16/09/2018

ஹீலிங்...


மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன.

பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார் .

இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில் குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டுபிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார்.

இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம். இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நம்க்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.

நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.

முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்.

தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் தானாக அமைதியடையும்.

அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும்.

அமைதியான மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல் நலத்தைப் பாதுகாக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.