மனம் எது இருந்தாலும் ஒரு கணமும் நிறைவு இல்லையே.
எல்லாம் கிடைத்தும் இல்லையே அமைதி.
ஏதேதோ காரணம்பற்றி எழுகுதே கவலைகள்.
அதுஇல்லை இதுஇல்லையென அவதிக்கு அலையுதே.
அந்தத் தொல்லை இந்தத் தொல்லையென இம்மனம் அழுகுதே.
இது.. சூதும் வாதும் சோதிப்பதாய் சொல்லிக் குமுறும்,
எல்லோருமெனை ஏய்ப்பதாய் ஏமாற்றம் அடையும்,
அடிபட்ட நாயாய் அடி வயிறில் ஊளையிடும்,
அவமானத்தில் குன்றி சோகத்தில் மூழ்கும்,
கோபத்தில் சீறி படபடப்பாய் எகிறும்,
இருப்பது நிறைவாய் இல்லாமல் ஆக்கும்,
இல்லாததை முன் வைத்து இடித்துக் கொண்டே இருக்கும்,
இழந்ததை நினைத்து எப்போதும் வருந்தும்,
தவறு செய்துவிட்டதாய் தன்னையே ஏசும்,
கோட்டை கட்டி சிம்மாசனம் போட்டு குதூகலித்துக் கொள்ளும்,
இடியுமே கோட்டையென இடிந்து போகும்.
ஆணவம் இழக்க அஞ்சி நடுங்கும், ஆபத்து வருமென அரணரணாய் கட்டும்,
புகழ்ச்சிப் பேச்சுக்கு பல்லிளித்து அலையும்,
இகழ்ச்சி வருமோவென பதுங்கி ஒதுங்கும்,
ஆணவம் தருவது நோக்கி காந்தமாய் இழுக்கும்,
அதிகாரம் அடைய சதி செய்யச் சொல்லும்,
பணத்தைப் பிடுங்க பகை பாராட்டும்,
செல்வம் சேர்க்க நட்பைத் தேடும்,
சொத்தைச் சேகரிக்க சொந்தத்தை நாடும்,
அடுத்தவரைக் கவிழ்த்து தன்னை உசத்தும்,அடி சறுக்கினால் ஆதரவுக்காக அடி பணிந்து போகும்,
சுலபமாய் இருக்க பொய்யைப் பேசும்,சுகமாய் இருக்க திருட்டைச் செய்யும்,
அடுத்தவரை ஆள அன்பைக் கெடுக்கும்,
கொடுத்ததை வாங்க மிரட்டிப் பார்க்கும்,
இல்லாதவனைக் கண்டால் ஏளனம் செய்யும்,
இருப்பவனைப் பார்த்தால் சலாம் அடிக்கும்,
தேவையென வந்தால் குழைந்து கெஞ்சும்,
தேவையில்லை என்றால் அதிர்ந்து நடக்கும்,
தனிமையில் இருந்தால் தனைப்பார்த்தே அஞ்சும்,
பலபேர் இருந்தால் பகைவனைத் தேடும்,
மதிப்புக்கு மட்டுமே மதிப்புக் கொடுக்கும்,
சொந்த வாழ்வில் கஞ்சனாய் இருக்கும்,
சூழ்பவர் இடையே வேஷம் கட்டும்,நாடகம் நடத்தி காதலை வெல்லும்,
கௌரவம் கெடுமெனில் கொலையும் செய்யும்,
தேவை முடிந்த பின் தூரமாய் வீசும்,
செய்வது எதற்கும் நியாயம் சொல்லும்,வெற்றி பெற்றால் பீற்றிக் கொள்ளும்,
தோல்வி அடைந்தால் அடுத்தவரைச் சொல்லும்,
எது இருந்தாலும் இடைவிடாது சூழ்ச்சி செய்யும்,
எது கிடைத்தாலும் தனக்குமட்டுமே எனக்கேட்கும்,
அடுத்தவர் வாழ்ந்தால் அவதூறு சொல்லும்,
தான் வாழ்வதே சிறப்பென தம்பட்டம் அடிக்கும்,
குறைக்குக் காரணம் சுற்றம் என்கும்,
நிறைக்குக் காரணம் தானே என்கும்,
எது இருந்தபோதும் போதுமென்று இருக்காது,
உடல்பசி எடுத்தால் உன்மத்தம் கொள்ளும்,
காமம் கொண்டு கயவனாய் ஆகும்,
பேராசை பிடித்து நேசத்தை அழிக்கும்,
பணத்தின் ஆசையில் பண்பை துறக்கும்,
இதயத்தைக் கொன்று செல்வத்தை காக்கும்,
அறிந்ததை வைத்து ஆணவமே வளர்க்கும்,
திறமை இருந்தால் திமிர் கொண்டு ஆடும்,
அன்பு எழுந்தால் அபாயம் என்கும்,
மனிதபண்பு கொண்டால் பயனிலை என்கும்,
வருவதை ஏற்றால் கோழை என்கும்,
சிரித்து மகிழ்ந்தால் சீற்றம் கொள்ளும்,
அமைதியாய் இருந்தால் குத்திக் கிளறும்,
மனதின் அலைகழிப்புக்கு தினத்தில் முடிவு ஏது?குருவே, மனமின்றி இருக்க மாட்டேனா?எனையற்று உனை உணர முடியாதா?
தளைவிட்டு நிலை அடைய இயலாதா?
என்று தணியும் இந்த தாகம்?
என்று முடியும் இந்த சோகம்?
இப்படிக்கு
மனம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.