01/09/2018

இயற்கையின் அற்புதக் கொடை.. மூங்கில் அரிசி...


நெல் போலவே இருக்கும்.பழங்குடி மக்களின் முக்கிய உணவு.

60 வயதான மரத்தில்தான் கிடைக்கும்.
உடலுக்கு ஊட்டம் கொடுக்கும்.

வாழையடி வாழையாக வாழ்க…
மூங்கில் போல் சுற்றம் முறியாமல் வாழ்க என மணமக்களை வாழ்த்தும் பழக்கம் நம்மிடையே உண்டு.

அதற்குக் காரணம், இந்தத் தாவரங்கள் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றி புதர் போல நெருங்கி வளர்பவை. ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைத்து காலகாலமாக வாழ்பவை.

அதனால்தான் திருமண விழாக்களின் போது, மூங்கில் பந்தல்கால் நடுதலும், வாழை மரம் கட்டுதலும் தவறாமல் இடம் பெறுகின்றன.

அப்படி நம் வாழ்வில் ஒன்றியிருக்கும் பயிர்களில் ஒன்றான மூங்கில், மற்ற தாவரங்களைப் போல் ஒவ்வோர் ஆண்டும் பருவத்தில் பூக்காமல்… தன் வாழ்நாளை முடிக்கும் போது தன் இனத்தைப் பரப்புவதற்காக பூத்து விதைகளை உருவாக்கும். கிட்டத்தட்ட கோதுமை போல காட்சியளிக்கும் அந்த விதைகள்தான் ‘மூங்கில் அரிசி’ என அழைக்கப்படுகிறது. இந்த விதைகளில் நெல் போலவே, மேலே தவிடு போன்ற தோலும் உள்ளே விதையும் இருக்கும். அதனால்தான் ‘மூங்கில் அரிசி’ என அழைக்கிறார்கள்.

காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் முக்கிய உணவாக இருக்கும், மூங்கில் அரிசியானது சிங்கவால் குரங்கு, யானை, காட்டு மாடு போன்ற விலங்குகளுக்கும் பிடித்தமான உணவு.

பழங்குடி மக்களிடம் இருந்து நாட்டுக்குள்ளும் பரவத் தொடங்கிய மூங்கில் அரிசி, முக்கிய இயற்கை உணவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக மலை, மலை சார்ந்த பகுதிகளில் வாழும் மக்களிடையே மூங்கில் அரிசி மிகப் பிரபலமாக இருக்கிறது. இயற்கை அங்காடிகள், பாரம்பர்ய உணவுத் திருவிழாக்களில் மூங்கில் அரிசியும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடக எல்லைப் பகுதியில் தேன்கனிக் கோட்டையில் இருந்து பெட்டமுகிலாளம் செல்லும் சாலையில் உள்ள அய்யூர் வனப்பகுதியில் மூங்கில் மரங்களில் நெல் பூத்துள்ளன. இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன் வனத்துறை சார்பாக பரவலாக நடப்பட்ட மூங்கில் மரங்கள்தான் பூத்துள்ளன. தற்போது, அப்பகுதி மக்கள் மூங்கில் நெல்லைச் சேகரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இத்தகவல் அறிந்து அய்யூர் வனப்பகுதிக்குப் பயணமானோம். அய்யூர் வனப்பகுதியின் செல்லும் வழியில் மலை அடிவாரங்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் மூங்கில் காடுகள்தான்.

மூங்கில் பூத்தால் மழை பெய்யாது..

மூங்கில் நெல் குறித்து அரசஜ்ஜுர் கிராமத்தைச் சேர்ந்த பாஞ்சாலை என்ற பாட்டியிடம் கேட்டபோது, “60 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு கல்யாணமாகி இந்த ஊருக்கு வந்தேன். அப்போ, ஃபாரஸ்ட்டுகாரங்க மூங்கில் கன்றுகளை நட்டுக்கிட்டு இருந்தாங்க. அந்த மரங்கதான் இப்போ பூத்திருக்கு. நெல் உக்காந்திருக்கிறதைப் பாக்குறப்போ சந்தோஷமாக இருக்கு. மூங்கில்ல இப்படி நெல் உக்காந்தா, அந்த வருஷம் மழை குறைவா பெய்யும், வெள்ளாமை செழிக்காதுனு சொல்வாங்க. ஆனா, இங்க அதையும் தாண்டி மழை பெய்ஞ்சிகிட்டுதான் இருக்கு. மூங்கில் அரிசி கிடைக்கிறப்போவெல்லாம் நாங்க விரும்பி சாப்பிடுவோம். முன்னாடி அந்த அரிசி மட்டும்தான் எங்களுக்குத் தெரியும்” என்றார்.

மாடு மேய்த்துக் கொண்டே நெல் பொறுக்குவோம்...

மூங்கில் வனத்துக்குள் நாம் சென்ற போது, அங்கு மூங்கில் நெல் பொறுக்கிக் கொண்டிருந்தார், பழங்குடி கிராமமான  சித்தலிங்கம் கொட்டாயைச் சேர்ந்த சாமுண்டியம்மா. “எங்க மாமியார்  இருந்தப்போ ‘பிதிரு நெல்லு’ (மூங்கில் நெல்) பொறுக்கிட்டு வருவாங்க. அதை உரல்ல குத்தி அரிசியாக்கி சாப்பிட்டிருக்கோம். இப்போதான், நான் முதல்முறையா இப்பதான் பொறுக்குறேன். போன வருஷமும் இந்தப் பகுதியில நிறைய பேர் பொறுக்கிகிட்டு வந்தாங்க. ஆனா, இந்த வருஷம்தான் அதிகமாக கிடைச்சுகிட்டிருக்கு. நான், 3 மாசமா சேகரிச்சிக்கிட்டிருக்கேன். ஒரு நாளைக்கு 4 கிலோ அளவுக்குக் கிடைக்குது. வீட்டுக்கு வெச்சுக்கிட்டது போக மீதியை விற்பனை செய்வேன். ஒரு கிலோ 40 ரூபாய்னு வாங்கிக்கிறாங்க. ஆடு, மாடுகளை மேய்ச்சிக்கிட்டே பொறுக்கிறதால ஒரு வருமானம் கிடைச்சிடுது. நாங்க கூட்டமாதான் போய் பொறுக்குவோம். மூங்கில் காட்டுல இருக்கிற பொம்மஅள்ளி அம்மன்தான் எங்களுக்கு காவலு” என்றார், சாமுண்டியம்மா.

வீட்டுக்குப்போக மீதி விற்பனைக்கு…

சாமுண்டியம்மாவுடன் இணைந்து நெல் பொறுக்கும் பணியில் இருந்தனர், சிக்கமல்லா-மாதம்மா தம்பதி. அவர்களிடம் பேசியபோது, “போன வருஷத்துல இருந்துதான் இங்க மூங்கில் நெல் கிடைக்குது. மரங்களின் வயசைப் பொறுத்து நெல் கிடைக்கும். இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்குக் கிடைக்கும். அடுத்து எப்போ கிடைக்கும்னெல்லாம் உறுதியா சொல்ல முடியாது. கிடைக்கிறப்போ பொறுக்கியெடுத்து வெச்சுக்குவோம். மரத்துல இருந்து உதிருற நெல்லைத்தான் பொறுக்க முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.