21/06/2018

கொஞ்சம் உண்மை.... நிறைய பொய்.. கொஞ்சம் மிச்சம்.... நிறைய செலவு.. கொஞ்சம் நன்மை.... நிறைய பாதிப்பு - அத்தியாயம் -1...


சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கான எட்டு வழி பசுமை சாலை அமைக்கப்பட்டு விட்டால்  தமிழகம் சொர்க்கபுரி ஆகி விடும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். இந்த திட்டத்தால் ஏராளமான மக்கள் பயனடைவார்கள் என்று கூறியிருக்கிறார். உண்மையில் இந்தத் திட்டத்தால்  ஆயிரக்கணக்கான கோடிகளை கையூட்டாக பெறவிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும், அந்த சாலையில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கும் நிறுவனத்தையும் தவிர தமிழகத்தில் வேறு யாருக்கும், எந்த நன்மையும் பயனும் ஏற்படப் போவதில்லை என்பது தான் உண்மை ஆகும்.

பொய்யான புள்ளி விவரங்கள்...

பசுமைச்சாலை தொடர்பாக ஏராளமான புள்ளிவிவரங்களை  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். அவற்றில் பசுமைச்சாலை 8 வழித்தடங்களைக் கொண்டிருக்கும் என்பது மட்டுமே உண்மை. மற்ற தகவல்கள் அனைத்தும் வடிகட்டப்பட்ட பொய் ஆகும்.

முதலமைச்சர் சொன்ன முதல் பொய்:
‘‘ சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கான  இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளையும் அகலப்படுத்தினால், ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களும் 15 மீட்டர், அதாவது 30 மீட்டர் அகலத்திற்கு கையகப்படுத்த வேண்டும். இதற்கென மொத்தம் சுமார் 2,200 ஹெக்டேர் அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த பசுமை விரைவுச்சாலை அமைக்க சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும். இதில் 400 ஹெக்டேர் நிலம் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகும். இப்புதிய சாலையினால், கிட்டத்தட்ட 300 ஹெக்டேர் நிலம் குறைவாக கையகப்படுத்தினால் போதுமானது’’ என்று கடந்த 11&ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் கூறினார்.

இது எந்த வகையில் தவறான புள்ளிவிவரம் தெரியுமா?

 பசுமைச் சாலை திட்டத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கையின்படி பசுமை சாலை 70 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். முதலமைச்சர்  கூறியவாறு ஏற்கனவே உள்ள சாலைகளை மேம்படுத்த 30 அடி அகலத்திற்கு நிலம் எடுக்க மொத்தம் 2200 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த வேண்டுமாம். ஆனால், 70 மீட்டர் அகலத்திற்கு நிலம் எடுக்க 1900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தினால் போதுமானதாம். இந்த விளக்கத்தை மூன்றாம் வகுப்பு மாணவன் கூட ஏற்க மாட்டான்.

பறிக்கப்படும் நிலங்களை பாதியாகக் காட்டுவதா?

விரிவான திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள புள்ளி விவரங்களின்படி 2791 ஹெக்டேர், அதாவது 6,978 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டுமாம். அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 1229 ஹெக்டேர், அதாவது 3072 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டுமாம்.

ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியோ ‘‘1900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தினால் போதுமானது. அதிலும் 400 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்கள் என்பதால் 1500 ஹெக்டேர் அதாவது   3750 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தினால் போதுமானது’’ என்று கூறுகிறார். திட்ட அறிக்கையில் கூறப்படும் 6978 ஏக்கருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறும் 3750 ஏக்கருக்கும் உள்ள இடைவெளியை பாருங்கள். பறிக்கப்படவுள்ள நிலங்களை பாதியாக குறைத்துக் காட்டி மக்களை ஏமாற்றத் துடிக்கிறார் எடப்பாடி.

பித்தலாட்டம்...

அடுத்ததாக ‘‘இச்சாலையின் மொத்த நீளமான 277.30 கிலோமீட்டரில், 9.955 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை மட்டுமே, செங்கல்பட்டு, ஆரணி, போளூர், செங்கம் மற்றும் அரூர் ஆகிய வனப்பகுதியில் செல்கிறது. அதாவது, கையகப்படுத்த தேவையான 1,900 ஹெக்டேரில், 49 ஹெக்டேர் மட்டுமே வன நிலத்திற்குள் அடங்கும்’’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஆனால், விரிவான திட்ட அறிக்கையிலோ 13.290 கி.மீ தொலைவுக்கு வனப்பகுதியில் பசுமை சாலை அமைக்கப்படவுள்ளது என்றும், இதற்காக 120 ஹெக்டேர், அதாவது 300 ஏக்கர் வன நிலம் கையகப் படுத்தப்பட வேண்டும் என்றும் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டில் யார் சொல்வது உண்மை. திட்ட அறிக்கை என்பது அங்கீகரிக்கப்பட்ட ஆவணம். அது பொய்யாக இருக்க வாய்ப்பில்லை.  அப்படியானால், எடப்பாடி பழனிச்சாமி சொல்வது தானே பொய்யாக இருக்க வேண்டும். இதிலிருந்தே புரிந்து கொள்ளுங்கள் முதலமைச்சர் பதவியில் இருப்பவரின் பித்தலாட்டத்தை...
 நாளை.... கொஞ்சம் மிச்சம்.... நிறைய செலவு..

- தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.