காலகாலமாக உலகெங்கிலும் உள்ள மக்கள் யாவரும் தமக்கு பிரியமான வழியில் இறைவழிபாடு செய்து வருகின்றனர்.
இங்கு நான் உங்களுடன் பகிரவிருப்பது இந்து சமய தெய்வ வழிபாட்டு முறை பற்றி..
இந்து சமயம் பல நூற்றாண்டுகள் கடந்தும் உயிர்ப்புடன் இருந்து வருகின்றது.
அவ்வப்போது அது தன் வீரியத்தை இழக்கும் போதும், வேற்று சமயத்தவரால் தொல்லைகள் வந்த போதும் அதனை எதிர்கொண்டு மீண்டு வந்த வண்ணம் இருக்கிறது.
மற்ற எந்த சமயத்தைக் காட்டிலும் பல்லாயிரம் ஞானியரை, சித்தமஹா புருஷர்களையும், இறை அவதாரங்களையும் காலந்தோறும் தொடர்ந்து தோற்று விக்கும் இறை கற்பகவிருட்சம் இந்து தர்மம்.
ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், ஞானியர் இவர்களே இறைவன் எனும் கடலில் சிறிதேனும் நீந்தியவர்கள் அந்த கடல் நீரை பருகியவர்கள்.
நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் அந்த கடலை தள்ளி நின்று வேடிக்கை பார்த்து ஆச்சர்யப்பட்டு நிற்பவர்கள்.
நமது ஞானப் பெருமக்கள் அவர்கள் கண்ட ஆன்மா அனுபவத்தை நாமும் காண வழிவகைகளைக் கூறிச் சென்றுள்ளார்கள்.
அதை வைராக்யத்துடன் தொடர்ந்து அப்யாசித்தால் நாமும் இறைவனை அடையலாம்.
ரிஷி என்ற வார்த்தையின் பொருள் மந்திர த்ரஷ்டா அதாவது மந்திரங்களை நேரில் கண்டவர்கள் என்று அர்த்தம்.
மந்திரங்கள் பிரபஞ்சத்தில் காலாகாலத்திற்கும் சாஸ்வதமாக இருப்பவை.
ரிஷிகளும் சித்தர்களும் தமது மனம் கடந்த நிலையில் இறைக் கருணையால் அதை உணர்ந்தவர்கள்.
எந்த மனிதனும் யாருக்கும் பணிந்து வாழ ஆசைப்படுவதில்லை அடிமையும் கூட..
அப்படியிருக்க நாம் சிறுவயது முதலே இறைவழிபாடு செய்து வருகிறோம்.
இத்தனை வருட பக்தியில் ஏதேனும் சொல்லிக் கொள்ளத்தக்க இறையனுபவம் நமக்கு உண்டா என்று நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொண்டால் வெட்கமின்றி சொல்வதானால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.
வெறுமனே வேண்டுதல்கள் பலிப்பதும், செல்வமும் மட்டும் இறைவழிபாட்டின் பயன்களல்ல.
படைப்புகளில் எல்லா ஜீவராசியின் வாழ்க்கையும் ஒரு கட்டுப்பாட்டிற்குட்பட்டது.
ஆனால் மனிதன் மட்டும் அதற்கு விதிவிலக்காக சிறிது அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டவன்.
ஏனென்றால் எந்த மரமும், விலங்கும், பறவையும் இன்ன பிறவும் விரும்பினால் வேறொன்றாக மாறச் சுதந்திரம் அற்றவை.
மனிதன் மட்டுமே நல்லவன், கெட்டவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், யோகி, ஞானி, மகான் என தான் விரும்பியபடி வாழவும், விரும்பிய யாவையும் முயற்சியால் அடையவும் வல்லவன்.
அந்த சாய்ஸ் உடன் படைக்கப்பட்ட நாம் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம் கடவுளாய் கூட..
இன்று நாம் வழிபட்டு வரும் பல தெய்வங்கள் மனிதர்களாய்ப் பிறந்து பின் உயர்ந்த நிலை அடைந்தவர்கள் தான்..
அது குறித்து பின்னர் விரிவாய் காண்போம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.