காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்ற பழமொழி காய்ச்சலின் கொடுமையை மிக எளிதாய் உணர்த்துகின்றது.
காய்ச்சல் வந்தாலே உடலை சோர்வாக்கி ஆளை படுத்த படுக்கை ஆக்கி விடும்.
உண்மையில் காய்ச்சல் என்பது ஒரு நோய் அல்ல அது ஒரு போர்களத்தின் உஷ்ணம்.
நமது உடலில் உள்ள நல்ல நோய் எதிர்ப்பு சக்திக்கும் வெளியில் இருந்து வரும் கெட்ட கிருமிகளுக்கும் நடக்கும் போராட்டத்தின் விளைவே காய்ச்சல் ஆகும்.
இந்த போராட்டத்தின் தன்மையை பொறுத்து உடலின் வெப்பம் அதிகரிக்கும். மிகப் பெரிய பெரிய போராட்டமாய் இருந்தால் உடலின் வெப்பம் 100 டிகிரிக்கு மேல் கொதிக்கும். காய்ச்சல் ஏற்படும் நாட்கள் மற்றும் அதன் தன்மையை பொறுத்து காய்ச்சலின் வீரியத்தை கண்டறியலாம்.
இந்த காலகட்டத்தில் தினம் தினம் ஒரு புது பெயரில் காய்ச்சல் வருகின்றது. அதுவும் குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். இந்த கால உணவு முறைகளில் ஏற்பட்ட அபரிமிதமான மாற்றம் தினம் ஒரு புது நோய்க்கு வழிகோலுகின்றது. முந்தைய காலங்களில் உணவே மருந்தாய் நம் முன்னோர்கள் உண்டு வந்தனர். இந்த காலத்தில் உணவை விஷமாய் உண்டு வருகிறோம். அதன் காரணமாகவே நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படுகிறது. அதனால் மிக எளிதில் காய்ச்சல் தொற்றிக் கொள்கிறது.
தீவிர காய்ச்சலை மிக சாதரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் அளவுக்கு சென்று விடும். இயற்கை மருந்தை எடுத்துக் கொண்டாலும் அல்லது இரசாயன மருந்தை எடுத்துக் கொண்டாலும் அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரிடம் சென்று விட வேண்டும். மருத்துவரிடம் காய்ச்சலுக்கு முந்தைய நாளின் அறிகுறியில் இருந்து நீங்கள் எடுத்துக் கொண்ட மருந்துகள் வரை அனைத்தையும் தெளிவாய் சொல்லி மருத்துவம் பார்க்க வேண்டும்.
பொதுவாகவே குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் நோய் எதிப்பு சக்தி குறைவாகவே காணப்படும். அதனால் இவர்களுக்கு காய்ச்சல் அடித்தால் சாதரணமாக விட்டு விடக் கூடாது. குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் இயற்கை நோய் எதிர்ப்பு உணவுகளை தினம் கொடுத்து அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்ட வேண்டும்.
குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் வலிப்பும் வந்தால் உடனடியாக மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும். அது ஃபெப்ரைல் ஃபிட்ஸ் ஆக இருக்கக்கூடும். மிக கவனத்துடன் பார்க்க வேண்டிய காய்ச்சல் இது.
குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் மூட்டு வலியும் சேர்ந்து வரலாம். இந்த காய்ச்சல் ருமாட்டிக் காய்ச்சலாக (Rheumatic Fever) இருக்கக்கூடும். இந்த ருமாட்டிக் காய்ச்சல் வந்தால் ஒரு நாலைந்து நாட்கள் ஆளை படுக்க வைத்து விடும். பின்பு குணமாகிவிடும். ஆனால் ருமாட்டிக் காய்ச்சலுக்கு மருத்துவம் பார்க்காமல் சாதாரணக் காய்ச்சலுக்கு மருத்துவம் பார்த்து விட்டு விட்டால் அது பிற்காலத்தில் அதாவது ஒரு பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு பிறகு இதய நோயில் கொண்டு போய் விட்டு விடும். இதய வால்வில் அடைப்பு என இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். இதை போன்று காய்ச்சலுடன் மூட்டு வலியும் சேர்ந்து வந்தால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ருமாட்டிக் காய்ச்சலுக்கான பரிசோதனையும் பார்க்கப்படுகின்றது. மற்ற நாடுகளில் இதற்கான விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை.
அடிக்கடி காய்ச்சல் களைப்பு வந்தால் அது காசநோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். அல்லது புற்றுநோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். காய்ச்சல் என்று இல்லை எந்த நோயும் அடிக்கடி வந்தால் அது சம்பந்தமாய் முழு பரிசோதனை செய்து கொள்வது மிக மிக அவசியம்.
பெரும்பாலனோர்க்கு லேசான காய்ச்சல் அடித்தால் தாமாகவே உடனே ஒரு பாரசிட்டமால் போட்டுக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. குழந்தைகளுக்கும் இதைப் போன்றே உடனே பாரசிட்டமால் கொடுக்கிறார்கள். நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை நாமாகவே கெடுத்துக் கொள்ளும் தவறான அணுகுமுறை இது. இதை தவிர்த்து விட்டு உடம்புக்குள் இயற்கை மருந்துகள் கொடுத்து, உடம்புக்கு வெளியில் சுத்தமான துணியை நல்ல நீரில் நனைத்து பிழிந்து அக்குள்களில் வைத்துக் கொள்ளலாம். அந்த துணியை நீளமாக மடித்து நெற்றியில் பற்றுப் போடலாம். மேலே கூறியது போல் அதிக காய்ச்சல் அடித்தாலோ, நடுக்கம் வந்தாலோ, உளறல் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
காய்ச்சலுக்கு நம் வீட்டிலேயே உள்ள பொருட்களைக் கொண்டு இயற்கை மருந்துகள் செய்து கொடுக்கலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும்.
காய்ச்சல் குணமாக மிளகு மருந்து...
காய்ச்சல் குணமாக மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதை வாணலியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு நன்கு வறுபட்டு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் இறக்கி மத்தை வைத்து முடிந்த அளவு கடைந்து மீண்டும் அடுப்பில் வைத்து அதில் இரண்டு டம்ளர் குடிநீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வற்றி பாதியானது இறக்கி விடலாம். இந்த மிளகு கஷாய நீரை ஆற வைத்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கால் டம்ளர் குடித்தால் காய்ச்சல் குணமாகும். ஒவ்வொரு முறை குடிக்கும் முன் லேசாக சுட வைத்து இளஞ்சூட்டில் குடித்தல் நல்லது. இந்த மருத்துவத்தை மொத்தமாக செய்து வைத்துக் குடிக்காமல் தினம் தினம் புதிதாக தயார் செய்து குடித்து வந்தால் நலம். இரண்டே நாட்களில் காய்ச்சல் குணமாகும். மிளகின் காரம் அதிகம் இருந்தால் அதில் சிறிது சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
காய்ச்சல் குணமாக சீரகம், மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை மருந்து...
காய்ச்சல் குணமாக சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் கறிவேப்பிலை ஒரு கையளவு சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும். அரைத்த கலவை மை போன்று இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த காய்ச்சல் மருந்தை ஒரு சிறிய நெல்லிக்கனி அளவு எடுத்து காலையும் மாலையும் வாயில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீர் குடித்து வர காய்ச்சல் குணமாகும்.
காய்ச்சல் குணமாக வல்லாரை, மிளகு, துளசி மருந்து...
வல்லாரை இலை, துளசி இலை மற்றும் மிளகு ஆகியவற்றை ஒரு கைப்பிடி வீதம் எடுத்துக் கொண்டு நன்கு அரைக்க வேண்டும். மை போல் அரைத்த பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின் காய்ச்சல் உள்ளவர்களுக்கு வேளைக்கு ஒரு உருண்டை வீதம் வாயில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை அருந்தச் செய்தால் காய்ச்சல் குணமாகும்.
காய்ச்சல் குணமாக துளசி, இஞ்சி மருந்து...
காய்ச்சல் குணமாக துளசி இலை சாறும், இஞ்சி சாறும் சரி பங்கில் கலந்து வேளைக்கு கால் டம்ளர் வீதம் குடித்து வர காய்ச்சல் குணமாகும்.
காய்ச்சல் குணமாக பார்லி அரிசி, பால் மருந்து.
காய்ச்சல் குணமாக பார்லி அரிசி வாங்கி சாதம் வைப்பது போல் தண்ணீருக்கு பதில் பாலில் வேக வைத்து கொடுக்கலாம். காய்ச்சல் அடிக்கும் போது நாவில் ருசி அவ்வளவாக இருக்காது. சாப்பாடும் சாப்பிட தோன்றாது. அந்த மாதிரி சமயங்களில் இந்த பார்லி பால் சாதம் கை கொடுக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.