பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.
பாம்பைப் பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பது. இதுவே பாம்பாட்டி சித்தரின் தொழில். இவர் விஷமுறிவு மூலிகைகளைப் பற்றி அறிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார்.
ஒருநாள் சிலர், மருத மலையின் மீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதன் தலையில் விலையுயர்ந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனைப் பிடிப்பவன் திறனுள்ள பெரிய பாக்கியசாலி என்றும் பேசிச் சென்றனர். இதனைக் கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப் பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்றார். பாம்பைத் தீவிரமாக தேடினார். அப்போது திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பினார். அங்கே மிகப் பிரகாசமான ஒளியோடு சட்டைமுனி சித்தர் நின்றார். “இங்கு எதைத் தேடுகிறீர்கள்?” என்று வினவினார். அதற்கு பாம்பாட்டி சித்தர் “நான் நவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன், அதைக் காணவில்லை” என்றார்.
இதைக் கேட்ட சட்டைமுனி சிரித்தார். “நவரத்ன பாம்பை உனக்குள் நீயே வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயல் அல்லவா! மிகுந்த உல்லாசத்தைத் தரக்கூடிய ஓர் பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும் அதை அறிவதில்லை. அதனால் வெளியில் திரியும் இந்தப் பாம்பை தேடுவதை விட்டுவிட்டு, இல்லாத பாம்பைத் தேடி ஓடாதே” என்றார். எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.
சட்டை முனி சித்தர் கனிவோடு பாம்பாட்டியைப் பார்த்து விளக்கமளிக்கத் தொடங்கினார். “அற்புதமான இந்த மனித சரீரத்தினுள் ஆதியிலிருந்தே ஒரு பாம்பு படுத்துக்கொண்டு இருக்கிறது. ‘குண்டலினி’ என்று அதற்கு பெயர். தூங்கிக் கொண்டு இருக்கும் அந்தப் பாம்பு அறிவை சுருக்குகிறது. இதன் நுட்பத்தை அறிவது அரிது. மக்களின் துன்பத்திற்கு மூலாதாரமே இந்த மூலாதாரப் பாம்பின் உறக்கம் தான்.
இறைவனை உணரப் பாடுபடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அப்பொழுது ‘குண்டலினி’ என்ற அந்தப் பாம்பு விழித்து எழும். அதனால் தியானம் சித்திக்கும். இறைவன் நம்முள் வீற்றிருப்பார். மனிதனுள் இறைவனைக் காணும் இரகசியம் இதுவே” என்று சொல்லி முடித்தார்.
“குருதேவா! அரும்பெரும் இரகசியத்தை இன்று உங்களால் அறிந்தேன். மேலான இந்த வழியை விட்டு இனி நான் விலக மாட்டேன்!” என்று சொன்ன பாம்பாட்டியார், சித்தரை வணங்கி எழுந்தார். சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார்.
பாம்பாட்டியார் செய்த தொடர்யோக சாதனையால் குண்டலினி யோகம் கைகூடியது. எல்லாவகை சித்துக்களும் சித்தியானது. இரவு பகலாக பல நாடுகளையும் சுற்றினார். மக்களின் வியாதிகளை மூலிகைகளால் குணமாக்கினார்.
ஒருநாள் வான் வழியே உலா வந்து கொண்டிருந்த போது பாம்பாட்டி சித்தர் அரசனொருவன் இறந்து போய் அவனது உடல் கிடத்தப்பட்டிருப்பதை பார்த்ததும் யோசித்தார். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையின் வாயிலாக பாம்பாட்டி சித்தர் தன் உடலை மறைவிலிட்டு இறந்து போன அரசனின் உடலில் புகுந்தார்.
அரசன் எழுந்தான். அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அரசன் பிழைத்துக் கொண்டாரே தவிர அவர் செய்கைகள் ஏதும் திருப்திகரமாக இல்லை. சித்தன் போல் பிதற்றுகிறார், மாயங்கள் எல்லாம் செய்கிறார் என்ற மக்களின் விமர்சனம் ராணியின் காது படவே விழுந்தது. அவள் மனதில் கவலையோடு சந்தேகமும் எழுந்தது.
அரசனைப் பார்த்து “ஐயா! தாங்கள் யார்? எங்கள் அரசரா? அல்லது சித்து வித்தைகள் புரிபவரா?“ என்று கேட்டாள். அதற்கு சித்தர் “அரசி! உனக்கு உண்மை புரிய ஆரம்பித்திருக்கிறது. இறந்து போன மன்னனுக்காக அழுது கொண்டிருந்த உங்களின் துன்பத்தினைப் போக்குவதற்காகவே நான் மன்னனது உடலில் புகுந்தேன். என் பெயர் பாம்பாட்டி சித்தன்” என்றார்.
உண்மை உணர்ந்த அரசி “எங்களுக்குத் தெய்வமாக வந்து உதவி செய்தீர். நாங்கள் என்ன செய்ய வேண்டும்? கடைதேறும் வழியை உபதேசியுங்கள்” என்று கைகூப்பி வேண்டினாள்.
அரசரிடமிருந்து பலப்பல தத்துவப் பாடல்கள் உபதேசமாக வெளிவந்தன. அவைகளை கவனமாக எல்லோரும் கேட்டனர். அரசர் உடலிலிருந்து சித்தர் வெளியேரினார். அரசர் உடம்பு கீழே விழுந்தது. சித்தர் உபதேசப்படி ராணி அந்நாட்டை ஆளத்தொடங்கினாள்.
அரசர் உடலில் இருந்து வெளியேறிய பாம்பாட்டிச் சித்தர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த தன் உடலில் புகுந்தார்.
இவர் தவம் செய்த குகை மருதமலையில் இருக்கிறது. இவர் மருதமலையில் சித்தியடைந்ததாகச் சிலரும், துவாரகையில் சித்தியடைந்ததாகச் சிலரும், விருத்தாச்சலத்தில் சிலரும் கூறுகின்றனர். மூன்று இடங்களிலும் இவரது நினைவிடம் உள்ளது.
இவர் செய்த நூல்கள்...
பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்,
சித்தராரூடம்,
பாம்பாட்டி சித்தர் வைத்திய சாத்திரம் ஆகியன...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.