புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவற்றவர்களின் சடலங்களை எடுத்துச் சென்று சொந்த செலவில் அடக்கம் செய்து வருகிறார் ஒரு முதியவர். வறுமையிலும் சேவையைத் தொடரும் அவரின் தொண்டுள்ளம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
ஒல்லியான தேகம், கசங்கிய ஆடைகள் என காட்சியளிக்கும் இவர்தான் 515 கணேசன். தனக்குச் சொந்தமான பழைய அம்பாசிடர் காரில் ஆதரவற்றவர்களின் சடலங்களை எடுத்துச் சென்று சொந்த செலவில் அடக்கம் செய்வது, கர்பிணிப் பெண்களை மகப்பேறு சிகிச்சைக்கு இலவசமாக அழைத்துச் செல்வது, வறுமையில் வாடும் ஏழை நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கணேசன் செய்து வரும் சமூக சேவைகளின் பட்டியல் வெகு நீளம்.
சரி அதென்ன ‘515’ கணேசன் ? 515 என்பது சமூக சேவைக்காக முதன் முதலில் வாங்கிய தனது அம்பாசிடர் காரின் பதிவெண் என்கிறார் கணேசன். 1968ஆம் ஆண்டில் ஓர் நாள் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் இறந்த ஒருவரின் சடலத்தை வீட்டில் கொண்டு சேர்க்க முடியாமல் ஏழை குடும்பம் ஒன்று தத்தளித்ததை பார்த்திருக்கிறார் கணேசன்.
இந்தக் காட்சி அவரை வெகுவாக பாதிக்கவே, தனது பழைய இரும்புக் கடையில் இருந்த இரும்புகளை விலைக்குப் போட்டு அம்பாசிடர் கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவை செய்ய உதவிய அந்தக் கார் பழுதாகவே, அதனை விற்றுவிட்டு பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கி தனது சேவையை தொடர்ந்திருக்கிறார் கணேசன். அதன் பிறகு சில சமூக ஆர்வலர்கள் ஒரு காரை அன்பளிப்பாக அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பிரபலமான, தனது சேவைக்காக ஏராளமான விருதுகளை வாங்கியுள்ள கணேசனுக்கு சொந்தமாக ஒரு வீடுகூட இல்லை என்பதுதான் சோகம். 4 பெண்களுக்கு தந்தையான கணேசனின் ஒரே ஆசை, தனது இறுதி மூச்சு வரை பிறருக்கு சேவை செய்யும் பலத்தை கடவுள் தனக்கு வழங்க வேண்டும் என்பதுதான்.
புரட்டி எடுக்கும் வறுமையிலும் சமூக சேவையை சலிப்புறாமல் செய்து வரும் கணேசன் தற்சமயம் தனது கார்களை பராமரிக்க வழியின்றி தவித்து வருவதாகக் கூறுகிறார்.
‘இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே’ என்று ஒரு கூற்று உள்ளது. இங்கே பெரிதாக எதுவுமே இல்லாத ஒருவர் இருப்பதை வைத்து சேவை செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.