ஒரு தனியாரால் இவ்வளவு தொகையை சேவையாக செலவிட முடியாது. அதனாலேயே தனியார் மருத்துவ கல்லூரி கட்டணங்களும் மேனேஜ்மண்ட் கோட்டாவுக்கு கேட்கப்படும் தொகையும் கோடிக்கணக்கில் நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வளவு செலவு செய்து ஒருவர் மருத்துவம் படித்தால் அவராலும் அதை சேவையாக செய்ய முடியாது. முதலீடாகத்தான் செய்ய முடியும். பின் போட்ட பணத்துக்கு எத்தனை மடங்கு எடுக்க முடியும் என்றே யோசிக்க முடியும். இங்கேதான் பலவிதமான மருத்துவ வணிகம் மற்றும் கொள்ளை ஆரம்பிக்கிறது.
ஆனால் அரசு மருத்துவ கல்லூரிகளிலோ 5 வருடமும் சேர்த்து சில ஆயிரங்களில் படித்து முடித்துவிட முடிகிறது. இதில் படித்தவர்களால் மட்டுமே மருத்துவத்தை சேவையாக பார்க்க முடியும். ஒரு நல்ல சம்பளத்துடன் மனம் நிறைந்த வேலையாக மருத்துவத்தை பார்க்க முடியும்.
தற்போது சுமார் 40 தனியார் கல்லூரிகளும் 25 அரசு மருத்துவக் கல்லூரிகளும் தமிழகத்தில் உள்ளன.
ஒவ்வொரு வருடமும் 1,80,000 கோடி செலவுக்கணக்கு எழுதும் தமிழக அரசு ஏன் 500 கோடியில் மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கு இவ்வளவு யோசிக்க வேண்டும்?
உலக சுகாதார அமைப்பு குறைந்த பட்சம் பத்தாயிரம் பேருக்கு 10 மருத்துவர் இருக்க வேண்டும் என்கிறது. ஆனால் தமிழகத்திலோ 8 பேர்தான் இருக்கின்றனர். நாகப்பட்டினம் திருவண்ணாமலை போன்ற இடங்களில் பத்தாயிரம் பேருக்கு மூன்று மருத்துவர்கள் கூட இல்லாத அவலம்.
தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிகமாக இருப்பதன் விளைவு சென்னை போன்ற பணமுள்ள பிரதேசங்களில் மருத்துவர்கள் அதிக அளவில் 'சேவை' செய்கின்றனர். அதாவது பத்தாயிரம் பேருக்கு 18 பேர் என்ற விகிதத்தில்!
நீதியும் சமத்துவமும் நிலவும் மாநிலமாக நமது மாநிலம் திகழ வேண்டுமானால் அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிக அரசு மருத்துவமனைகள் துவங்கப்பட்டு அதில் அரசு மருத்துவர்கள் முழு நேரம் இருந்து முழுமையாக சேவை ஆற்ற வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளை மேலும் ஊக்கப்படுத்துவது மருத்துவத்தை வியாபாரமாக்கி பெரிய அநீதியை மக்களுக்கு ஏற்படுத்தி விடும். இது ஏற்கனவே பெரிய அளவில் நடந்தும் விட்டது.
தேவையே இல்லாமல் சுமார் 2.5 லட்சம் பொறியியல் சீட்டுகளை உருவாக்கி வேலை இல்லா எஞ்சினியர்களை உருவாக்கி வைத்துள்ளோம். ஆனால் நமது கிராமங்களிலும் பணநடமாட்டம் குறைவாக உள்ள. பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகளிலேயே மருத்துவர் கடவுள் போல எப்பவாவது காட்சி அளிக்கிறார். கண்ணுக்குத் தெரியாமல் சொல்லமுடியாத அளவு துன்பத்தை மக்கள் தினமும் அனுபவிப்பதுடன் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
ஆரோக்கியமும் சுகாதாரமும் நமது பிறப்புரிமை. இதை பணக்காரர்களுக்கு மட்டுமுள்ள உரிமையாக மாற்றக்கூடிய எந்த அரசு முடிவுகளும் கொள்கைகளும் தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டியவை. ஈவிரக்கமற்ற சமுதாயமே மருத்துவத்தில் லஞ்சமும் ஊழலும் நிகழ்வதை வேடிக்கை பார்க்கும். இன்று நாம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.