03/09/2020

வடசென்னையில் 53 ஆண்டு பாரம்பரியமிக்க அகஸ்தியா தியேட்டர் மூடப்பட்டது...


சென்னையில் பாரம்பரியமிக்க தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருவது வேதனையளிக்கிறது. ஏற்கெனவே ஆனந்த், பைலட், நட்ராஜ் காமதேனு, பாரகன், ராக்சி, ராஜகுமாரி, கிருஷ்ணவேணி, நாகேஷ், ஸ்டார் தியேட்டர்கள் மூடப்பட்டன. சமீபகாலத்தில் சாந்தி தியேட்டர், ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர்கள் மூடப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாரம்பரியம் மிக்க அகஸ்தியா தியேட்டரும் நாளை முதல் (செப்டம்பர் 1) நிரந்தரமாக மூடப்படுகிறது.

வட சென்னையில் உள்ள தண்டையார் பேட்டையில் கடந்த 1967ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த திரையரங்கம் 53 ஆண்டுக்கால பழமை வாய்ந்தது. 1004 இருக்கைகளை கொண்ட பிரமாண்ட தியேட்டர். முதல் திரைப்படமாக பாமா விஜயம் திரையிடப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் , காவல்காரன், சிவாஜியின் சிவந்த மண், சொர்க்கம் உள்ளிட்ட படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியது.

ரஜினியின் அபூர்வ ராகங்கள், பைரவி, ப்ரியா, படிக்காதவன், கமலின் அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் படங்களும், சூர்யாவின் காக்க காக்க படமும் வெள்ளி விழா கண்டன. திரைப்படம் தொடர்பான காட்சிகள் இந்த தியேட்டரில் தான் அதிகமாக படமாக்கப்படும் காரணம் அந்த அளவிற்கு விசாலமானதாக இருந்தது.

குளிர்பதன வசதி இல்லாத தியேட்டர்களில் சிறந்த தியேட்டராக பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகப் வருமானம் எதுவும் இல்லாததாலும், கொரோனா பிரச்சினையால் தற்போது தியேட்டர்கள் திறக்கும் சாத்தியம் இல்லை என்பதாலும், மக்கள் இப்போது ஏசி வசதி இல்லாத தியேட்டரை விரும்புவதில்லை என்பதாலும் அகஸ்தியா தியேட்டரை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளனர்.

வடசென்னையில் அடையாளங்களில் ஒன்று அஸ்தமானமாகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.