1965 பிப்ரவரி 12 ஆம் தேதி பொள்ளாச்சியில் நடந்தது என்ன?
அதை ஏன் பொள்ளாச்சிப் படுகொலை என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகிறார்கள்?
நாளை பொள்ளாச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவு மாநாடு நடைபெறவுள்ளது.
உள்ளூர் கட்சிகள், அமைப்புகள் பலவற்றோடு இணைந்து தன்னாட்சித் தமிழகம் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்குக் காரணம் என்ன?
இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் என இந்திய அரசு அறிவிக்க முயற்சி செய்தபோது, அதற்கு எதிராக மாபெரும் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள் தமிழ் மக்கள்.
1965 இல் நடந்த அந்த மொழிப்போரில் தமிழகம் முழுக்க தீப்பற்றியது.
மத்திய துணைராணுவப்படைகளும் தமிழ்நாட்டு காவல்படைகளும் நடத்திய நரவேட்டையில் ஐந்நாறு பேருக்கும் மேல் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
பல தமிழ் இளைஞர்கள் தாங்களாகவே தீக்குளித்தும் நஞ்சு அருந்தியும் தமிழுக்காக உயிர்துறந்தார்கள்.
1965 பிப்ரவரி மாதம் தமிழகமெங்கும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அதிக மக்கள் பலியானது பொள்ளாச்சியில்தான் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பிப்ரவரி 12, 1965 இல் பொள்ளாச்சியில் என்னதான் நடந்தது?
முழு விவரத்தையும் பேராசிரியர் அ.ராமசாமி தன்னுடைய மொழிப்போர் வரலாறு தொடர்பான நூலில் ரத்தம் சொட்டச்சொட்ட விவரித்திருக்கிறார்.
இதோ அது...
தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக்குழு அறிவித்தபடி, 1965 பிப்ரவரி 12ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது.
அனைத்துக்கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் , கடைகள், உணவகங்கள், திரையரங்குகள் முதலியன மூடப்பட்டிருந்தன.
தொடர்வண்டிகள் ஓடவில்லை.
அனைத்துப்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.
தனியார் வண்டிகளும் ஓடவில்லை.
முக்கியமான வணிகப்பகுதிகள், சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கடைப்பகுதிகள் ஆகிய அனைத்தும் வெறிச்சோடிப்போய்க் கிடந்தன.
எப்போதாவது இராணுவ வண்டிகளும் காவல் வண்டிகளும் மட்டுமே சாலைகளில் ஓடுவதைக் காணமுடிந்தது.
இயல்பு வாழ்க்கை முற்றிலும் நின்றுபோய்விட்டது.
ஆனால், இந்தியன் எக்ஸ்பிரசு குறிப்பிட்டதுபோன்று, சில இடங்களில் வெடித்த கலவரங்களும், துப்பாக்கிச்சூடுகளும் முழுக்கடையடைப்பின் அமைதியைத் தகர்த்தெறிந்தன.
முதல் முறையாக இராணுவம், பொள்ளாச்சியில் துப்பாக்கியால், அதுவும் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அன்றைய தினம், உள்ளூர் மாணவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொள்ளாச்சி நகரிலும் முழுக்கடையடைப்பு நடைபெற்றது.
காலை 10.00 மணி அளவில், பாலக்காடு சாலையில் உள்ள அஞ்சலகம் முன்பு சில மாணவர்கள் கூடி இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.
மாணவர்களுக்கு ஆதரவாக ஏராளமான பொதுமக்களும் திரண்டு விட்டனர்.
அந்த வேளையில் உயர்நிலைப்பள்ளி மாணவன் ஒருவன் அஞ்சலகத்தின் மேல் ஏறி, அஞ்சலகப் பெயர்ப்பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழிக்க முயற்சித்தான்.
அவன் அஞ்சலகத்தின் மேல் ஏறிச்சென்றதைத் தடுக்காமல், அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவலர்கள், திடீரென்று அவனை இந்தி எழுத்தை அழிக்காமல் கீழே இறங்குமாறு கூறினர்.
ஆனால், அதற்கு அந்த மாணவன் மறுத்துவிடவே, அவனைத் துப்பாக்கியால் சுடப்போவதாகக் காவலர்கள் மிரட்டினர்.
அதற்கு அஞ்சாமல், அந்த மாணவன் இந்தி எழுத்தை அழித்தான்.
உடனே, ஒரு காவலர் அவனைக் குறிபார்த்து துப்பாக்கியால் சுட்டார்.
அவன் அந்த இடத்திலேயே விழுந்து துடிதுடித்துச் செத்தான்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கூட்டம் காவலர்களை நோக்கிச் சரமாரியாகக் கற்களை வீசியது.
காவலர்கள் தடியடியில் இறங்கவுமே கூட்டம் கலைந்தோடியது.
ஆத்திரம் அடைந்த கூட்டம் மீண்டும் காவலர்களைக் கற்கள் வீசித்தாக்கியது.
அங்கிருந்த காவலர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
கலைந்து ஓடிய கூட்டம் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கூடி அரசு அலுவலகங்களுக்குத் தீவைக்க முயற்சித்தது.
இதற்கிடையே காவலர்கள் கோயம்புத்தூரில் உள்ள உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இராணுவ உதவியைக் கேட்டனர்.
அதன்படி, ஆறு வண்டிகளில் இராணுவத்தினர் பொள்ளாச்சிக்கு ஏறத்தாழ நடுப்பகலின் போது வந்து சேர்ந்தனர்.
பொள்ளாச்சி வந்து சேர்ந்ததுமே, இராணுவத்தினர் கோயம்புத்தூர் சாலையில் இருந்த அஞ்சலகம், முன்பு உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.
அஞ்சலகம் முன்பு கூடியிருந்த கூட்டம் அஞ்சலகத்தைத் தாக்க முயற்சித்தது.
இராணுவத்தினர் இயந்திரத்துப்பாகியை எடுத்து வைத்துக் கொண்டு கலைந்து செல்லவில்லையென்றால் சுட்டு விடுவதாக எச்சரித்தனர்.
அப்போது குழந்தைகள் எல்லாம் கூட்டத்தில் இருப்பதாகக் கூறி சிலர் குழந்தைகளைத் தூக்கிக்காண்பித்துச் சுட்டு விட வேண்டாம் என்றும் கலைந்து சென்று விடுவதாகவும் கூறினர்.
ஆனால், கூட்டம் கலைந்து செல்வதற்காகச் சில வினாடிகள் கூடப் பொறுத்துப்பார்க்காமல் இராணுவத்தினர் இயந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.
உடனே, கூட்டம் கலைந்து பல திசைகளில் ஓடியது.
இராணுவத்தினர் இங்கே சுட்ட போது தான் நான்கு வயதே ஆன பெண் குழந்தை ஒன்று இறந்து போனது.
கூட்டம் எல்லாம் சென்றபின், அந்தக் குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுதார்.
கலைந்தோடிய , ஆத்திரங்கொண்ட கூட்டம் பல இடங்களில் மீண்டும் கூடி அரசு அலுவலகங்களைத் தாக்கித் தீ வைக்கத் தொடங்கியது.
இராணுவத்தினர் நடமாட்டத்தைத் தடுக்க, சாலையின் நடுவே பாறாங்கற்கள் வைக்கப்பட்டன.
எல்லா வகையான பொருட்களையும் கொண்டு வந்து சாலையின் நடுவே குவித்துவைத்துத் தீ வைத்தனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தைக் கூட்டம் சூறையாட முயற்சித்தபோது, இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில், வேலுச்சாமி என்ற அரசு அலுவலர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மற்றொரு கூட்டம் நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கும், சமுத்திரம் இராம அய்யங்கார் நகராட்சி ஆண்கள் உயர்நிலைப்பள்ளிக்கும் தீ வைத்தது.
தீயணைப்பு நிலைய அலுவலகம், நீதிமன்றம் ஆகியவை சூறையாடப்பட்டது.
அங்கிருந்த நாற்காலிகள், மேசைகள் கோப்புகள் முதலியன எடுத்துக்கொண்டு வரப்பட்டு, சாலையின் நடுவே போட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
இராணுவத்தினர் இங்கும் துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை விரட்டியடித்தனர்.
கூட்டத்தில் ஒரு பகுதியினர் காங்கிரசுக் கட்சியைச்சேர்ந்த சிலரைத் தாக்கினர்.
காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் மகாலிங்கம் வீடும் தாக்கப்பட்டது.
இராணுவத்தின் நடமாட்டத்தைத் தடுக்க மயிலஞ்சந்தை அருகே கூடிய பெருங்கூட்டம் சாலையில் கற்களையும் பிற பொருட்களையும் கொண்டு வந்து போட்டது.
இந்தக் கூட்டத்தின் மீதும் இராணுவம் துப்பாக்கியால் சுட்டது.
அங்கிருந்து ஓடிய கூட்டம் தேர்முட்டிக்கு அருகிலிருந்த குதிரை வண்டிகளை இழுத்துவந்து நடுத்தெருவில் போட்டுக் கொளுத்தியது.
நல்லப்பா திரையரங்கம், செல்லம் திரையங்கம் ஆகியவற்றின் முன் நின்றிருந்த கூட்டத்தின்மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
கச்சேரிச் சாலையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இராசேந்திரன் என்ற மாணவனின் கால்களில் குண்டு பாய்ந்த்து.
ஓர் இளைஞரைக் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிடுவதாகப் பயமுறுத்தினார்.
இளைஞரும் துணிவிருந்தால் சுடுங்கள் என்று கூறி முன்னே வந்து நின்றார்.
அங்கு விரைந்து வந்த இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் அவர் காலைச்சுட்டார்.
உடனே கூட்டத்தினர் அவரை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
அந்த இளைஞர் அருகிலிருந்த மருத்துவமனையில் காலுக்குக் கட்டுப்போட்டுக்கொண்டு வந்து, மீண்டும் கூட்டத்தில் சேர்ந்து தீவைப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இம்முறை இராணுவத்தினர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுச்சாகடித்தனர்.
ஒரு கட்டத்தில் இராணுவத்தினர் சுட்டபோது, நடுத்தர வயதுள்ள ஒருவரின் பின்னால் பத்து வயதுச் சிறுவன் ஒளிந்திருந்தான்.
அப்போது அந்த மனிதரின் வயிற்றில் துளைத்தத் துப்பாக்கிக் குண்டு, பின்பக்கமாக வெளியே வந்து, அந்தச்சிறுவனின் நெற்றியைத் துளைத்ததில், இருவருமே அந்த இடத்தில் இறந்து விட்டனர்.
இதைப்போன்ற எத்தனையோ நெஞ்சை உலுக்கும் செய்திகளை இந்நூலாசிரியர் பொள்ளாச்சிக்கு ஆய்விற்காக சென்ற போது கேட்க நேரிட்டது.
கூட்டத்தை இராணுவம் கலைத்த பின்பு, பல இடங்களில் நகர் முழுவதும் புகைந்து கொண்டிருந்தது.
பெரிய கடைத்தெரு உட்பட முக்கியத்தெருக்கள் எல்லாம் கற்களும் உடைந்த கண்ணாடித்துண்டுகளும், எரிந்தும் எரியாமலும் கிடக்கின்ற கட்டைகளாக நிறைந்து ஒரு போர்க்களம் போல் காட்சி தந்தன.
மறுநாள் இந்தியன் எக்சுபிரசில் வெளியான செய்தியைப்போல்,
மாநில வரலாற்றில், நேற்றைய தினம் (பிப்ரவரி 12) முதல்முறையாக இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்திய பொள்ளாச்சி ஒரு பெரிய சுடுகாட்டைப் போல காட்சியளித்தது. சாலைகளில் போடப்பட்டிருந்த தடைகளை அப்புறப்படுத்த இராணுவத்திற்கு நான்கு மணிநேரத்திற்கும் மேலானது.
அதன்பின் எம்.சி. பனிக்கர், சத்யபால் ஆகிய தளபதிகளின் தலைமையில் இராணுவ வீரர்கள் பொள்ளாச்சி முழுவதும், அணிவகுத்து வந்தனர்.
பொள்ளாச்சியின் நகரமைப்புப் படம் இராணுவத்தின் கையில் கொடுக்கப்பட்டது.
முக்கியமான இடங்களில் எல்லாம் இராணுவ வீரர்கள் காவல் இருந்தனர். அன்று இரவும் அதைத்தொடர்ந்து நான்கு நாட்களுக்கும் இரவில் அறிவிக்கப்படாத ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்தது.
இரவு வெளியே வந்த இளைஞர்கள் எல்லாம், இராணுவத்தினரால் தாக்கப்பட்டு, காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.
ஏறத்தாழ 12 நாட்கள் பொள்ளாச்சி நகரக் காவல் இராணுவத்தினரிடம் இருந்தது.
1938 லிருந்து நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் போராட்டத்தை அடக்க இராணுவம் தமிழ்நாட்டிற்கு முதல்முறையாக வந்தது 1965 இல் தான்.
வந்த மூன்றாவது நாளே இராணுவத்தினர் துப்பாக்கியால் சுடவேண்டிய நிலைமை; அதுவும் இயந்திரத்துப்பாக்கியால் சுடவேண்டிய நிலைமை ஏற்பட்டது பொள்ளாச்சியில்..
ஆனால், மறுநாள் மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்த அறிக்கையில் இயந்திரத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதை மறுத்தார்.
முதலமைச்சர் பக்தவத்சலமும் அதே பொய்யைக் கூறினார்.
அவர், 1965 மார்ச்சு 27 ஆம்நாள் சென்னை சட்டப்பேரவையில் பேசியபோது, மாநிலத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அடக்க இயந்திரத்துப்பாக்கியை இராணுவம் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.
இராணுவம் யாரிடமிருந்து ஆணைகள் பெறுகிறது?
காவல்துறையிடமிருந்தா அல்லது அரசிடமிருந்தா? என்று ஏ.குஞ்சன் நாடார் என்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு
நான் வருத்தப்படுகிறேன். இந்தக் கேள்விக்கு எந்தப் பதிலும் என்னால் கூறமுடியாது என்று முதலமைச்சர் பதிலளித்தார்.
மாநிலத்தின் முதலமைச்சருக்குத் தெரியாமலேயே அந்த மாநிலத்தில் இராணுவம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலேயே வருத்தப்படக்கூடிய ஒரு நிலைமை தான்.
எப்படியாயினும் பொள்ளாச்சியில் கோயம்புத்தூர் சாலையில் உள்ள அஞ்சலகம் முன்பு இராணுவம் இயந்திரத்துப்பாக்கியால் சுட்டது என்பதுதான் உண்மை.
பொள்ளாச்சியில் பல கட்டங்களில் இராணுவ வீரர்கள் சுட்டதில் எத்தனை பேர் இறந்திருப்பர்?
இந்தக் கேள்விக்குச் சரியான பதில் என்றுமே கிடைக்காமலே போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
எல்லாமே மூடி மறைக்கப்பட்டுள்ளன.
உண்மையை மறைப்பதற்காக இவை தொடர்பான கோப்புகள் அனைத்தும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுவிட்டன.
தெருவிலே கிடந்த பிணங்களை எவரும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தொடக்கத்தில் ஓரிரு பிணங்களை மட்டுமே கூட்டத்தினர் எடுத்துச் சென்றனர்.
காணாமல் போனவர்களைத் தேடுவதற்கு வெளியில் வந்தால், தங்கள் உயிருக்கு ஆபத்து என்று அஞ்சியே பலர் வீட்டில் இருந்தனர்.
தங்கள் வீட்டுப்பிள்ளை இறந்துவிட்டது என்று தெரிந்தும் அழுதால் எங்கே இராணுவத்தினர் வீட்டிற்குள் வந்துவிடுவரோ என்று அஞ்சிப்பேசாமல் இருந்தனர்.
பிணங்களை எல்லாம் சேகரித்த இராணுவத்தினர் சிலவற்றைப் பழனி சாலையில் உள்ள சுடுகாட்டில் போட்டுத்தீ வைத்துக் கொளுத்தினர்.
சுடுகாட்டைச் சுற்றிலும் இராணுவத்தினரும் துப்பாக்கி பிடித்த காவலரும் நின்று காவல் காத்தனர்.
பிணங்கள் எரிக்கப்பட்ட அன்று, அந்தப்பக்கத்தில் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
அதன்பின் அந்தப்பக்கம் நடந்து செல்கின்றவர்களோ அல்லது பேருந்து மற்ற வண்டிகளில் செல்கின்றவர்களோ சுடுகாட்டைத் திரும்பிப்பார்க்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்டிருந்தது.
பொள்ளாச்சிச் சுடுகாட்டில் பிணங்கள் எரிக்கப்பட்டதுபோக, மற்றவை இராணுவ வண்டிகளில் ஏற்றப்பட்டு, மதுக்கரை இராணுவ நிலையம் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டன.
இப்படி நடைபெற்ற நிகழ்வுகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையக் கணிப்பது எளிதான செயலன்று.
ஆனால், நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் கூறிய செய்திகளிலிருந்து குறைந்தது 80 பேர் அல்லது அதிகமாக 120 பேர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.
அரசு கொடுத்த எண்ணிக்கை வழக்கம் போல் குறைவுதான் என்றாலும் , இந்தத் தடவை அறிவித்த எண்ணிக்கை சற்று நகைப்புக்கிடமாகவே இருந்தது.
பத்தே பேர் தான் கொல்லப்பட்டார்கள் என்பது தான் அரசின் எண்ணிக்கை..
1965 இல் தமிழ்நாட்டில் 50 நாட்கள் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் , அமைதியை நாடும் பண்பாடு மிக்கப் பொள்ளாச்சி மக்கள் தான் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டனர் என்பது கொடுமையாகும்.
பேராசிரியர் அ.இராமசாமி அவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு நூலின் இரண்டாம் பாகத்தில் 'பொள்ளாச்சிப் படுகொலை' எனும் அத்தியாயத்திலிருந்து...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.