01/09/2018

பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் - மருத்துவ அறுவை சிகிச்சையில் (MEDICAL AND SURGERY OPRATION) நம் பழந்தமிழர்கள் முன்னோடிகள் என அறிவோம்...


ஒவ்வொன்றாக காயத்தை சரிசெய்யும் முறையான கிருமிநாசினி தடவுதல், புண்களை தையல் போடுதல் பின் பஞ்சுவைத்து கட்டுபோடுதல் என வரிசையாக காண்போம்.

ANTISEPTIC CLEAN...

பால்கொண்ட அத்தியெனவே உடல்வடுப்பட்ட எமர்

- (திருவெங்கைக் கோவை - 99)

ஆயுதங்களால் உண்டான காயங்களிலும் அறுவை சிகிச்சை நடத்த இடத்திலும் உலோக  நஞ்சை  முறிக்கும்   (ANTISEPTIC) மருந்தாகவும்,புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலைக்கே மாறவும் அத்திப்பால்  பயன்படுத்தினர். மேலும் வேம்பு இலையையும் பயன்படுத்தினர் பதிவின் நீளம் கருதி இங்கு கூறவில்லை.

WOUNDED STITCHES...

மீன்றேர் கொட்பிற் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள் ளுசி
நெடுவசி பரந்த உடுவாழ் மார்பின்
அம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ ரல்லது

- (பதிற்றுப்பத்து 42: 2முதல்5வரை)

இதில் தண்ணீருக்குள் இருக்கிற மீனைக் கொத்தி உண்பதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியிலேயே நீரைவிட்டு மேலே பறந்து வருகிற சிரல் பறவையைப் போல,ஒரு பெரிய ஊசி புண்ணுக்குள்ள நுழைந்து வெளியே வருதாம்.அதாவது புண்பட்ட இடத்தில் வெள்ளுசியை கொண்டு தையல் போடும் முறை புலவர் கூறுகிறார்.

இதை செய்து முடித்த பின் இப்போது போடபடும் பஞ்சு கட்டு (band-aid) அப்போதே போட்டுள்ளனர்.

COTTON DRUG PACK...

செருவா யுழக்கி குருதி யோட்டி
கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு
பஞ்சியும் களையாப் புண்ணர்
- (புறநானூறு-353)

அதாவது, பஞ்சு வைத்து கட்டிய புண் ஆறும் முன்பே மறுபடியும் போர்க்களத்திற்கு வந்து பஞ்சுக் கட்டுடனேயே வாளேந்தி போர் புரியும் வீரர்கள் வீரத்தை பறை சாற்றுகிறது மேற்கண்ட பாடல்.

அடுத்து நாம் காணபோவது உடலை அறுத்து சிகிச்சை செய்த சான்றுகள்.

BABY CESERIAN...

கொங்கு மண்டல சதகம் என்ற சிற்றிலக்கியத்தில் காந்தபுரம் என்ற ஒரு பகுதியை ஆண்ட வேந்தனின் மகள் பிள்ளையைப் பெற்றெடுக்க முடியாமல் பிரசவ வேதனையால் துன்பப்படுகிறாள்.
அப்பெண்ணின் வயிற்றைக் கிழித்துத் தன் திறமையால் குழந்தையை வெளியில் எடுத்தாளாம் மருத்துவச்சி ஒருவர்.

குறைவறு தெண்ணீர் நதியணை காந்த புரத்தொடுநல்
இறைமகளார் மகவீனப் பொறாது உடல் ஏங்க வகிர்
துறைவழி ஏற்று மகிழ்வூட்டும் அங்கலை தோன்றி வளர்
மறைவழி நேர் நறையூர் நாடுசூழ் கொங்கு மண்டலமே

- கொங்குமண்டல சதகம்

இப்பாடலில் கூறப்பட்டுள்ள ‘வகிர் துறைவழி’ என்பது வயிற்றை வகிர்ந்து ( கிழித்து) குழந்தையை வெளியில் எடுக்கும் மருத்துவமுறையை குறிக்கிறது. ‘துறை’ என்ற சொல் அக்காலத்தில் அறுவை மருத்துவத்துறை பரவலாக இருந்ததைக் காட்டுகிறது.

அறுவை மருத்துவத்துறை என்ற ஒரு துறை அக்காலத்தில் தோன்றி வளர்ந்து இருந்ததையும், ‘அங்கலை தோன்றி வளர் நேர் நறையூர்’ என்பது அரிய கலையான இம்மருத்துவ முறை, கொங்கு நாட்டின் நறையூரில் வளர்ந்து இருந்தது என்பதையும் குறிக்கிறது.

DEAD BODY RESEARCH...

செயம் பெறு சிங்கைநாடன் செகராசசேகரன் மா
லுயர்ந்தவாள் வடக்கார முருட்டிய களத்தின் மீதே
அயஞ் சிறிதுளதீர வளந்தளந தறிந்த தாமே.

- செகராசசேகரம்

அதாவது போர்க்களத்தில் செகராசசேகரனால் (1400களில் இலங்கையை ஆண்ட தமிழ்மன்னன்)
வெட்டிவீழ்த்தப்பட்ட வடக்கு அரசர்களின் உடல்களைக் கீறி, உறுப்புகளை எடுத்து, அளந்து அளந்து ஐயமின்றின் கற்றார்கள் என இப்பாடல் தெளிவாக கூறுகிறது.

இறுதியாக பதிவின் நீளம் கருதி சில இடங்களில் கண்ட செய்திகளை கூறுகிறேன்.

அம்பு சென்று துளைத்த உடலில் அம்பை எடுக்கும்போது அம்பு முனை உள்ளே சிக்கி குச்சி உடைந்துவிடும் அதன் மேல் நெய்தடவி வேறு ஒரு கத்தியையோ, கூர்மையான ஆயுதத்தையோ வைத்து எடுப்பர் என சீவக சிந்தமணி கூறுகிறது.

மேலும் பெரிய புண்கள் ஏற்பட்ட உடலை எலியின் நுண்மையான மயிரினால் நெய்யப்பட்ட ஆடையால் ஆகிய போர்வையை கொண்டு மூடுவர். எலி மயிர்போர்வை மிகுந்த வெப்பத்தை உடையது; குளிரை நீக்கக் கூடியது; அதனுள் காற்றும் புகாது. மென்மை உடையது என்றும் குறிப்பிடப்படுகிறது.

இறந்து போன தசரதனது உடம்பை, கேகய நாட்டுக்குச்சென்றுள்ள பரத சத்துருக்கனர் வந்து ஈமக்கடன் செய்யும் வரை கெடாமல் இருப்பதற்காகத் தைலத்தில் இட்டு வைத்ததைக் கூறுகிறது ராமாயணம்.

இதற்கு அப்புறம் தான், இதே மாதிரி இயேசுவின் உடம்பை தைல காப்பு கொண்டு வைத்தனர் என்பது நினைவு கூற வேண்டிய ஒன்று.

இங்கு பழந்தமிழர்களின் புலவர் மருத்துவ அறிவியல் மட்டுமே பகிரப்பட்டது இன்னும் சித்தர்கள் மருத்துவ முறை விளக்கினால் பதிவு பெரிதாகும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.