1864ல் அமெரிக்கா, பிரிட்டன், ஹாலந்து, பிரான்ஸ் நான்கு நாடுகள் கூட்டாகப் போர்தொடுத்தன; ஜப்பான் படுதோல்வி அடைந்தது.
1867ல் கோமே மரணமடைந்தார்;
அவரது 15வயது மகன் முட்ஷிஹிடோ அரியணை ஏறினார்.
இவர்தான் மெய்ஜி (Meiji=தெளிவுபெற்ற அரசன்) என்று அழைக்கப்படுகிறார்;
வேற்றுநாடுகளின் ஆதிக்கத்தில் சிக்குண்டிருந்த ஜப்பானை 40 ஆண்டுகளில் வல்லரசாக செதுக்கி எடுத்தவர் இவர்தான்.
அரசியலில் முதியவர்களை வைத்துக் கொள்ளாமல் இளைஞர்களை அரசியல் அவைக்குக் கொண்டு வந்தார்.
முதல் கட்டமாக வேளாண்மையை ஆராய்ந்து காலநிலை, மண்வளம், பருவசூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து புதிதாக வேளாண்மை நிலங்களை ஏற்படுத்தி நவீனமுறைகளைப் புகுத்தினார்.
தொழிற்சாலை உருவாக்கி வேளாண்மைக்கு அடுத்தபடியாக நாட்டைத் தாங்குமளவு தொழிற்துறையை உருவாக்கினார்.
தொழில்வழி வந்த பிரிவுகளை (சாதிகள்) வணிக சாதியார் மட்டுமன்றி மற்றவரையும் வணிகத்தில் புகுத்தி குலத்தொழில் முறையை உடைத்தார்.
நான்கு பெரிய தீவுகளும் பலநூறு சிறு தீவுகளும் ஆன ஜப்பானின் நிலப்பரப்பில் போக்குவரத்தை மேம்படுத்தினார்; சாலைகள், தண்டவாளங்கள், நீர்வழிப் போக்குவரத்துகளைப் போர்க்கால அடிப்படையில் மேம்படுத்தினார்.
குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி, ஏழை எளிய மக்களுக்கும் எத்தகைய உயர்கல்வியும் பயிலலாம் என்ற நிலையை உருவாக்கினார்;
கல்விசாலைகளை உருவாக்கி அதில் அறிவியல் புத்தகங்களை தாய்மொழியில் மொழிபெயர்த்து சிறப்பான முறையில் கல்வி கிடைக்கச்செய்தார் (ஜப்பான் மக்களில் ஏறத்தாழ அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள் ஆனால் 5%பேருக்குக் கூட ஆங்கிலம் உட்பட வேற்றுமொழி எதுவும்தெரியாது).
இளைஞர்களை கட்டாய படைச் சேவையில் ஈடுபடுத்தினார் (ஜப்பானியர் ஒரு படைவீரரின் ஒழுங்குடன் இன்றும் செயல்பட இதுவொரு காரணம்).
அரசன் ஆளுவதாக இல்லாமல் சட்டதிட்டங்கள் வகுத்து அதன்மூலமே ஆட்சி என்ற முறையைக் கொண்டு வந்தார்.
அரசின் முடிவுகள் அனைத்து தட்டு மக்களையும் கூட்டி ஆலோசனை நடத்திய பிறகே எடுக்கப்படும் என்ற முறையைப் பின்பற்றினார்.
எல்லாவற்றையும் விட உலகில் எந்தமூலையில் அறிவு இருந்தாலும் அதைத் தேடிச்சென்று பெறவேண்டும் என்ற ஆவலை மக்களிடம் புகுத்தினார்.
1871ல் நாட்டின் பலதரப்பான மக்களும் அடங்கிய நூற்றுக்கும் அதிகமானோர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது;
பெரும் பொருட்செலவில் இவர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, ரஷ்யா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து என்று அன்றைய வல்லரசு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
(ஈழத்தின் அரசியல் சட்டவரைவு ஏற்படுத்த தலைவர் அமைத்த தூதுக்குழு பல்வேறு நாடுகளுக்கும் சென்று பார்த்தது நினைவு வருகிறதுதானே?)
இக்குழு அந்நாடுகளின் கழிவு மேலாண்மை முதல் சட்டசபை வரை சுற்றிப்பார்த்தார்கள்;
எவ்வளவு கற்கமுடியுமோ கற்றார்கள்;
முடிவில் நாடுதிரும்பி 2,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மன்னனிடம் கையளித்தார்கள்.
(1876ல் தான் தொலைபேசியே கண்டுபிடிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க).
அதன்படி எந்தநாட்டில் எந்த துறை சிறப்பாக இருக்கிறதோ அந்தத் துறையில் (நகல் எடுத்தாற்போல) அந்த நாட்டை அப்படியே பின்பற்றவேண்டும் என்று பட்டியல் போடப்பட்டு அந்தந்தத் துறையினரிடம் அளிக்கப்பட்டது;
அதன்பிறகு பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு துறையில் சாதித்தவர்கள் ஜப்பானுக்கு அழைக்கப்பட்டார்கள்;
அனைத்துவசதிகளும் அவர்களுக்கு சிறப்பான முறையில் செய்துகொடுத்து நன்றாக விருந்தோம்பல் செய்து அவர்களை முடிந்த அளவு பயன்படுத்திக் கொண்டனர்; 30 ஆண்டுகள் இந்தமுறையைப் பின்பற்றினர்.
கிட்டத்தட்ட 20ஆண்டுகள் கழித்து மெய்ஜி மன்னரின் முயற்சி பலன்தரத் தொடங்கியது நாட்டுமக்கள் அறிவில் சிறந்தவர்களாக அத்தனை துறைகளையும் வளர்த்தெடுத்தார்கள்;
நாட்டுமக்களின் அறிவுவளம் போல ஒரு நாட்டின் பகட்டான செல்வம் வேறு உண்டோ?
எங்கும் வளம் எவரிடத்தும் அறிவு.
அடித்தளம் அமைந்ததும் மெய்ஜி மன்னர் அடுத்த திட்டங்களை வகுத்தார்; மூலப்பொருட்களை விற்காமல் அதை பொருளாகத் தயாரித்து விற்பனை செய்யத் தூண்டினார்; அளவுக்கதிகமாக சொத்துசேர்த்து வைத்திருந்தவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி சொத்துகளை அரசுடைமை ஆக்கினார்; பெரிய அளவிலான தொழில் தொடங்குவோருக்கு அரசே முதலீடு செய்யும் முறையைத் தொடங்கிவைத்தார்; பள்ளிகளில் வேளாண்மைக் கல்வியை புகுத்தினார்; பணக்கார குடும்பங்களை வங்கிகள், தொழிற்சாலைகள், வணிகம் ஆகியவற்றில் ஈடுபடுத்தி அவர்களைப் பயன்படுத்திக்கொண்டார்; அத்தனைத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்களை உழைப்பாளர்களாக உருவாக்கினார். (அப்போது தொழிற்துறையில் 50% பெண்கள்).
அடுத்த 20ஆண்டுகளில் விண்ணுக்குப் பாய்ந்தது ஜப்பான்; வல்லரசுக்குத் தேவையான அத்தனையும் ஜப்பானிடம் தாராளமாக இருந்தன;
மெய்ஜி அரசனின் தலைமையில் 1894ல் ஆண்டாண்டுகாலமாக தன்னை ஆண்டு நடத்திய சீனாவையே கொரிய போரில் தோற்கடித்தது ஜப்பான்.
1895ல் வல்லரசு நாடுகள் மஞ்சூரிய நாட்டில் ஜப்பான் பார்வை படக்கூடாது என்று மிரட்டின.
மெய்ஜி படைவலிமையை அதிவிரைவில் பெருக்கினார்; அதன்விளைவு 1904ல் ரஷ்ய படை மஞ்சூரியா போரில் ஜப்பான் படையிடம் மரண அடி வாங்கியது; 1914ல் சீனாவில் இருந்த ஜெர்மானிய படைகளைத் தோற்கடித்தது.
1868ல் தோற்று அடங்கிப்போயிருந்த ஜப்பான் 1914ல் மூன்று வல்லரசுகளைத் தோற்கடித்து உலக வல்லரசுப் பட்டியலில் இடம்பெற்றது.
இதற்கு காரணமாக விளங்கிய மெய்ஜி 1912ல் மறைந்தார் அதாவது உடலால் மரணமடைந்தார்; ஆனால், அவரது பெயர் இன்றும் ஜப்பானில் உயிருடன் உள்ளது.
அன்று ஜப்பானிய மக்கள் பெற்ற பேரெழுச்சி அப்படியே இன்று வரை தொடர்கிறது.
அணுகுண்டு விழுந்தும் அசராமல் எழுந்துநிற்கிறது அந்நாடு; இன்று உங்கள் கைகளில் தவழும் கைபேசிகூட மெய்ஜி அரசனின் பெயரைச் சொல்லாமல் சொல்கிறது.
படம்: இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் கைப்பற்றிய பகுதிகள்.
பி.கு: ஜப்பானிடம் தமிழ்க் குடியரசு மக்களாகிய நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் வல்லரசாக ஆனாலும் சிறிலங்கா ஹிந்தியா போன்ற அண்டைநாடுகளிடம் வரம்புமீறக்கூடாது.
மக்கள் எழுச்சியை நாடுபிடிக்கும் கருவியாகப் பயன்படுத்தினால் அழிவு தான் நேரிடும் என்பதை ஜப்பானும் ஜெர்மனியும் உணர்த்துகின்றன...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.