்பவும், ஆன்ம வளர்ச்சி மற்றும் நற்கருமங்களுக்கேற்பவும் பல்வேறு நிலைகளில் வசிக்கின்றன. இவற்றை பொதுவாக பாவ லோக ஆவிகள், புண்ணிய லோக ஆவிகள், மத்திம உலக ஆவிகள் என மூன்று வகையாக ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர சுவர்க்கம், நரகம், இந்திரலோகம், வருண லோகம், குபேரலோகம், கோலோகம், யமலோகம் என ஏழு வகை உலகங்கள் உள்ளதாக புராணங்கள் குறிக்கின்றன.

அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், அந்த ஆன்மாவின் தவ ஆற்றலைப் (பரி பக்குவம்) பொறுத்தும் மனிதன் இறந்த பிறகு இவ்வகை உலகங்களை அடைகிறான். இந்த ஆவிகள் உலகம் கொடிய பாவம் செய்தவர்களுக்கு மிகவும் துன்பத்தைத் தரும் ஒன்றாக இருக்கும். பேராசை கொண்ட அவர்கள், உயிருடன் இருந்த காலத்தில் தங்கள் உடலாகிய காரண சரீரம் மூலம் பல்வேறு தீச்செயல்களைச் செய்திருப்பர். பிறரைத் துன்புறுத்தி பல இன்பங்களை அனுபவித்திருப்பர். தற்போது உடலாகிய காரண சரீரம் இல்லாததால் அவர்களால் அது போன்ற இன்பங்களை நுகர முடியாது. ஆகவே அவர்கள் இறந்த பிறகும் அதே நினைவுடன் இருப்பர். தங்களைப் போன்ற தீய ஆவிகளுடன் கூட்டாக வசிப்பர். அவற்றில் சில ஆன்மாக்கள் தாங்கள் இறந்து விட்டோம் என்ற உண்மையைக் கூட உணராது இருப்பர். சில ஆன்மாக்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பலவீனமான மனம் கொண்டவரது உடலைப் பயன்படுத்திக் கொள்வர். அவர்களைப் பீடித்து தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வர். இதனையே பேய் பிடித்தல் என்று கூறுகிறோம்.

ஒருவர் இறந்த பின்பு, உயிருடன் இருக்கும் போது அவர் யாரிடமெல்லாம் அதிக பற்று வைத்திருக்கிறாரோ அவர்களின் கண்களுக்கு அவர் ஆவியாகத் தென்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் ஆவிகளைப் பார்த்து பயம் கொள்கின்றவர்களும் இருக்கின்றனர். அத்தகைய எண்ணம் கொண்டவர்களின் கண்களுக்கு ஆவிகள் தென்படும் பொழுது அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றார். சிலர் உளவியல்ரீதியாக பாதிப்படைகின்றார். சிலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர். சிலருக்கு தீய ஆவிகளின் பீடித்தல் ஏற்படுகிறது. ஒரு சிலர் அதிர்ச்சியால் மரணமடைந்தும் விடுகின்றனர். இதையே மக்களில் சிலர் பேய் அடித்து விட்டதென்று கூறுவர்.

நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்களான, அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது. இதனையே ‘பித்ரு தோஷம்’ என்றும், ’பித்ரு சாபம்’ என்றும் கூறுகின்றனர். இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் போன்ற நற்கருமங்களைச் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும்.

- தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.