கரீபியன் பகுதி அமெரிக்கக் குடியரசு, இலத்தின் அமெரிக்க நாடுகளின் அருகில் இருக்கிறது.
இப்பகுதியில் டிரினிடாட், டொபாகோ கயானா, சூரிநாம், ஜமைக்கா, கிரெனடா, குவாடிலோப், மார்தினீக், அங்குயிலா போன்ற நாடுகள் இருக்கின்றன.
வெளிசூலா கடற்கரை அருகிலேயே டிரினிடாட், டொபாகோ முதலிய இரண்டு தீவுகள் இருக்கின்றன.
இவை தென் அமெரிக்கத் தலைநிலப்பரப்புப் பகுதியில் இருக்கின்றன.
கயானாவின் மேற்கே வெனிசூலாவும், கிழக்கே சூரிநாமும், தெற்கே பிரேசில் நாடும் இருக்கின்றன.
டச்சு கயானா என்று அழைக்கப்படும் சூரிநாம், பிரேசில், கயானா அருகில் இருக்கிறது.
கரீபியன் பகுதியில் பரப்பளவில் மூன்றாவது இடத்தை ஜமைக்கா பிடித்திருக்கிறது. ஜமைக்கா, கியூபா நாட்டின் அருகில் இருக்கிறது.
தமிழர் குடியேறிய வரலாறு..
கரீபிய நாடுகளில் தமிழர்களுக்கு முன்பாக தோட்டங்களில் ஆப்ரிக்கர்களே வேலை செய்து வந்தனர்.
1834-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ஆப்ரிக்கர்களின் அடிமைவாழ்வு முடிந்து தோட்டங்களை விட்டு வெளியேறியவுடன், வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.
இந்தியாவிலிருந்து பிரஞ்சு குடியேற்றங்களுக்கு நிறையபேர் அனுப்பப்படுவதை கேள்விப்பட்ட ஆங்கிலேயர்கள் தாமும், இந்தியாவிலிருந் தொழிலாளர்களை இறக்குமதி செய்தனர்.
இதன் விளைவாக 1938-ஆம் ஆண்டு இந்தியக் கூலிகள் கயானாவுக்கு அழைத்துவரப்பட்டனர்.
பிறகு 1845-ஆம் ஆண்டு டிரினிடாட் டுபாக்கோவிலும், 1873-ஆம் ஆண்டு சூரிநாம், ஜமைக்கா நாடுகளுக்கும் இந்தியக் கூலிகள் கொண்டு வரப்பட்டனர்.
இவ்வாறு வந்திறங்கிய இந்தியக் கூலிகள் சிலர் இத்தீவுகளிலிருந்து கிரானடா நாட்டிற்கும் சென்றனர்.
கயானாவிலிருந்து இரண்டு பெரிய தோட்ட முதலாளியான ஜான் கிளாட்ஸ்டோன், கிளினெல்பிரபு என்பவரின் துணையோடு இந்தியாவிலிருந்து ஒப்பந்தக் கூலிகளைக் கொண்டுவரத் தொடங்கினார்.
இதன் பயனால் 156 ஒப்பந்தக் கூலிகள் இந்தியாவிலிருந்து கிளம்பி ஹெஸ்பரஸ் என்னும் கப்பலில் 1838-ஆம் ஆண்டு கயானாவில் வந்து இறங்கிய கூலிகள் மொத்தம் 156 பேர்.
அதே மாதத்தில் விட்பை என்னும் கப்பலும் 263 கூலிகளைக் கொண்டு வந்து இறக்கியது.
முதற் கப்பல் கொண்டு வந்த கூலிகளைக் தோட்ட முதலாளியான கிளாட்ஸ்டோன் டெமராரா நதிக் கரையில் உள்ள வி.எம்.வூப், வீடஸ்டீன் என்ற தோட்டங்களுக்கும் எசிக்யூபோ நதிக்கரையில் உள்ள அன்னாரி ஜ"னாவிற்கும் அனுப்பி வைத்தார்.
விட்பை ஏற்றி வந்த கூலிகளை டெமராராவில் உள்ள பெலிவ்யூ என்னும் தோட்டத்திற்கும், எசிக்யூபோ நதிக்கரையில் உள்ள ஹைபரி, வாடர்லூ என்னும் தோட்டங்களுக்கும் அனுப்பி வைத்தார்.
இவ்வாறு 1838-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தியக் கூலிகளின் கயானா வருகை 1917-ஆம் ஆண்டோடு முடிவடைந்தது.
இந்த என்பது ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வந்த கூலிகள் பலர் மேற்கிந்தியத் தீவுகளான டிரினிடாட், ஜமைக்கா, செயிண்ட் லூசியா, குவாடிலோப், மார்த்தினிக்கிற்கும், கயானாவின் கிழக்கில் உள்ள சூரிநாமிற்கும் அனுப்பப்பட்டனர்.
1838-ஆம் ஆண்டு தொடங்கி 1917-ஆம் ஆண்டு வரை கயானாவிற்கு மட்டும் வந்த இந்தியர்களின் தொகை 2,38,979 ஆகும்.
டிரினிடாட்..
டிரினிடாட்டிற்கு முதன் முதலாக 1845-இல் இந்தியர்கள் வந்து குடியேறினார்கள்.
பேட்டல் ரோசாக் எனும் கப்பலில் 1845-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் நாள் போர்ட் ஆப் ஸ்பைன் துறைமுகத்தில் முதலாவது வந்த 225 இந்தியர்கள் இறங்கினார்கள்.
இந்தியர்கள் முதல் முதலாக டிரினிடாட்டிற்கு வந்த தினம் முதல் முறையாக 1978-இல் கொண்டாடப்பட்டது.
ஜமைக்கா..
1845-ஆம் ஆண்டு மே திங்கள் 9-ஆம் நாள் 200 இந்திய ஆண்கள், 28 இந்திய பெண்கள், 16 சிறுவர்கள் செயிண்ட் கேதரைனிலுள்ள பழைய துறைமுகத்தில் முதன் முதலாக வந்திறங்கினார்கள்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 4,550 இந்தியர்கள் ஜமைக்காவில் வந்து குடியேறினார்கள்.
1845-1917 ஆம் ஆண்டுகளுக்கிடையே 36,412 இந்தியர்கள் ஜமைக்காவிற்கு வந்து குடியேறினார்கள்.
சூரிநாம்..
தென் அமெரிக்கத் தலை நிலப்பரப்பிலிருக்கும் சூரிநாம் மட்டும் டச்சுக்குடியேற்றப் பகுதியாக இருந்தது.
1853-1939 ஆம் ஆண்டுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்துகொண்ட 74,000 கூலிகள் சூரிநாமிற்குக் கொண்டு வரப்பட்டனர்.
இதில் இந்தியாவிலிருந்து சென்றவர்கள் 46% பேர்கள்.
கிரானடா..
1857-1917 ஆம் ஆண்டுகளுக்கிடையே சுமார் 2,750 இந்தியக் கூலியாட்கள் இத்தீவிற்கு வந்து குடியேறினார்கள்.
இவர்கள் பிற கரீபியன் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டனர்.
ஆனாலும் தேவைக்கேற்ப மிகுதியான கூலியாட்கள் கிடைக்காததால், பல கரும்புத் தோட்டங்கள் வளர்ச்சியடைந்த போதிலும், பொதுவாக இத்தீவின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் தோன்றவில்லை.
மார்டினிக்தீவு..
காரைக்கால், பாண்டிச்சேரி பகுதியிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக 10,063 பேர் 1874-ஆம் ஆண்டில் மார்டினிக் சென்றுள்ளனர்.
இங்கிருந்து குவாடலோப் முதலிய தீவுகளுக்கும் சென்றுள்ளனர்.
தமிழரின் இன்றைய நிலை...
சமயம்..
கரீபிய நாடுகளில் மாரியம்மன், காளி, மதுரை வீரன் கோயில்கள் கட்டாயம் இருக்கும்.
ஏனெனில் தொழிலாளர்களாக சென்ற தமிழர்களில் முக்கால்வாசிபேர் சமூகத்தின் அடித்தட்டில் இருந்து சென்றவர்கள்.
மற்றும் சிலர் மதம்மாறி கிறிஸ்தவர்களானார்கள்.
ஒவ்வொரு தோட்டத்திலும் இத்தெய்வங்களைக் காணலாம்.
இந்துக் கோயில்களைக்கூட "சர்ச்" என்றே அழைக்கின்றனர்.
பெரும்பான்மையான கோயில்கள் சர்ச் பாணியிலேயே இருக்கின்றன. சிலைகளுக்கு பதிலாக படங்களே இருக்கின்றன.
'சேவலை' காவு கொடுக்கும் வழக்கமும்; வேலாடும் வழக்கமும் இருக்கின்றன.
சாதிப்பேய் அங்கேயும் இருக்கிறது.
கோவிலில் சிலரை உள்ளே அனுமதிப்பதில்லை.
கயானாவில் பெர்பீஸ் பகுதியில் இவ்வழக்கம் இருப்பதாக ஈசா. விசுவநாதன் தெரிவிக்கிறார்.
மாரியம்மன் தாலாட்டு, சிலக்குத்து என்னும் நூலிலுள்ள பாடல்களை பாடுகின்றனர்.
ஒரு வரியை ஒருவர் வாசிக்க மற்றவர்கள் பின்பற்றும் கிருத்துவ முறை காணப்படுகிறது. பக்தர்களுக்கு சுண்டல், வடை உண்டு.
சாமிமீதேறப் பெற்றவர் 'வெறியாடும்' வழக்கம் இருக்கிறது. அப்போது 'குறி'யும் சொல்லப் படுகிறது.
நோயுற்றோருக்கு மந்திரம் ஜெபித்து, தண்ணீர் தெளித்து வேப்பிலை அடிப்பதோடு, நாட்டு மருத்துவமும் செய்கின்றனர்.
இத்தகைய கோயில்களுக்கு எல்லோரும் வருகின்றனர்.
கொரன்டீனிலுள்ள ரோஸ்ஹால் கோயிலை நடத்துபவர் ஓர் ஆப்ரிக்கர்; ஹெர்ஸ்டெலிங் கோயிலில் குறிசொல்பவர் ஒரு முஸ்லீம், மதராசிகள் (தமிழர்) நடத்தும் இக்கோயில்கள் வெறும் வழிபாட்டுக் கோயில்களாக இல்லாமல் நோய் தீர்க்கும் மருத்துவ நிலையங்களாகவும் உள்ளன.
கிரானடாத் தமிழர்கள் அனைவரும் கிருத்துவர்களாக மாறி விட்டனர்.
சூரிநாமில் இந்துக்கள் வட இந்திய முறைப்படி வழிபாடு செய்கின்றனர்.
ஜமைக்கா, குவாடலுப் போன்ற நாடுகளில் மதம்மாறி விட்டாலும் ஒவ்வொரு நாட்டிலும் முறையே 500 குடும்பங்கள் இருப்பதாக 1987-ஆம் ஆண்டு கணக்கெடுத்துள்ளனர்.
மார்ட்டினிக் தீவில் இன்றும் ஏராளமான தமிழர்கள் தமிழக முறைப்படி வழிபட்டு வருகின்றனர்.
இந்துக் கோயில்கள் மௌலின், கிராடிஸ், மாகௌபா முதலிய ஏழு இடங்களில் இருந்ததாக தனிநாயகம் அடிகள் தெரிவிக்கிறார்.
16 அடி உயரத்தில் இலிங்கம் மௌலின் கோயிலில் இருந்ததாக தெரிவிக்கிறார்.
மார்ட்டினிக்கில் தமிழக முஸ்லீம்களும் பெருமளவு குடியேறி இருந்தனர்.
நாகூர் மீரான் ஆண்டவருக்கு அங்கு ஒரு நினைவு பள்ளி இருந்ததாக வின்சென்ட் சாய்பு தனிநாயகம் அடிகளிடம் தெரிவித்துள்ளார் சாயுபு கூட வின்சென்ட் ஆகியிருப்பதிலிந்து நிலமையை உணரலாம்.
உணவு-உடை-தகவல் தொடர்பு..
பெரும்பாலான பெண்கள் இன்று நீக்ரோக்கள் உடையையும், கௌனையுமே அணிகின்றனர்.
ஆண்கள் வேட்டி கட்டும் பழக்கமே இல்லை. அமெரிக்க உடைகளே வழக்கில் இருக்கின்றன.
உணவும்கூட ஆங்கில, பிரஞ்சு முறைப்படி இருந்தாலும் சமயசடங்கு நேரத்தில் மட்டும் சுண்டல், வடை முதலியவை செய்யப்படுகின்றன.
காய்போட்டு காய்ச்சும் குழம்பை 'கொலம்போ' என்று அழைக்கின்றனர்.
புலவு, பிரியாணிக்கு கரீபியர்களிடம் செல்வாக்கு இருப்பதாகவும், முக்கிய உணவிடங்களில் கூட பிரியாணிக்கு செல்வாக்கிருப்பதாக தனிநாயகம் அடிகள் தெரிவிக்கிறார்.
இந்தியப் படங்களை வீடியோ நாடாக்கள் மூலம் பார்த்து வருகின்றனர்.
கரீபிய நாடுகளில் தமிழ் இதழ்கள் எங்கும் நடத்தப்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கரீபிய நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் பலரும் படிப்பறிவில்லாத கிராமப்புற தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரம் போக மற்ற விடுமுறை காலங்களில் தமிழகத்தில் தாங்கள் பார்த்து கேட்டு அனுபவித்த நாடகங்களை அங்கு நடத்தியதை பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அருணாசல கவிராயரின் இராமநாடகம், தேசிங்குராசன் நாடகம், இரண்யன் நாடகம், அல்லாபாஷா நாடகம் போன்றவையும், இராமாயண, மகாபாரத கிளைக் கதைகளை நடித்ததையும் டி.டபிள்யூ.டி கொமின்ஸ் தம் நூலில் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் பாடிய பல நாட்டுப் பாடல்களின் மெட்டுக்களை ஆப்ரிக்கர்கள் தங்கள் கிரியோல் மொழிப் பாடல்களில் கேட்கலாம்.
சில பாடல்களின் இறுதி அடிகளில் சின்னமுத்தம்மா, பெரியமுத்தம்மா என முடிவதிலிருந்து அறிகிறோம்.
தமிழ்மொழியின் நிலை..
கரீபிய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இன்று யாருக்கும் தமிழ் தெரியாது.
ஆங்கிலம், பிரஞ்ச், ஸ்பானிஷ், கிரியோல் பேசுபவர்களாக மாறிப்போய் விட்டனர்.
தமிழர்களுடைய பெயர்களை எழுதிய பல்வேறு நாட்டு தோட்ட முதலாளிகள் அவரவர் மொழிக்கேற்ப மாற்றி எழுதி வைத்துள்ளனர்.
அதை மாற்றாமல் பல தமிழர்களும் அப்படியே வைத்துக் கொண்டுள்ளனர்...
மரியாய் - மாரியம்மா
வெள்ளினி - வள்ளி
என மாறி இருக்கிறது.
இந்துக்களாக இருப்பவர்கள் கூட தங்கள் பெயரின் பின் ஜான், ஜோசப் முதலிய கிருத்துவப் பெயர்களுடனே இருப்பது வியப்பாக இருக்கிறது.
கயானாவில் தமிழர்கள் 60 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்.
கங்காராம், ரோஸ்ஹால், ஆல்பியன் போன்ற பெர்பீஸ்-கொரன்டீன் பகுதியில் உள்ள ஊர்களிலும், மேற்கு டெமராராவில் உள்ள ஸ்டுவர்ட் வில்லிலும், ட்ரையம்பிலும் நூறுகுடும்பங்கள் இருப்பதாக விசுவநாதன் தெரிவிக்கிறார்.
கல்வி நிலை..
"தம் தாய்மொழியை யார் மறக்கிறார்களோ அவர்கள் தம் பண்பாட்டையும் மறக்கின்றார்கள்" என்று கயனாநாட்டு நோயல் மெனீஸ் கூறுகிறார்.
இன உணர்வையும், மொழியையும் இழந்த தமிழர்கள் இன்று அந்தந்த நாட்டு மொழியைதான் படிக்கின்றனர்.
மொழி இழந்ததால் அவர்களிடம் இலக்கியமும் போய்விட்டது.
ஆப்ரிக்கர்கள் பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட போதும் தங்கள் வாய்மொழி இலக்கியத்தை விடாமல் இருந்ததை தமிழர்கள் இனியாகிலும் உணரத்தான் வேண்டும்.
அமைப்புக்கள்..
ஜமைக்காவில் மட்டும் 8 இந்திய அமைப்புக்கள் இருக்கின்றன. மற்ற நாடுகளின் விபரங்கள் அறிய முடியவில்லை.
தமிழர் சாதனைகள்..
கயானாவில் மருத்துவத் துறையில் புகழ்பெற்று விளங்கும் ஒருசிலரில் திரு.லெஸ்வி முத்து என்னும் தமிழர் குறிப்பிடத்தக்கவர்.
இவர் ஜார்ஜ் (தலைநகரம்) டவுனில் மருத்துவராக உள்ளார். திரு. சாமி என்பவர் வியாபாரத் துறையில் செல்வாக்கு பெற்றிருப்பதோடு, இந்த நாட்டில் உள்ள லட்சாதிபதிகளில் ஒருவராக திகழ்கிறார்.
கல்வித்துறையில் டாக்டர்.ஜே.ஆர் ராமசாமி, கயானாப் பல்கலைக் கழகத்தில் உயிர்நூல் துறையில் பணியாற்றுகிறார் இவருடைய தம்பி டாக்டர் ஹெர்னன் ராமசாமி என்பவர் செல்வாக்குள்ள மருத்துவர்களில் ஒருவராக கொரன்டீன் பகுதியில் இருக்கிறார்.
ஜமைக்காவில் 1950 வரை காய்கறிகளின் ஏகபோக உரிமை தமிழர்களிடமே இருந்தன.
ஜமைக்கா பாராளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம்/தொழில் புரிவோர் விபரங்கள்..
கயானாவில் வாழும் தமிழரில் 85% விழுக்காட்டினர் தோட்டங்களிலும், சிற்றூர்களிலும் வாழ்கின்றனர்.
பொறியியல் வினைஞர்களாகவும், நர்சு, ஆசிரியர்களாக சிலர் அங்கொன்றும், இங்கொன்றுமாக வாழ்கின்றனர்.
நாட்டில் நிலவும் அரசியல், பொருளாதாரச் சூழ்நிலைகளின் காரணமாக அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் சென்று விட்டதாக இங்குள் தமிழர்கள் கூறுகிறார்கள்.
அவர்கள் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் பெரும்பாலான தமிழ்க் குடும்பங்களில் குறைந்தது ஒருவராகிலும் அமெரிக்காவிலோ கனடாவிலோ, பிரிட்டனிலோ வாழ்ந்து வருகின்றனர்.
சூரிநாமில் சரபாச்சா, நிக்கெரி மாவட்டங்களில் சிறுவிவசாயிகளாகவும், ஏற்றுமதி-இறக்குமதி தொழிலிலும் இவர்களின் பங்கு உள்ளது.
ஜமைக்காவில் விவசாயத்திலும் வியாபாரத்திலும் இருக்கின்றனர். கிரனடாவில் கரும்புத் தோட்டங்களி பணிபுரிகின்றனர்.
கரீபிய நாடுகளில் தமிழர்கள் பண்பாட்டை முதலில் வட இந்தியரிடம் இழந்தனர்.
பின்னர் அந்தந்த நாட்டு மொழி, பண்பாடுகளால் விழுங்கப்பட்டவர்களாக இன்று வாழ்கின்றனர்.
இன்றைய இளம் தமிழர்கள் தமிழ்மொழி, பண்பாடு, வரலாறு பற்றி அறிந்து கொள்ள ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்திய அரசாங்கம் உலகில் உள்ள நான்கு நாடுகளில் (கயானா, சுரிநாம், பீஜி, மொரீசியஸ்) இந்திய பண்பாட்டு மையம் (Indian cultural centre) நிறுவி அதன் மூலம் இந்திமொழி, பண்பாடு, கலைகள் ஆகியவற்றை பரப்பி வருகிறது.
அதுபோல தமிழக அரசும் தமிழர்கள் அதிகமாக அந்நாடுகளில் வாழ்வதால் தமிழ்மொழி, பண்பாடு, கலைகள் ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்கிறார் விசுவநாதன்.
ஒட்டுமொத்த தமிழரின் விருப்பமும் இது என தமிழக அரசு உணர வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.