கதிராமங்கலத்தில், துர்க்கை அம்மன் கோயில் அருகே உள்ள எண்ணெய்க் குழாயில் “பராமரிப்புப் பணி” பார்க்க வருவதாகச் சொல்லிக் கொண்டு, நேற்று (01.02.2019)இந்திய எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகத்தின் (ஓ.என்.ஜி.சி.) ஊர்திகளும், ஊழியர்களும் காவல்துறையினர் புடைசூழ ஊருக்குள் வந்தபோது, மக்களுக்கு பழையபடி பீதி ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டாண்டுகளாக ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்றக் கோரி ஊர் மக்கள் ஒன்று திரண்டு போராடி வருகிறார்கள். காவல்துறையின் அடக்குமுறைகளுக்கும், சிறை அடைப்புகளுக்கும் அடிக்கடி உள்ளாகி அச்சத்தில் உள்ளார்கள்.
கதிராமங்கலத்தில் எண்ணெய் – எரிவளிக் குழாய்கள் புதைக்கப்பட்டு, ஓ.என்.ஜி.சி. பயன்படுத்திய வேதிப்பொருட்களால் நிலத்தடி நீர் மாசுபட்டு, குடிநீருக்கும், பாசனத்திற்கும் தகுதியில்லாததாக மாறியிருக்கிறது. குழாய்கள் அவ்வப்போது வெடித்து தீப்பிடித்தும், வெள்ளம்போல் எண்ணெய் வழிந்தோடியும் ஏற்கெனவே பாதிப்புகள் உண்டாகியிருக்கின்றன. இந்நிலையில், மீத்தேன் – நிலக்கரி போன்றவற்றை எடுக்க புதிய குழாய்கள் இறக்க ஓ.என்.ஜி.சி. பல இடங்களில் முயன்று வருகிறது. இதற்கு “ஐட்ரோகார்பன்” என்று மாறுவேடப் பெயர் சூட்டியிருக்கிறது.
பலவகையிலும் பாதிக்கப்பட்டுள்ள கதிராமங்கலம் மக்கள், ஊரைவிட்டு ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டுமென்றும், நிலமும் நிலத்தடி நீரும் நஞ்சாவதால் எண்ணெய் – எரிவளி எடுக்கக் கூடாதென்றும, சற்றொப்ப இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். கடந்த 2018 ஏப்ரல் மாதம், இராணுவத்தினரை அழைத்து வந்து அவர்களின் பயிற்சியின் ஒரு பகுதியாக கதிராமங்கலத்தை சுற்றிக் காட்டிப் பயிற்சி கொடுத்தது மக்களிடம் மேலும் பீதியை அதிகப்படுத்தியது.
இந்நிலையில், நேற்று (01.02.2019) முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் வருவாய்த் துறையினரின் தகவல் ஏதுமில்லாமல், ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் காவல்துறையினரை ஊருக்குள் நிறுத்தி வைத்துக் கொண்டு, ஊர்திகளில் ஊழியர்களை அனுப்பியது மக்களிடையே பேரச்சத்தை ஏற்படுத்தியது.
அச்சமடைந்த மக்கள் ஒன்றுகூடி, உண்மை விவரங்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டிருக்கிறார்கள். இதுகுறித்து விவரம் அறிந்து கொள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன் அவர்களை அழைத்துள்ளார்கள். இந்நிலையில் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி காவல்துறையினர் பேராசிரியர் த. செயராமன் அவர்களையும், உள்ளூர் பிரமுகர் திரு. ராஜூ அவர்களையும் கைது செய்து உண்மைக்குப் புறம்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இவர்கள் இப்பொழுது திருச்சி நடுவண் சிறையில் உள்ளார்கள்.
பேராசிரியர் செயராமன் துணைவியார் திருவாட்டி சித்ரா, கதிராமங்கலம் போராட்டக் குழுத் தலைவியர் கலையரசி, செயந்தி ஆகிய மூன்று பேரையும் வழக்கில் சேர்த்துள்ளார்கள். இந்த ஐந்து பேரும் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களைக் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக இ.த.ச. 506(2) பிரிவின்கீழ் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். பிணை மறுப்புப் பிரிவுகளைப் போட்டி ருக்கிறார்கள். காவல்துறையின் இந்த அணுகுமுறை கண்டனத்திற்குரியது! ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதச் செயல்களுக்கு தமிழ்நாடு காவல்துறை அடியாள் போல் செயல்படக்கூடாது!
தமிழ்நாடு முதல்வர், இச்சிக்கலில் தலையிட்டு பேராசிரியர் செயராமன் உள்ளிட்டோர் மீது போட்டுள்ள பொய் வழக்கை உடனடியாகக் கைவிடச் செய்ய வேண்டுமென்றும், சிறையில் உள்ளோரை விடுதலை செய்ய வேண்டுமென்றும், காவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்றி “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” காவிரிப்படுகையை அறிவிக்க வேண்டுமென்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.