14/10/2018

தியானம் - அட்டாங்க யோகம்...



தியானம்...

கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே -- 599

விளக்கம்...

ஞானத்துக்குக் கருவியாக நிற்கும் கண், வாய், மூக்கு, காது இவைகளின் சத்திகள் ஒன்று சேரும் கூட்டத்துள் பக்குவப்படுத்திக் கொண்டு நின்ற பழமையாகிய பொருள் ஒன்று உண்டு.  அண்ணாக்காகிய பிரணவத்தின் கண் அகண்டாகாரமாகிய பிரகாசத்தை சாதனா சம்பந்தமானவர்களுக்கு பிரத்தியட்சமாய்க்காட்டி முதலில் வருத்தி நம்மைப் பிழைப்பித்த வழியிதுவே.

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண்டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலுமாமே -- 600

விளக்கம்...

சமானமில்லாத நேத்திரத்தில் பொருந்திய பிரகாசத்தை நேத்திரத்தினாலேயே ஊன்றிப் பார்த்து அதோடு கலந்து இருப்பதினாலே தேவாமிர்தமானது வெளியில் உதிர்திறங்கிட யாவராலும் செய்யப்படாத சிவம் நின்றிருப்பதைப் பார்க்கலாம்.

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே -- 602

விளக்கம்...

மனமாகிய விளக்கை, இருட்டு நீங்க மேலேயேற்றி உக்கிரத்தோடு கூடிய சூரிய சந்திர தீபங்களை மேற்செல்லும்படி நெருக்கி, எல்லா விளக்குகளையும் (சூரியன், சந்திரன், அக்கினி, பஞ்சாக்கினி) அறிவாகிய பிரணவத்தில் சேரும்படித் தூண்ட மனமாகிய விளக்கு அழியாத சிவாக்கினியாக விளக்காகும்.

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருப்பினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உன் நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே. -- 603

விளக்கம்...

எண்ணாயிரம் வருடம் வரை யோகத்திலிருந்த போதிலும், கண்ணிறைய பரசிவத்தைக் கண்டு அறிந்து கொள்பவர்கள் கிடையாது.  உள்முகமாகப் பார்வையைத் திருப்பி உள்ளே பிரகாசமானது வந்து சேரப் பார்த்தால் கண்ணாடியில் பிரதிபிம்பம் தோன்றுவதுபோல கலந்திருந்தான் பரமசிவம்.

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லைத் தானில்லை
தேட்டமும் இல்லை சிவனவ னாமே -- 604

விளக்கம்...

ஒருவன் பார்வையிரண்டையும் பிரணவத்தினுடைய மூக்கின் நுனி நடுவில் பொருந்தும்படி வைத்தால் தளர்ச்சியடைய வேண்டியதுமில்லை.  தேகத்துக்குச் சிதைவும் கிடையாது.  வேகமுமடங்கிவிடும்.  அறியுந்தன்மையுமில்லை தானேன்பதும் இல்லை.  ஆராய்ச்சி செய்ய வேண்டியதுமில்லை.  சிவனே அவனாகியிருப்பான்.

நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்
டுயர் வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே -- 605

விளக்கம்...

பார்வையிரண்டையும் முன் சொன்னபடி பிரணவ நுனியில் வைத்து விட்டு கீழேயிறங்காத உயர்ந்த பிராண வாயுவை நடு வீட்டில் சேர்த்து அதை துக்கமாகிய சரமானது ஒழிய அசைவற்ற பார்வையோடு பார்த்துக் கொண்டு தூங்குகிறவர்களுக்கு காயமானது பிரயோசனத்தைக் கொடுக்கும் நாசமாகிறதென்னும் பயமுமில்லை.

மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணி ந்தவர்க் அல்லது பார்க்க ஒண்ணாதே -- 606

விளக்கம்...

கெண்டாமணியின் ஓசையும், கடல் ஓசையும், யானையின் முழக்கமும், நாதத்தை விருத்தி செய்யும் புல்லாங் குழலின் ஓசையும் மேகக்கர்ச்சனையும், அழகு பொருந்திய வண்டுகளின் ரீங்கார சத்தமும், கருவண்டின் பறக்கும் ஓசையும், சங்கின் ஓசையும், பேரிகைச் சத்ததும், வீணையின் நாதமும் ஆகிய பத்துவகை நாதங்களும் அடக்க மாயிருந்தது எழும்பும் குருநாதரை வணங்கி அவர் உபதேசித்தாலல்லது உற்பத்தியைப் பார்க்கவும், நாதத்தைக் கேட்கவும் இயலாது.

கடலொடு மேகங் களிறெடும்ஓசை
அடவெழும் வீணை அண்டரண் டத்துச்
சுடர்மனு வேனுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே -- 607

விளக்கம்...

கடலின் அலையோசையும் மதம் பிடித்த யானைகள் ஒன்றோடொன்று போராடுவதில் எழும்பின ஓசையும் அண்டத்திலும் அண்டத்துக்கு மேல் சோதியானது பொருந்தியிருக்கும் துவாதசாந்த வெளியில் வேணுநாதமும் வலம் புரிச்சங்கின் ஓசையும் திடத்தையறிந்த யோகிக்கு அல்லாமல் மற்றோர்க்குத் தெரியாது.

நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே -- 609

விளக்கம்...

ஓசையின் முடிவிலே நன்மையைக் கொடுப்பவளாகிய சத்தியிருப்பாள்.  ஓசையின் முடிவில் நன்மையைக் கொடுக்கும் யோகமானது இருக்கும்.  ஓசையின் முடிவிலே பார்வையின் சத்தியானது இருக்கிறது.  ஓசையின் முடிவிலே விஷத்தை உண்ட பரமசிவன் இருக்கிறான்.

பள்ளி அறையிற் பகலே இருளில்லை
கொள்ளி அறையிற் கொளுத் தாமற் காக்கலாம்
ஒள்ளி தறியிலோ ரோசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவில்லை தானே -- 611

விளக்கம்...

நேத்திரத்தில் (முக்கிறந்திகளையும் இருட்டையும் தாண்டின பிறகு) பகலைத் தவிர இருட்டு என்பது கிடையாது.  சதாபிரகாசத்தையுடைய அக்கினியுள்ள அறையில் பற்றிக் கொள்ளாமல் காத்துக் கொள்ளலாம்.  இந்த அக்கினியானது பிரகாசத்தையுடைய அறிவாகிய பிரணவத்தின் மத்தியில் யோசனைதூரமாக நீண்டிருக்கின்றது.  சதா பகலாயிருக்கும் அறையில் விடியவில்லை என்பதே கிடையாது.

குறிப்பு:  கண் இருட்டினாலேயே இருட்டும் வெளிச்சமும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப் பெரும் பாசத் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றாம தாமே -- 614

விளக்கம்: (தெரிசனம் ஆகவில்லையென்று) மனஞ்சோர்ந்து போனவன் இருளால் சூழப்பட்ட நேத்திரத்திற்குள்ளே உதித்து எழும்புகின்ற சூரிய சந்திர அக்கினி மண்டலங்கள் மூன்றிலும் சுழிமுனை துவாரமானது பொருந்தி பெரிய பாசத்தினுடைய துருவாகிய இருட்டு நீங்கிப்போனால் கஷ்டமில்லாமல் மார்கழி மாசத்திய ராசியாகிய தனுசு என்கிற வில்லின் ஏற்றமாகும்.

வில்லின் வளைவுக்கு உவமானித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.