காரணகுரு... காரியகுரு...
'கு' ஆகிய இருளிலிருந்து 'ரு' ஆகிய வெளிச்சத்தைக் காட்டக்கூடிய ஆற்றல் பெற்றவரே குரு என்பவர். உலகில் காரணகுரு, காரியகுரு என இருவகையினர் உள்ளனர்.
காரியகுரு...
காரியகுரு எனப்படுபவர் சில சித்திகளை கைவரப் பெற்று, முற்றுப் பெறாமல் பொருளை இச்சித்து செயல்படுவராவர். காரியகுருவாகியவர் தவறாகப் போதிப்பவரே உண்மையில் 'குருடு' என்ற தமிழ்ப்பதத்திற்குப் பொருத்தமானவர். கண் பார்வையற்றவரைக் 'குருடு' என்பது தவறான சொற் பிரயோகமாகும். இப்போலிக் குருவாகிய குருடுகளை ஆசான் திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.
- திருமந்திரம் (10.6.105)
காரணகுரு...
எந்தப் பொருளின் மீதும் பற்றற்று இருப்பவரே காரணகுரு ஆவார். ஞானபண்டிதன் முருகப்பெருமானின் சீடர்களான முற்றுப்பெற்ற சித்தர்களே காரணகுரு ஆவார்கள். மகான் அகத்தீசர், மகான் நந்தீசர், மகான் திருமூலதேவர், மகான் போகர், மகான் கருவூர்தேவர், மகான் பட்டினத்தார், மகான் சிவவாக்கியார், மகான் காலாங்கிநாதர், மகான் வள்ளலார் போன்ற ஞானிகளே காரணகுரு ஆவார்கள். ஆசான் அகத்தீசரின் ஆசிபெற்ற ஒன்பது கோடி ஞானிகளும் காரணகுரு ஆவார்கள்.
அத்தகு காரணகுருவின் திருவடிப்பற்றி பூசித்து ஆசிமாறாமல் உடம்பைப் பற்றியும், உயிரைப் பற்றியும் அறிய முடியாது. சத்தைப் பற்றியும், அசத்தைப் பற்றியும் அறிய முடியாது.
காலம் உள்ள போதே அதாவது இளமை இருக்கும் போதே காரண குருவை அறிந்து, அவரது உபதேசத்தைப் பெற்றுப் பிறவி ப்பிணியை நீக்கிக் கொள்ள வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.