21/01/2019

வரலாற்று தலைவர்களின் நினைவை போற்றும் கிராமம் -- பெரியபோது...


ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரியபோது கிராமத்தில் தெருக்களுக்கு வரலாற்று தலைவர்களின் பெயரை சூட்டி பெருமை சேர்த்துள்ளனர். ஆனைமலை ஒன்றியத்தில் பெரியபோது ஊராட்சி, அங்கு செல்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அங்குள்ள தெருக்களுக்கு வரலாற்று தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாக உள்ளது. பெரியபோது ஊராட்சியில், பெரியபோது, காந்தி ஆசிரமம், சித்தாண்டிகவுண்டன்புதூர் என்ற மூன்று கிராமங்களையும், ஒரு ஆண்டிற்கு முன்பு புதிதாக உருவாக்கப்பட்ட அம்மன் நகர் என்ற பகுதியையும்
கொண்டது.

இந்த ஊராட்சியில் மக்கள் ஐந்தாயிரம் பேரும், மூவாயிரத்து 500 வாக்காளர்களையும் கொண்டுள்ளது. இக்கிராமத்தில் 15 தெருக்கள் உள்ளன. காமராஜர் வீதி, இந்திராகாந்தி வீதி, பாரதியார் வீதி, கஸ்தூரிபாய் வீதி, குமரன் வீதி, விவேகானந்தர் வீதி, நேரு வீதி, ராஜாஜி வீதி, திருவள்ளுவர் வீதி, திருஞானசம்பந்தர் வீதி, வினோபா வீதி போன்ற வரலாற்று தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.பி.கே.பி. வீதி, நல்லண்ணகவுண்டர் வீதி, கிருஷ்ணசாமி வீதி போன்ற பெயர்களையும் கொண்டுள்ளது. கடைசி மூன்று பெயருள்ள தெருக்கள் பெரியபோது கிராமத்திற்கு இடம் கொடுத்தவர்களின் பெயர்கள். இதுவரை இந்த ஊராட்சிக்கு தற்போது உள்ள ஊராட்சி தலைவரையும் சேர்த்து நான்கு பேர் தலைவர்களாக இருந்துள்ளனர்.
இதில் பழனிச்சாமி என்பவர் மூன்று முறை தலைவராக இருந்துள்ளார். முன்னாள் ஊராட்சித்தலைவர்கள் சுப்பையர், ராதா கலையரசி ஆகியோரும் இருந்துள்ளனர். தற்போது ராதாகண்ணன் என்பவர் ஊராட்சியின் தலைவராக உள்ளார். மற்ற ஊராட்சிகளுக்கு முன்னுதாரணமாக அனைத்து வீடுகளிலும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள மூன்று கிராமங்கள் முழு சுகாதார கிராமம் என்ற சான்றிதழையும் டில்லியில் நடந்த விழாவில் பெற்றுள்ளது. அதில் பெரியபோது கிராமமும் உள்ளது. ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்த ஊர் பொது மக்கள் நன்கொடை வழங்கி அதன் மூலம் திட்டம் நிறைவடைந்துள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 1956ம் ஆண்டு காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியபோது ஊராட்சி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3333 ஆகும். இவர்களில் பெண்கள் 1642 பேரும் ஆண்கள் 1691 பேரும் உள்ளனர்.

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:

சித்தாண்டிகவுண்டண்புதூர்
காந்திஆஸ்ரமம்
பெரியபோது

பெரியபோது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தினமும் காலை வழிபாட்டில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் பாடப்படுகிறது. பொள்ளாச்சி அடுத்துள்ள பெரியபோது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழின் சிறப்பை விளக்கும் வகையில், செம்மொழி மாநாட்டு பாடல் கற்பிக்கப்படுகிறது. தினமும் காலை பிரார்த்தனை கூட்டத்தின்போது, மாநாட்டு பாடலையும் பாடி மாணவர்கள் அசத்துகின்றனர்.

பள்ளி தலைமையாசிரியர் திருநாவுக்கரசு கூறியதாவது:

செம்மொழி மாநாடு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிப்பது மட்டுமின்றி, பாடலையும் பாட வைத்தால், நாளடைவில் அவர்களுக்கு தமிழின் சிறப்பு தெரியவரும். தமிழ் மீது அவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே, செம்மொழி மாநாட்டு பாடல் துண்டு பேப்பர் மூலமாக அனைத்து மாணவர்களுக்கும் வினியோகிக்கப்பட்டுள்ளது; பாடவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.தினமும் காலையில் கூட்டுப் பிரார்த்தனையின் போது, மாணவர்கள் அந்த பாடலை பாடி வருகின்றனர். தமிழ்தாய் வாழ்த்துக்கு அடுத்தப்படியாக செம்மொழி மாநாடு விளக்கப்பாடல் பாடப்படுகிறது. பின்னர், உறுதிமொழி, தேசியகீதத்துடன் பிரார்த்தனை கூட்டம் முடிவடைகிறது. இவ்வாறு, தலைமையாசிரியர் தெரிவித்தார்.

பெரியபோது ஊராட்சியில் நுழைந்ததும் ரோட்டோர குப்பைகள் நம்மை வரவேற்றது. முகம் சுளித்துக் கொண்டு ஊராட்சிக்குள் சென்றதும் அழகுச் செடிகள் சூழ வரவேற்கிறது ஊராட்சி அலுவலகம். அதேபோன்று, அழகுச் செடிகள் சூழ்ந்த நுாலகமும், ஆபத்தை வரவேற்கும் பாதுகாப்பு வேலி இல்லா பொதுக்கிணறும் கண்ணில் பட்டது. ஊருக்குள் சுற்றிய போது, திறந்த வெளி கழிப்பிடமில்லாத ரோடுகள், எல்.இ.டி., தெருவிளக்குகள், உயர்நிலைப் பள்ளி போன்ற வசதிகள் நிறைவு செய்யப்பட்டிருந்தன. மக்களிடம் பேசிய போது, 'எங்கள் ஊரில் அனைத்து வசதிகளும் உள்ளது, குப்பையைத் தவிர வேறு எந்த பிரச்னையும் இல்லை' என பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபோது ஊராட்சியில், ஒன்பது வார்டுகளில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். விவசாயம், விவசாயகூலி மற்றும் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்து வாழ்கின்றனர் மக்கள்.ஊராட்சியில் நுாலகம், உயர்நிலைப் பள்ளி, வறுமை ஒழிப்புத் திட்ட கட்டமைப்பு, சேவை மையம், தரமான ரோடுகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளது. ஆனால், சில காட்சிப்பொருள் கட்டமைப்புகளாலும், குப்பை மற்றும் குடிநீர் பிரச்னையாலும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.ஊராட்சியில் மொத்தம், 33 ரோடுகள் உள்ளன. தேசத் தலைவர்களான காமராஜர், நேரு உள்ளிட்டோரின் பெயர்கள் ரோடுகளுக்கு சூட்டப்பட்டுள்ளன. மெயின் ரோடுகள் தார் ரோடாகவும், மற்ற இடங்கள் கான்கிரீட் ரோடுகளாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ரோடுகள் அனைத்தும் குண்டும், குழியுமின்றி பளிச்சிடுகின்றன.

குடிநீர் சப்ளைபெரியபோது ஊராட்சிக்கு வேட்டைக்காரன்புதுார் - ஒடையகுளம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம், நான்கு மேல்நிலைத் தொட்டி, மூன்று தரைமட்ட தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்படுகிறது.குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட, எட்டு ஆழ்குழாய் கிணறுகளில் தற்போது ஆறு இடங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதன் மூலம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நேரு வீதியிலுள்ள கைப்பம்புடன் கூடிய ஆழ்குழாய் கிணறு, ஒரு மாதமாக பழுதடைந்துள்ளது. பொதுமக்கள் குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கு அருகிலுள்ள தெருக்களுக்குச் சென்று தண்ணீர் எடுக்கின்றனர். நுாலகம்ஊராட்சி அலுவலகம் அருகில், 3.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் வசதிக்காக நுாலகம் கட்டப்பட்டது. பல ஊராட்சிகளில் நுாலகம் யாருக்கும் பயன்படாமல் பூட்டிக்கிடக்கும் நிலையில் பெரியபோது நுாலகத்தை, ஊராட்சி நிர்வாகத்தினர் சிறப்பாக பராமரிக்கின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.