ஓசைகளைக் குறில், நெடில் என்று குறிப்பிடுகின்றீர்களே, அதற்கு ஏதாவது அளவு உண்டா?
ஓசைகள் ஒலிக்கப்படும் கால அளவைக்கொண்டு அளவு கணிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு 'மாத்திரை’ என்று பெயர்.
கண்களை ஒருமுறை இமைப்பதற்கு ஆகும் நேரம் அல்லது கை விரல்களை நொடிப்பதற்கு ஆகும் நேரம் ஒரு மாத்திரை என்பர்.
குறில் ஓசைக்கு (அ, இ, உ, எ, ஒ ) 1 மாத்திரை; நெடில் ஓசைக்கு (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ) 2 மாத்திரை; மெய் ஓசைக்கு 1/2 மாத்திரை.
இங்கே ஒரு நுட்பத்தைக் கவனிக்க வேண்டும். 'க' என்னும் உயிர்மெய் எழுத்தில் 'க்'+'அ' என்னும் எழுத்துக்கள் உள்ளன. மேற்கண்ட கணக்கின்படி 'க்' கிற்கு 1/2 , 'அ' விற்கு 1 என்று கொண்டு, 'க' வுக்கு 1 1/2 மத்திரை என்று சொல்லலாமா? கூடாது.
மூன்று துணை ஓசைகள் என்று குறிப்பிட்டீர்களே, அவை யாவை?
துணை ஓசைகளைச் 'சார்பு எழுத்து' என்று இலக்கண நூலார் அழைப்பர். அவை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்பன.
இவற்றுள் ஆய்தம் புரிகிறது; குற்றியலுகரம், குற்றியலிகரம் புரியவில்லையே.
குற்றியலுகரம் என்பதற்கு பொருள் குறுகிய உகரம் என்பதாகும். அதாவது உகரத்துக்கு (உ) ஒரு மாத்திரை; அது 1/2 மாத்திரையாகக் குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம்.
இதை எப்படி கண்டுபிடிப்பது?
கண்டுபிடிப்பது ஒன்றும் கடினம் இல்லை. அணுவையே பிளக்கலாம் என்று கண்டுபிடித்த நமக்கு இது ஒன்றும் கடினமில்லை.
வல்லெழுத்தின் மீது (க், ச், ட், த், ப், ற்) உகரம் ஏறி ( குசுடுதுபுறு), அந்த எழுத்தை இறுதியாகக்கொண்டு ஒரு சொல் முடியுமானால், அதில் வரும் உகரம் ( நாகு, மாசு, நாடு, காது, மார்பு, ஆறு) குற்றியலுகரம் ஆகும்.
ஆனால், தனிக் குறிலை அடுத்து கு சு டு து பு று என்றும் ஆறு எழுத்துக்கள் வருமானால் ( நகு, பசு, மடு,புது, தபு, வறு) அவை குற்றியலுகரம் ஆகா.
மேலும் இந்த உகரம் மெல்லெழுத்து ( ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ) இடையெழுத்து (ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) ஆகியவற்றின் மீதி ஏறி வந்தாலும் குற்றியலுகரம் ஆகாது ( அணு - (ண்+உ), ஈமு (ம்+உ), திரு(ர்+உ), குரு(ர்+உ), கதவு(வ்+உ), கனவு(வ்+உ), நிலவு(வ்+உ), முழு( ழ்+உ), ஏழு( ழ்+உ), தள்ளு(ள்+உ) ).
இனி, குற்றியலிகரம் பற்றி பார்ப்போம்.
இரண்டு சொற்களில் ஒரு சொல்லின் கடைசி எழுத்து குற்றியலுகரமாகவும், அடுத்த சொல்லின் முதல் எழுத்து யகரமாகவும் ( ய, யா )இருந்தால், அவை இரண்டும் சேர்ந்து ஒலிக்கும்போது அந்த குற்றியலுகரம் 'இ'கரமாக மாறிவிடும். அந்த எழுத்து 1/2 மாத்திரை அளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்து ஒலிக்கும் 'இ'கரம் குற்றியலிகரம் ஆகும்.
ஒரு உதாரணம் பார்ப்போம்.
நாடு + யாது = நாடியாது. 'நாடு'என்னும் சொல்லில் வரும் 'டு' என்பது குற்றியலுகரம். இதனை அடுத்து வரும் 'யாது' என்னும் சொல் 'ய'கரத்தில் தொடங்குவதால், 'டு' என்ற குற்றியலுகரம், 'டி' என மாறிவிடுகிறது. ( 'டி' = ட்+ இ ) என 1/2 மாத்திரையில் ஒலிக்கும் இந்த 'டி' குற்றியலிகரம் ஆகும்.
மேலும் சில உதாரணங்கள் : பாடு + யாது = பாடியாது, கொக்கு + யாது = கொக்கியாது.
தற்போது குற்றியலிகரச் சொற்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை.
நீங்கள் குற்றியலிகரச் சொற்களுக்கு உதாரணம் முயற்சி செய்து பாருங்கள்.
சார்பு எழுத்தில் 'ஆய்த'திற்கான உதாரணங்கள் : எஃகு, அஃது, இஃது.
'எஃகு' என்னும் சொல்லில் 'கு' 1/2 மாத்திரை அளவே ஒலிக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.