தமிழ்நாடு அரசோ சாராயம் விற்று நிதி சேர்க்கிறது...
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை..
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த 08.10.2018 அன்று புதுதில்லியில் இந்தியத் தலைமை அமைச்சர் திரு. நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்துக் கொடுத்த மனுவில் 20 கோரிக்கைகள் இருந்தன. அவற்றில் பல, சட்டப்படி தமிழ்நாட்டிற்கு இந்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாகத் தர வேண்டும் என்பவை ஆகும்.
1. கடந்த 14ஆவது நிதி ஆணையம் ஒதுக்கியபடி தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய 2017 – 2018 ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டு (Performance Grant) மானியத் தொகை ரூபாய் 560.15 கோடி. உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2018 – 2019 ஆண்டிற்குத் தர வேண்டிய அடிப்படைத் தொகை ரூ 1,608.03 கோடி. ஆகமொத்தம் உள்ளாட்சித் துறைக்கு நடுவண் அரசு தர வேண்டிய பாக்கித் தொகை ரூ 2,160.18 கோடி.
2. ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி) வசூலில் ஒன்றிய அரசும் மாநில அரசும் தலா 50 விழுக்காடு பகிர்வு கொள்ள வேண்டும். அதன்படி 2017 – 2018 நிதியாண்டில் (2018 மார்ச்சுடன் முடிவடைந்த நிதி ஆண்டு) தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய 5,426 கோடி ரூபாயை இன்னும் தரவில்லை ஒன்றிய அரசு. கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த 2018 – 2019 முதல்பாதி நிதியாண்டிற்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி. வரி வசூல் பங்குத் தொகையையும் இந்திய அரசு இன்னும் தரவில்லை.
3. கடந்த 13 ஆவது நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு 21 திட்டங்களுக்கு ஒதுக்கிய தொகையில் 8,699 கோடி ரூபாய் இன்னும் வரவில்லை. 13ஆவது நிதி ஆணையக் காலம் முடிந்து, 14ஆவது நிதி ஆணையக் காலமும் முடிவெய்தி 15ஆவது நிதி ஆணையம் செயல்பாட்டிற்கு வர உள்ள நிலையில் 13ஆவது நிதி ஆணையம் ஒதுக்கிய நிதியில் இன்னும் நிலுவை உள்ளது.
4. 14 ஆவது நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு உரியவாறு நிதி ஒதுக்கி ஞாயம் வழங்கவில்லை என்பதற்காக அதை ஈடுகட்ட ரூ 2,000 கோடி தனி ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. அத்தொகையை இன்னும் தரவில்லை.
5. பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பத்தாம் வகுப்பிற்கு மேல் கல்வி தொடர்வதற்கு – நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கும் உதவி தொகையில் ஒன்றிய அரசு 60 விழுக்காடு நிதி தரவேண்டும். மாநில அரசு 40 விழுக்காடு நிதி தரவேண்டும். ஒன்றிய அரசு 2017 – 2018 நிதி ஆண்டில் இம்மாணவர்களுக்கு தர வேண்டிய ரூபாய் 985.78 கோடி ரூபாயை இன்னும் தரவில்லை.
மேற்கண்ட ஐந்து வகை இனங்களில் மட்டும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிலுவைத் தொகை மொத்தம் - 19,278.96 கோடி ரூபாய்! (இதில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வர வேண்டிய ஜி.எஸ்.டி. வரிப் பங்குத் தொகை சேர்க்கப்படவில்லை. அது எவ்வளவு ரூபாய் என்ற கணக்கை அரசு வெளியிடவில்லை).
இந்தியாவிலேயே இந்திய அரசுக்கு அதிக வரி வசூல் தரும் மாநிலம் தமிழ்நாடு! சென்னைப் பல்கலைக்கழகப் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம் “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழில் எழுதிய கட்டுரையில் ஓர் ஆண்டில் இந்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 31 விழுக்காடு என்று கூறி இருந்தார். (Times of India, 05.09.2018). அதேவேளை இந்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தொகை 3 விழுக்காடு என்று குறிப்பிட்டிருந்தார்.
ஏட்டுக் கணக்குப்படி தில்லியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருவதாகக் கூறப்பட்ட 3 விழுக்காட்டுத் தொகையில் 19,278.96 கோடி ரூபாய் வரவில்லை.
1947 ஆகத்து 15க்கு முன் இவ்வாறு தமிழ்நாட்டு நிதியை இலண்டனில் இருந்து கொண்டு வேட்டையாடினால் அது ஏகாதிபத்தியச் சுரண்டல்! இப்போது புதுதில்லியிலிருந்து கொண்டு வேட்டையாடினால் இது இந்தியத் தேசிய வளர்ச்சியா? அதுவும் இதுவும் காலனியச் சுரண்டல் தான்.
இந்திய ஆளுங்கட்சியுடன் நல்லுறவு கொண்டு தமிழ்நாட்டிற்கு நலன்கள் சேர்க்கிறோம் என்று கூறும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் சாதித்தது இது தான்! தலைமை அமைச்சரைச் சந்திக்க அனுமதி கேட்டுத் தவமிருந்து ஆறு மாதங்களுக்குப் பின் சந்திக்க “அனுக்கிரகம்” பெற்று பணிந்து சமர்ப்பித்த வேண்டுகோள் விண்ணப்பத்தில் தான் மேற்கண்ட நிலுவைத் தொகைகளைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் பட்டியலிட்டுள்ளார்.
ஒரு கழகம் இன்னொரு கழகத்தைத் தாக்கி வசைமாரி பொழிவதையே தமிழ்நாட்டு அரசியலாக்கிய திராவிடக் கட்சிகள் – அந்தத் தொற்று நோயை மற்ற கட்சிகளுக்கும் பரப்பிவிட்டன.
இந்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதையும், தமிழ்நாட்டு வளங்களைச் சூறையாடுவதையும், இன அடிப்படையில் தமிழர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதையும் உரியவாறு எதிர்க்காமல் தங்களுக்குள் மட்டும் பதவிச் சண்டை இட்டுக் கொண்டு தில்லிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சேவகம் செய்கின்றன தமிழ்நாட்டுக் கட்சிகள்.
தமிழ்நாட்டு மக்கள் நலத்திட்டங்களுக்காக சாராயம் விற்கிறோம் என்று கூறுகின்றன அ.தி.மு.க.வும் தி.மு.க.வும்.
வாக்குறுதி தந்தபடி சிறப்பு நிதி ஆந்திரப் பிரதேசத்துக்கு மோடி அரசு தரவில்லை என்றவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, மோடி அரசை வீழ்த்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தது தெலுங்கு தேசம் கட்சி.
தமிழ்நாட்டு அரசியல் சீரழிவைக் கலையாமல் தமிழர்களுக்க எதிர்காலம் இல்லை. நாமும் தமிழ்நாட்டுக் கழகங்களையும் கட்சிகளையும் குற்றம் சொல்வதை முதன்மையாக்கிக் கொள்ளாமல் தமிழின உணர்வும், உரிமை கோரும் விழிப்புணர்வும் பெற்று கோடிக்கணக்கான தமிழர்களை இலட்சியப் பிடிப்புள்ள தமிழ்த்தேசியத்தின்பால் திருப்பிட முன் வர வேண்டும்! தமிழர் உரிமைக் களத்தை வலுப்படுத்த வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.