உசிலம்பட்டி அருகே குடும்பத் தகராறில் தந்தையை மிதித்து கொன்று தப்பியோடிய மகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி- மலர்கொடி தம்பதியினர். கூலி தொழிலாளியான இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இரு மகன்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இளைய மகன் தமிழ்பாண்டி, வீடு மற்றும் தோட்டத்தில் தனது சொத்தை பிரித்து தருமாறு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வந்த தமிழ்பாண்டி தந்தை கருத்தப்பாண்டியிடம் சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்துள்ளார். அப்போது தந்தையை கீழே தள்ளி நெஞ்சில் ஏறி மிதித்ததில் கருத்தப்பாண்டிக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். பின்னர் கருத்தப்பாண்டியை உறவினர்கள் எழுமலை ஆரம்ப சுகாதரா நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட கருத்தப்பாண்டியை மேல் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கருத்தப்பாண்டியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டார் எனவும் நெஞ்சில் மிதித்ததில் எலும்புகள் உடைந்து நுரையீரலில் குத்தி இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். மேலும் உடற்கூறு பரிசோதனைக்காக கருத்தப்பாண்டியின் உடல் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஏ.இராமநாதபுரம் போலீசார் தப்பி ஓடிய மகன் தமிழ்பாண்டியை தேடி வருகின்றனர். மேலும் தந்தையையே மகன் மிதித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.