ஸ்ரீவைகுண்டத்தில் சீட்டு நடத்தி பலலட்சம் ரூபாயை மோசடி செய்துவிட்டு தலைமறைவான தம்பதியரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகன் பாலாஜி (36). பாலாஜி, தனது மனைவி சுலோச்சனா (32) மற்றும் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஏலச்சீட்டு கம்பெனி நடத்தி வந்தார். இந்த சீட்டுக் கம்பெனியில் ஸ்ரீவைகுண்டம், முன்னீர் காலனி, புதுக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்டவர்கள் ரூ.50ஆயிரம், ரூ.1லட்சம், ரூ.2லட்சம், ரூ.3லட்சம் என்ற நான்கு பிரிவுகளின் அடிப்படையில் சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தனர்.
கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக சீட்டுப்பணம் செலுத்தி வந்தநிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் சீட்டு ஏலம் முடிவடையவும் உள்ளது. இதனால் பணம் கட்டியவர்கள் தங்களுக்கு லட்சக்கணக்கில் சீட்டுப்பணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 1ம் தேதி இரவு பாலாஜி தனது மனைவி சுலோச்சனா, தனது குழந்தைகள் மற்றும் மாமனார் முருகன், மாமியார் ராணி உள்ளிட்ட குடும்பத்தினருடன் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். இதனையறிந்த சீட்டுப்பணம் கட்டியவர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களான ஞானதுரை, ஆசீர், திருநாவுக்கரசு ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துாரி, எஸ்.பி., முரளி ரம்பா, ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி., சகாயஜோஸ் மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரில் எஸ்.பி., உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சீட்டு நடத்தி பல லட்சத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவான பாலாஜி, அவரது மனைவி சுலோச்சனா, பாலாஜியின் பெற்றோர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், பாலாஜி தனது குடும்பத்தினருடன் கேரளாவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவரை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தலைமறைவான தம்பதியரை வலைவீசி தேடி வருகின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.