30/05/2018

எங்களை எப்படி சுட்டாங்கன்னு தெரியுமா? அடுக்கடுக்கான கேள்விகளுக்கு மௌனமாக இருந்த ஓ.பி.எஸ்...


ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாநகரமே தன்னெழுச்சியாக போராடியது. போலீசாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானார்கள். 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவர்களை பார்வையிடுவதற்காகவும், ஆறுதல் கூறுவதற்காகவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மே 28ஆம் தேதி வருவதாக இருந்தது. அவர் வருகைக்கு ஏற்ப முன்னதாக மே 27 முதல் மாவட்டத்தில் விதித்திருந்த 144 தடை உத்தரவை, ஆட்சியர் விலக்கிக்கொண்டார்.

இன்று காலை தூத்துக்குடி சென்ற ஓ.பன்னீர்செல்வம் மாவட்ட அலுவலகம் சென்றார். அங்கு சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி விஜயகுமார் யாதவ், ஐஜி சைலேஷ்குமார் யாதவ், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நடந்த விவரங்களை கேட்டு அறிந்த ஓ.பன்னீர்செல்வம் அதன் பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சேதடைந்த வாகனங்களை பார்வையிட்டர். அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு வந்தார்

துணை முதல்வர் வருவதால் ஏதேனும் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக மருத்துவமனையையை சுற்றிலும், மருத்துவமனைக்குள்ளும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. காலை நேரத்தில் அவர் வந்ததால் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. நோயாளிகளின் உறவினர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சிகிச்சைப் பெற்று வருபவர்களை பார்த்துக்கொண்டே வந்த ஓ.பன்னீர்செல்வம் அனைத்துக் கல்லூரி மாணவர் அமைப்பின் தலைவர் சந்தோஷ் ராஜ் என்பவரையும் பார்த்தார்

அப்போது சந்தோஷ் ராஜ், மாநில அரசான உங்களுக்கு அதிகாரம் இருந்தும் ஏன் இந்த ஆலையை மூடவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் மௌனமாக இருந்தார். பின்னர், வழக்கு இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற பன்னீர்செல்வத்திடம், எங்கள் உயிருக்கு உத்திரவாதமில்லை, போலீசார் என்னை சுற்றி நின்றுகொண்டு தாக்கினர். எங்களை சுட சொன்னது யார்? உங்களுக்கு தெரியும்... சொல்லுங்கள்... என்றார். தம்பி நான் சொல்லக்கூடிய நிலையில் இல்லை, சொல்லக் கூடாத இடத்தில் நிற்கிறேன். உடம்ப பார்த்துக்கொள்ளுங்கள். விசாரணை கமிஷன் அமைத்திருக்கிறோம். நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு மற்றவர்களை பார்க்க புறப்பட்டார்.

அனைவரையும் பார்வையிட்ட பின்னர், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று சந்தோஷ் ராஜீடம் வந்த ஓ.பன்னீர்செல்வம், தம்பி நீங்க சொன்னது அனைத்தும் என் நெஞ்சில இருக்கு. நான் இது சம்மந்தமாக பேசி நடவடிக்கை எடுக்கிறேன் என கூறிவிட்டு புறப்பட்டார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.