ஆரணி நாடாளுமன்ற தொகுதி மேல்மலையனூர் அடுத்த சாத்தாம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது தி.மு.க. பிரமுகர்களான ஞானபக்தர்(வயது 41), செல்வதுரை(21) ஆகியோர் 80 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டியை வாக்குச்சாவடி மையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது அங்கிருந்த அ.தி.மு.க. முகவர் ஈஸ்வரி என்பவர், அவர்களிடம் மூதாட்டி மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் உள்ள இடத்துக்கு செல்லவேண்டும் என்றும், நீங்கள் 2 பேரும் அங்கு செல்லக்கூடாது என்று கூறியுள்ளார். இதனால் ஈஸ்வரிக்கும், தி.மு.க.பிரமுகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைபார்த்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து வெளியே அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை அறிந்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தியின் மகன் சத்தியராஜ்(30) வாக்குச்சாவடி மையத்துக்கு விரைந்து வந்து, தி.மு.க. பிரமுகர்கள் 2 பேரிடமும் ஏன் முகவரிடம் வாக்குவாதம் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் சத்தியராஜை ஆபாசமாக திட்டி, உருட்டுக்கட்டை, கல் ஆகியவற்றால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சத்தியராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிந்து, ஞானபக்தன், செல்வதுரை ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.