இந்திய நாட்டின் உழவர்களை ஒட்டுமொத்தமாக நிலத்தை விட்டு வெளியேற்றிவிட்டு, நிலம், வேளாண்மை, வேளாண் விளைபொருள் வணிகம் மூன்றையும் பன்னாட்டு மற்றும் இந்திய நாட்டுப் பெருங்குழுமங்களிடம் (கார்ப்பரேட்டுகளிடம்) ஒப்படைக்கும் தொலை நோக்குடன் மோடி அரசு மூன்று சட்டங்களை நிறைவேற்றுகிறது.
இன்றியமையாப் பண்டங்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்திலிருந்து நெல், கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை நீக்கும் சட்டம், இந்தியா முழுவதையும் ஒரே வேளாண் வணிக மண்டலமாக்கும் சட்டம், வேளாண் நில ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் ஆகிய மூன்றையும் கடந்த சூன் 3ஆம் நாள் அவசரச் சட்டங்களாகப் பிறப்பித்தது மோடி அரசு. அவற்றை இப்போது நிரந்தரச் சட்டங்களாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி வருகிறது.
உணவுப் பொருட்களை இன்றியமையாப் பண்டங்கள் கட்டுப்பாட்டிலிருந்து நீக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்தவர்கள் யார்? உழவர்களோ, உழவர் சங்கங்களோ இக்கோரிக்கை வைக்கவில்லை. உலக வணிக நிறுவனமும் (WTO), பெருங்குழும வணிகத் திமிங்கிலங்களும் தாம் இந்தக் கோரிக்கையை வைத்தன.
அதேபோல், நிலங்களைப் பெருங்குழுமங்களிடம் ஒப்பந்தப் பண்ணையத்தின் கீழ் ஒப்படைத்து அவற்றின் அதிகாரத்தின் கீழ் வேளாண்மை செய்ய வேண்டும் என்று எந்த உழவரும், உழவர் அமைப்பும் கோரிக்கை வைக்கவில்லை. இதுவும் மேற்படி பன்னாட்டு - உள்நாட்டு வணிகத் திமிங்கிலங்களின் கோரிக்கையே.
வணிகப் பெருங்குழுமங்களின் இலாப வேட்டைக்காக உழவர்களைப் பலியிட இந்தச் சட்டங்களை நிறைவேற்றுகிறது மோடி அரசு.
இந்தக் கொரோனாக் காலத்தில் இந்தியத் தொழில் உற்பத்தித் துறையும் வணிகத் துறையும் வீழ்ச்சியடைந்து, அவற்றில் ஈடுபட்டிருந்த பல கோடி மக்களைக் கொடிய வறுமையிலும் வேலையின்மையிலும் வீழ்த்திவிட்டன. இந்த நிலையில் இன்று இந்திய மக்களைத் தாங்கிப் பிடித்துப் பாதுகாப்பது வேளாண்மைத் துறை மட்டுமே! உழவர்களும் உழவுத் தொழிலாளிகளும் மட்டுமே!
தொழில் உற்பத்தித் துறையில் இன்றும் வல்லரசு நாடுகளைச் சார்ந்திருக்கிறது இந்தியா. ஆனால் வேளாண் உற்பத்தித் துறையில் இந்தியா உபரி உற்பத்தி நாடாக உள்ளது. இதை வீழ்த்தி வேளாண் துறையிலும் தங்களை அண்டி வாழும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற உத்தியுடன் உலக வணிக நிறுவனத்தின் மூலம் வல்லரசு நாடுகள் – இந்தியாவின் வேளாண்மையைக் கைப்பற்றத் திட்டம் தீட்டிச் செயல்படுகின்றன. அந்த வல்லரசுகளின் நம்பிக்கைக்குரிய நண்பராகச் செயல்பட்டு நரேந்திர மோடி சொந்த நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்கிறார்.
வேளாண் உற்பத்திப் பொருட்களை இந்தியா முழுவதும் கொண்டு போய்த் தாராளமாக விற்கும் வாய்ப்புக் கிடைக்கப் போகிறது. அதனால் பேரம் பேசி அதிக விலைக்கு விற்று அதிக இலாபம் அடையலாம் என்று உழவர்களுக்கு ஆசை வார்த்தை கூறுகிறது மோடி அரசு.
அவ்வாறு இந்தியா முழுவதும் சென்று விற்கும் வசதியும் வாய்ப்பும் உழவர்களுக்கு இல்லை. தாங்கள் உற்பத்தி செய்த வேளாண் பொருட்களை தங்கள் பொறுப்பில் சேமித்து வைக்கும் வாய்ப்புகூட இல்லை. பெருங்குழும நிறுவனங்களுக்கே அவ்வாய்ப்புகள் உள்ளன. எனவே அந்நிறுவனங்கள் வேளாண் விளை பொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் குவித்து, பதுக்கி, செயற்கையாகக் கட்டுப்பாட்டை உண்டாக்கி பின்னர் அதிக விலைக்கு விற்பதற்காகக் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.
வேளாண் விளைபொருட்களை விற்பதற்கு இப்போதுள்ள வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் என்ற தற்சார்பு அமைப்பை நடைமுறையில் செயலற்றதாக முடக்கப் போகிறது மோடி அரசு! அதற்காகவே, இன்றியமையாப் பண்டங்களிலிருந்து இப்பொருட்களை நீக்கி, எவ்வளவு வேண்டுமானாலும் தனிநபர் குவித்துக் கொள்ளலாம் என்று திறந்துவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெருங்குழுமங்கள் வேளாண் விளைபொருட்களை குவித்து வைத்துக் கொள்வதற்கும், விற்பதற்கும் அனுமதி வழங்கியுள்ளது இப்புதிய சட்டம்!
இதற்கேற்ப ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தையும் கொண்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான உழவர்களின் நிலங்களைப் பெருங்குழுமத்திடம் உழவர்கள் ஒப்பந்தம் செய்து வேளாண்மை செய்ய வேண்டும் என்கிறது இத்திட்டம். அந்த ஒப்பந்தப் பெரு நிறுவனம் சொல்கின்ற பயிரைத்தான் தனிநபராய் உள்ள உழவர்கள் சாகுபடி செய்ய வேண்டும். அப்பெருநிறுவனத்துடன், சாதாரண உழவர்கள் பேரம் பேசி விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்கிறது மோடி அரசு. அது முடியவே முடியாது! பெருநிறுவனங்கள் அடிமாட்டு விலையை நிர்ணயிக்கும்.
குறைந்தபட்ச ஆதரவு விலை என்று இப்போது அரசு நிர்ணயித்து வழங்கும் விலை இனி வேளாண் உற்பத்திப் பொருட்களுக்குக் கிடையாது. ஒப்பந்த நிறுவனங்கள் கடைபிடிப்பதற்குக் குறைந்தபட்ச விலைத் திட்டம் எதையும் இப்புதிய சட்டம் கூறவில்லை.
கட்டுப்படியில்லாத விலைக்குத் தங்கள் உற்பத்திப் பொருளை விற்கும் கட்டாயத்தை இந்தச் சட்டம் உருவாக்குகிறது. காலப்போக்கில் உழவர்கள் ஓட்டாண்டிகளாகி, அந்தந்த நிறுவனங்களிடம் நிலத்தை விற்றுவிட்டு ஓட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் இலக்கு!
இந்தச் சட்டங்கள் உழவர்களை மட்டும் பாதிக்கும் என்று மக்கள் கருதக் கூடாது.
ஒப்பந்தப் பண்ணையம், பெருங்குழும வணிகம் என்று வந்து விட்டால் அதன்பிறகு நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுவிடும். இந்திய உணவுக் கழகத்தை (FCI) மூட வேண்டும் என்று உலக வணிக நிறுவனம் (WTO) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மோடி அரசு 2015இல் அமைத்த சாந்தகுமார் குழு, படிப்படியாக இந்திய உணவுக் கழகச் செயல்பாட்டைக் குறைத்து மூடிவிட வேண்டும் என்று பரிந்துரை வழங்கியுள்ளது.
நெல் கொள்முதல், வேளாண் விளைபொருள் கொள்முதல் ஆகியவை இல்லையென்றால் நியாய விலைக் கடைகளும் மூடப்படும்!
இந்த மூன்று சட்டங்களும் ஒட்டுமொத்த இந்திய மக்களைப் பெருங்குழுமங்கள் வேட்டையாடி, வறுமையிலும் பட்டினிச் சாவிலும் வீழ்த்தும் தன்மை கொண்டவை.
“மோடி அரசே, இம்மூன்று சட்டங்களையும் நிறைவேற்றாதே! நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி விட்டாலும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பாமல் கிடப்பில் போடு” என்று முழங்கி வீதிக்கு வந்து போராடுவோம்! வெல்வோம்!
உழவர் விரோதச் சட்டங்களை ஆதரித்து
தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்து விட்டார் எடப்பாடி!
ஒட்டுமொத்த உழவர்களுக்கும் மக்களுக்கும் எதிரான மோடி அரசின் பெருங்குழும வேட்டைச் சட்டங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரிப்பதன் மூலம் சொந்த மக்களுக்குத் துரோகம் செய்து விட்டார். தம்மை விவசாயி என்று கூறிக் கொள்ள எடப்பாடி வெட்கப்பட வேண்டும்!
நிலம், வேளாண்மை, வேளாண் விளைபொருள் விற்பனை ஆகியவை அரசமைப்புச் சட்டத்தில் மாநில அதிகாரப் பட்டியலில் இருக்கின்றன. தனது அரசின் அதிகாரங்கள் பறிபோவதைப் பற்றிக் கூட கவலைப்படாமல், இச்சட்டங்களை ஆதரிக்கிறார்.
பஞ்சாபிலே பா.ச.க. கூட்டணியில் பல்லாண்டு காலமாக இருந்து வரும் சிரோன்மணி அகாலிதளம், இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரான சட்டம் என்று கூறி நடுவண் அரசிலிருந்து விலகிவிட்டது. அக்கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவூர் நடுவண் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். வடமாநிலங்களில் உழவர்கள் போராடு கிறார்கள்.
இந்தச் சட்டங்களால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுவதன் உட்பொருள் – “பா.ச.க.வால் தனக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது” என்ற தன்னலம் கொண்டதே!
தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராகத் தமது பதவிப் பாதுகாப்புக்காகத் துரோகம் செய்வதைக் கைவிட்டு, இந்தச் சட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.
- காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.