மலக்குடல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது?
நம் ஆசன வாயிக்கு சற்று உள்ளே இருக்கும் பகுதி தான் மலக்குடல் (Rectum) இது பெருங்குடலின் கடைசிப் பகுதி என்றாலும் குடல் புற்றுநோய் பெரும்பாலும் தாக்குவது மலக்குடலைத்தான். காரணங்கள் பல இருந்தாலும் நாம் முதலில் பார்க்க வேண்டியது உணவு முறைகளைத்தான்.
அதிக காரம் மற்றும் கொழுப்பு சத்து மிகுந்த உணவு, நாற்சத்து இல்லாத உணவு, வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் இல்லாத உணவு வகைகள் இப்படி பல உணவுப் பழக்க முறைகளால் மலக்குடல் மற்றும் பெருங்குடல் புற்று நோய் வர வாய்ப்புள்ளது. சுமார் 15 சதவிகிதம் சர்க்கரை, ரத்தகொதிப்பு போன்று குடும்பத்தில் வம்சாவழியாக வருவதற்கும் வாய்ப்புண்டு.
இதை எப்படி கண்டுபிடிப்பது?
ஒரு சிறு அரும்பு எப்படி பூவாகி, காயாகி, கனியாகிறதோ அதே போன்று புற்றுநோய் கட்டியும் ஒரு கலத்தில் உருவாகி வளர்ந்து கட்டியாகி, புண்ணாகி மற்ற இடங்களுக்கு பரவும். ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது சற்று சிரமம் என்றாலும் சிறு சிறு தொந்தரவுகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மலச்சிக்கல், மலம் கழிக்கும்போது இரத்தம் போகுதல், அடிவயிறு வலித்தல், மலம் கழித்தபின் ஒருவித வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
மலத்தில் இரத்தம் போவதற்கு மூலம்தான் காரணம் என நினைத்து நிறையபேர் அலட்சியப்படுத்தி விடுகின்றனர். அவ்வாறு செய்யும்போது புற்றுநோய் கட்டி வேகமாக வளர்ந்து மலக்குடலை அடைத்து மற்ற இடங்களுக்கு பரவ நாமே இடம் கொடுத்து விடுகிறோம்.
இதை கண்டுபிடித்து எவ்வாறு குணப்படுத்துவது?
மேலே கூறிய தொந்தரவுகள் இருந்தால் குடல் உள்நோக்கி (Endoscopy) மூலம் கட்டியை கண்டுபிடித்து சதை சோதனையயும் எடுக்கலாம். அவ்வாறு கண்டறியப்பட்ட மலக்குடல் புற்றுநோய் எந்த நிலையில் உள்ளது என நுட்பமாய்ச் சோதி (Ciji scan) மூலம் தெரிந்து அதற்குத்தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்து கட்டியை முழுவதும் அகற்றிவிடலாம்.
மலக்குடலில் அறுவை சிகிச்சை என்றால் குடலை வெளியே வைப்பார்களா?
எல்லா மலக்குடல் புற்று நோய்க்கும் குடலை வெளியே வைக்க வேண்டியிருக்காது. அதுவும் லேப்ராசு(ஸ்)கோபி சிகிச்சை முறையில் கட்டி இடுப்பு எலும்புக்குள் இருந்தாலும் எளிதாகச் சென்று முழுவதுமாக எடுத்து விடலாம்.
குடலை வெளியே கொண்டு வந்து வைப்பதற்கான வாய்ப்பும் லேப்ராசு(ஸ்)கோபி சிகிச்சை முறையில் மிகவும் குறைவு. கட்டி மற்ற இடங்களுக்கு பரவியிருந்தால் கதிரியக்கம் மற்றும் மருந்து கொண்டு நோய் நீக்கும் முறை (Chemotherapy) எனப்படும் ஊசி மருந்துகள் மூலம் கட்டியின் அளவை குறையச் செய்ய முடியும். இப்படி ஒவ்வொரு நிலையிலும் அதற்குத்தகுந்த சிகிச்சை முறைகள் உள்ளன.
மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க சில அறிவுரைகள்...
நாம் சாப்பிடும் உணவில் நாற்சத்து அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்கள், கீரைவகைகள், காய்கறிகள் இவற்றில் நார்சத்து அதிகம் இருப்பதோடு உயிர்ச்சத்து மற்றும் தாதுப்பொருட்களும் நிறைத்திருக்கின்றன. இவற்றை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கொழுப்புச்சத்து காரம் குறைவான உணவுகளையே எடுத்துக் கொள்வது நல்லது. நாற்பது வயதிற்கு மேல் அனைவரும் குடல் நோய் பரிசோதனை செய்தால் புற்றுநோய் பூரண குணப்படுத்தும் நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறலாம். எல்லாம் நம் கையில்தான் உள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.