திருவள்ளுவர் நம் வாழ்க்கைக்கு விட்டுச் சென்றுள்ள கருவூலம் திருக்குறள். அது, தமிழர்களின் வழிகாட்டி நூல்.
திருக்குறளுக்குப் பல அறிஞர்கள் விளக்கம் எழுதியுள்ளனர்.
மாணவர்களுக்காகத் திருக்குறளை எளிமையாக விளக்கி எழுதிய அறிஞர்களுள் முத்தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் (கி.ஆ.பெ) அவர்களுள் ஒருவர் ஆவார்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
என்ற குறளில் உள்ள ‘உயிரினும்’ என்ற ஒற்றைச் சொல்லுக்கு அற்புதமான முறையில் விளக்கம் தருகின்றார் கி.ஆ.பெ. அவர்கள்
விழுப்பம் என்பதற்குக் குணம், நலன், புகழ், பெருமை, உயர்வு என்ற பல பொருள் உண்டு எனத் தெளிவாகக் கூறுகின்றார். இவ்வுலகில் இழந்தால் திரும்பப் பெற முடியாதவை இரண்டு. ஒன்று ஒழுக்கம்; மற்றது உயிர். ஆதலால், ஒழுக்கத்திற்கு உவமை கூற எண்ணிய வள்ளுவர், போனால் திரும்ப வராத உயிரைத் தேடிப் பிடித்து வந்து உவமையாகக் கூறி இருப்பது போற்றத்தக்கது என்கிறார் கி.ஆ.பெ அவர்கள்.
‘உயிரினும் சிறந்த பொருள் வேறு எதுவுமில்லை’ என்ற பலருடைய கருத்தைத் திருவள்ளுவர் மறுக்கின்றார். உண்மையில் உயிரைவிட மேலான ஒன்று உள்ளது. அஃது ஒழுக்கம் மட்டுமே என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார். இதைத்தான் ‘உயிரினும்’ எனும் ஒற்றைச் சொல் தெரிவிக்கின்றது என கி.ஆ.பெ விளக்கம் தருகின்றார்.
உயிருடைய எவரும் உயர்ந்தவராக்க் கருதப்படுவதில்லை. ஒழுக்கம் உடைய சிலரே உயர்ந்தவராகக் கருதப்படுவர். ஆதலின், உயிரைக் காப்பதைவிட ஒழுக்கத்தைக் காப்பதே சிறப்பு என்பதைத்தான் திருக்குறளின் ‘உயிரினும்’ என்ற சொல், சொல்லாமல் சொல்வதாக மேலும் அவர் விளக்குகிறார்.
மானம் இழப்பதா? அல்லது உயிரை இழப்பதா? என்ற ஒரு கொடிய நிலைமை ஏற்பட்டால் அந்த நிலையிலும் ‘மானத்தை இழவாதே’ மாறாக, உயிரை இழந்து விடு’ என்ற உயர்ந்த நெறியை வள்ளுவர் உயிரினும் என்ற சொல்லில் ஆணித்தரமாக உணர்த்துகின்றார்.
ஒருவன் உயிரை இழந்துவிட்டால் அதற்காக அழுது புலம்பும் துன்ப நிலை அவனுக்கு ஏற்படுவதில்லை. மற்றவர்களுக்கே அந்நிலை ஏற்படுகின்றது. ஆனால், அவன் ஒழுக்கத்தை இழந்துவிட்டால் அதற்காக அழுது வருந்தும் துன்ப நிலை பிறருக்கு ஏற்படுவதில்லை. அந்நிலை அவனுக்கே ஏற்படும் என்ற சிறந்த கருத்தையும் வள்ளுவர் ‘உயிரினும்’ என்ற அருஞ்சொல்லில் புதைத்துள்ளார் என்று கி.ஆ.பெ விசுவநாதம் அழகுபடக் கூறுகின்றார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.