12/06/2018

தொடர் மழையால் நிரம்புகிறது சிறுவாணி. நொய்யலில் வெள்ள அபாயம்...


மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில், சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், கன மழை பெய்து வருகிறது; முக்கிய நீராதாரமான முத்திக்குளம் அருவியில் நீர்வரத்து காணப்படுகிறது. கடந்த, 2016ல் கோவையில் வரலாறு காணாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்றது. அணைகள் வறண்டன. 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வழங்கப்பட்டது. குடிநீர் பிரச்னை அதிகரித்ததால், கோடை காலத்தில், பொதுமக்கள், காலிக்குடங்களுடன் அலைந்தனர். பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். எதிர்பார்ப்பை பொய்யாக்காமல், கடந்தாண்டு, இரு பருவமழைகளும் கைகொடுத்தன.

அணைகளின் நீர்மட்டம் அதிகரித்தது. குளம், குட்டைகளில் நீர் தேங்கியது. நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்தது. அதனால், நடப்பாண்டு கோடையில், குடிநீர் பிரச்னை எழவில்லை. கடந்தாண்டை போல், தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால், எதிர்பார்க்காத அளவுக்கு, கோடையில் கனமழை பெய்தது. கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, குமாரசாமி, செல்வ சிந்தாமணி குளங்கள் நிரம்பின.

மே, 28ல், தென்மேற்கு பருவமழை துவங்கியது. மெல்ல மெல்ல பெய்ய ஆரம்பித்து, சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான, மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கனமழையாக உருவெடுத்து உள்ளது. பாம்பாறு, பட்டியாறு, முத்திக்குளம் அருவிகள், பெரியாறு மற்றும் சின்னாறுகளில் நீர்வரத்து காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில், 156 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

இடைவெளி விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இரண்டு நாளில், 20 செ.மீ., உயர்ந்துள்ளது. 50 அடி உயரமுள்ள சிறுவாணி அணையில், நேற்றைய தினம், 14.5 அடிக்கு நீர் இருக்கிறது. மழை நாளை வரை தொடரும் என, வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். பருவ மழை செப்., வரை பெய்யும் என்பதால், நடப்பாண்டு சிறுவாணி அணை கண்டிப்பாக, நிரம்பி வழிய வாய்ப்புள்ளது.

நேற்று மாலை மழை வலுத்ததால், கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நொய்யலில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சித்திரைச்சாவடியை கடந்து, மாதம்பட்டிக்கு தண்ணீர் வந்தது. சீறிப்பாயும் வெள்ளத்தால், கோவைக்குற்றாலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு...

கோவை குற்றாலம் அருவியில், நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சீங்கப்பதி அருகே உள்ள சாடியாறு நீர்வீழ்ச்சியிலும், வெள்ளம் ஆர்ப்பரித்து பாய்ந்தது. குற்றாலம் அருவியை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில், காணும் இடமெல்லாம் புதிய அருவிகள் உருவாகின. இதனால், மலைப்பகுதி முழுவதும், வெள்ளி உருகி வழிவது போல் காட்சியளிக்கிறது. சாடிவயல் சின்னாற்றில், புது வெள்ளம் கரைகளை தொட்டுச் செல்கிறது. சின்னாறு, சாடியாறு, கல்லாறு மற்றும் நீலிவாய்க்கால் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளது. நொய்யலின் முதல் தடுப்பணையான, சித்திரைச்சாவடி அணையின் ஷட்டர்களை தாண்டி காட்டாற்று வெள்ளம் செல்கிறது.

இதில், ராஜவாய்க்கால் வழியாக வேடபட்டி புதுக்குளம், கோளரம்பதி, நரசாம்பதி குளங்களுக்கு நீர் செல்கிறது. இதனால், நொய்யல் ஆற்றின், 2வது அணையான குனியமுத்துார் தடுப்பணையும் நேற்று நிரம்பியது. குனியமுத்துார் தடுப்பணை வழியாக, பேரூர் செட்டிபாளையம் சொட்டையாண்டி குளம், கங்கநாராயண சமுத்திர குளம், செங்குளம் ஆகிய குளங்களுக்கு, தண்ணீர் சென்றது.

நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரித்த மழைநீர் நேற்று மதியம், பேரூர் நொய்யல் படித்துறையை அடைந்தது. தென்மேற்கு பருவமழை தொடரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதால், கோவையில் உள்ள குளங்கள் நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது; அனைத்து குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மின்சாரம் கட்...

கனமழையால் சாடிவயல் பகுதியில், மின்கம்பங்கள் மீது மரம் விழுந்தது; இரண்டு மின்கம்பங்கள் உடைந்தன. இதனால், 6 மலைகிராமங்களில், மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. காருண்யா நகர் சாலைகளில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது; குற்றாலம் அருவிக்கு செல்லும் வனத்தில், மரங்கள் விழுந்துள்ளன; சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

மழை தொடர்வதால், அருவிக்கு செல்ல இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டது. தடையை அறியாமல் சென்ற பயணிகள், மலைப்பகுதிகளில் உருவாகியிருந்த புதிய நீர்வீழ்ச்சிகளில், ஆபத்தை உணராமல் குளித்தனர். 'வெள்ளப்பெருக்கு குறையாவிடில், அருவிக்கு செல்ல தடை தொடரும்' என, வனத்துறையினர் தெரிவித்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.