அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை என்றார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
முன்பு குறிப்பிட்ட டெல்·பை ஆரக்கிள், ·ப்ளோரிடாவின் குறி சொல்லும் பெண்மணி ஆகியோர் எப்படி தாங்கள் நேரில் கண்டிராத அந்த நிகழ்ச்சிகளை சொன்னார்கள் என்பதை நம்மால் அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ளுதல் சாத்தியமில்லை.
ஆனால் எல்லா நாட்டுப் புராணங்களிலும், மதநூல்களிலும் இது போன்ற அற்புதச் செயல்கள் ஏராளம் உள்ளன. இதற்கும் ஒருபடி மேலாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அசரீரியோ, தேவதூதர்களோ சொல்லும் நிகழ்வுகள் எல்லா மதநூல்களிலும் உள்ளன. "தேவகியின் எட்டாவது மகனாக கிருஷ்ணன் ஜனிப்பான். அவன் உன்னைக் கொல்வான்" என்று கம்சனுக்கு அசரீரி சொன்ன கதையை நாம் அறிவோம். கம்சன் அதைத் தடுக்க எல்லா வழிகளைப் பிரயோகித்தும் நடப்பதை மாற்ற முடியவில்லை. இயேசு கிறிஸ்துவும், முகமது நபியும் பிறப்பதும் முன்பே அறிவிக்கப்பட்டு விட்டதாக அந்த மதநூல்கள் சொல்கின்றன.
இதெல்லாம் நிஜம் தான் என்று நம்ப முடியாத பகுத்தறிவு வாதிகள், இது மதவாதிகளின் கட்டுக் கதை என்று சொல்லலாம். மற்றவர்கள் இதெல்லாம் தெய்வ சக்தி அல்லது தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய சிறப்பு சக்தி என்று நினைக்கலாம். ஆனால் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் சாதாரண மனிதர்கள் சிலருக்கும் அப்படிப்பட்ட அற்புத சக்திகள் கிடைத்த போது, அது பகுத்தறிவுக்கோ, மற்ற அறிவுக்கோ எட்டாத விஷயமாக அனைவரையும் குழப்பியது.
1967 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி சிகாகோ ரேடியோவில் ஒரு பேட்டியில் ஜோசப் டிலூயிஸ் என்ற 'கிரிஸ்டல் பந்து ஞானி' அந்த வருட இறுதிக்குள் ஒரு பெரிய பாலம் இடிந்து விழும் என்றார். மூன்று வாரம் கழித்து 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓஹையோ நதியின் குறுக்கே இருந்த "வெள்ளிப்பாலம்" இடிந்து விழுந்து பலர் இறந்தனர்.
1968, ஜனவரி எட்டாம் தேதி நாட்டில் பெரிய கலவரம் வரும் என்றார். 1968, ஏப்ரல் ஏழாம் தேதி சிகாகோவில் பெரிய கலவரம் வந்து ஐயாயிரம் மத்திய அரசுப்படையினர் வந்து அடக்க வேண்டியதாயிற்று.
1969, ஜனவரி 16 ஆம் தேதி சிகாகோ நகரின் ஓட்டலின் ஒரு பாரில் நுழைந்து அங்குள்ள சர்வரிடம் சிகாகோவின் தெற்குப்பகுதியில் இரு ரயில்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்தைப் பற்றி அன்றைய தினப் பத்திரிக்கையில் என்ன போட்டிருக்கிறார்கள் என்று கேட்க அங்குள்ளவர்கள் திகைத்துப் போனார்கள். முன்பே அவர் இது போன்ற விஷயங்களில் பிரபலமானபடியால் அன்றைய பத்திரிக்கைகளில் ஒன்றும் வராவிட்டாலும் ரேடியோவிலாவது ஏதாவது செய்தி வருகிறதா என்று ரேடியோவைப் போட்டார்கள். அப்போது இரவு மணி 11. ஆனால் ரேடியோவில் விபத்தைப் பற்றி எந்த செய்தியும் இல்லை. அது வரை நடக்கவில்லை என்பதை அறிந்த டிலூயிஸ் உறுதியாகச் சொன்னார். "இந்தப் பகுதியில் கடந்த 25 வருடங்களில் இது போன்ற பெரிய விபத்து நடந்திருக்காது. அப்படிப்பட்ட விபத்து நடக்கும்."
இரண்டு மணி நேரம் கழித்து சிகாகோவிற்குத் தெற்கே இல்லினாய்ஸ், சென்ட்ரல் ரயில்கள் பனிமூட்டத்தின் காரணமாக மோதிக் கொண்டன. 47 பேருக்குப் பலத்த காயம். மூன்று பேர் இறந்தனர். அவர் கூறியது போல அதுவே அந்தக் காலக்கட்டத்தில் அந்தப் பகுதியில் மிகப்பெரிய விபத்து.
1969, மே 21ல் டிலூயிஸ் "இண்டியானாபோலிஸ் அருகே ஒரு விமானம் விபத்துக்குள்ளாகும். அதில் 79 பேர் மரணமடைவார்கள். ஏதாவது ஒரு வகையில் 330 என்ற எண் அதில் சம்பந்தப்படும்" என்றார். 1969, செப்டம்பர் 9 ஆம் தேதி அலிகனி ஏர்லைன்ஸ் விமானம் ஒரு தனியார் விமானத்துடன் மோதி 79 பயணிகள் இறந்தனர். விபத்து நேர்ந்த நேரம் மதியம் 3.30.
1968 டிசம்பர் 15 ஆம் தேதி டிலூயிஸ் "கென்னடி குடும்பத்திற்கு தண்ணீர் மூலம் ஒரு கண்டம் இருக்கிறது. ஒரு பெண் நீரில் மூழ்கியதைப் பார்த்தேன்" என்றார். 1969, ஜூலை 18 ஆம் தேதி மேரிஜோ என்னும் பெண் எட்வர்டு கென்னடியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய சம்பவம் எட்வர்டு கென்னடியின் அரசியல் வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.
பொதுவாகவோ, எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளும்படியாகவோ சிலர் எதை எதையோ சொல்வதுண்டு. அப்படிச் சொல்வதில் ஏதாவது ஒன்று பலித்து விட்டால் அதை விளம்பரப்படுத்தி நல்வாக்கு சித்தர் என்றோ முக்காலமும் உணர்ந்த மகான் என்றோ பெயர் வைத்துக் கொள்வதுண்டு.
உதாரணத்திற்கு "அடுத்த ஆண்டு ஒரு பெரும் ரயில் விபத்து நடக்கும். நாட்டில் எங்காவது குண்டு வெடிக்கும். புதியதாக ஒரு நோய் வந்து மனிதர்களைத் தாக்கும்" என்று நான் சொன்னால் மூன்றில் இரண்டு கண்டிப்பாகப் பலிக்க சாத்தியமுண்டு. உடனே நான் விகடனில் அன்றே இந்த தேதியில் இப்படிச் சொன்னேன் என்று சொல்லிக் கொள்ளலாம். இப்படி இப்போதெல்லாம் நிறைய நடக்கிறது. ஆனால் டிலூயிஸ் அப்படி பொத்தாம் பொதுவாக எதையும் சொல்லவில்லை. அவர் சொன்னது எல்லாமே அப்படி சொல்ல முடிந்த விஷயங்கள் அல்ல.
இப்படி நடப்பதை முன் கூட்டியே சொல்லி திகைப்பில் ஆழ்த்திய டிலூயிஸ் ஒரு சாதாரண முடிதிருத்தக் கலைஞர். பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டவர். பின்னர் கடற்படையில் சேர்ந்தார். பணியிலிருந்து விலகுவதற்கு முன்பு ஒரு முறை தான் வேலைக்கு செல்லும் கிடங்கில் ஏதோ ஒரு பெரிய விபத்து ஏற்படுவதாக அவர் உள்ளுணர்வு சொல்ல அவர் அன்று வேலைக்குப் போகாமல் இருந்து விட, உண்மையாகவே அங்கு ஒரு பெரும் விபத்து அன்று நிகழ்ந்தது. அன்று வேலைக்குப் போகாததால் அவர் உயிர் தப்பித்தார். பிறகு இவர் கிரிஸ்டல் பந்தைப் பார்த்து எதிர்காலக் கணிப்புகளைச் சொல்ல ஆரம்பித்தார். அந்த ஆரம்ப உள்ளுணர்வின் பின் இவருடைய எல்லா முன்கூட்டிய கணிப்புகளைக் கவனித்தீர்களானால் ஒரு உண்மை புரியும். எல்லாமே விபத்துக்கள் பற்றியதாகத் தான் இருந்தன.
ஜோசப் டிலூயிஸிற்கு இப்படி விபத்துகளை அறியும் சக்தி கிடைத்ததென்றால் சில மனிதர்களுக்கு திடீரென்று வேறு மாதிரியான அபூர்வ சக்திகள் கிடைத்த நிகழ்ச்சிகளும் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
அவற்றையும் பார்ப்போமா?
இன்னும் ஆழமாகப் பயணிப்போம்.....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.