19/10/2020

பாசிட்டிவ் எனர்ஜி...

 


உலகம் முழுமைக்கும் ஆக்க சக்திகளாக இருப்பவற்றை பாசிட்டிவ் எனர்ஜி என்கிறோம். ’நீங்க நல்லா இருக்கணும், வாழ்க வளமுடன்’ போன்ற வாழ்த்துச் சொற்கள் பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை சேர்ந்தவை.

வங்கி வாசலில் பேனா இல்லாமல் தவித்தும்போது உதவியவரிடம் புன்முறுவலிடம் நன்றி என சொல்வது, சாலையில் நடப்பட்ட மரத்திற்கு ஒருவாளித் தண்ணீர் ஊற்றுவது போன்ற பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை வெளிப்படுத்தும் செயல்கள் தான். நற்செயல்களின் மூலாதாரம், பாசிட்டிவ் எனர்ஜி. அது ஒன்றின் வளர்ச்சியை கூட்டும். அவ்வளர்ச்சியை பாதுகாக்கும்.

பாசிட்டிவ் எனர்ஜியின் பகையாளிதான் நெகட்டிவ் எனர்ஜி. ’அவன் அழியணும், அந்த குடும்பம் அழியணும், அவன் வீட்டு மாடு சாகணும், விவசாயம் பொய்க்கணும், பிசினஸ் நொடிக்கணும்’ போன்ற வசவு உணர்வுகள் நெகட்டிவ் எனர்ஜியை சேர்ந்தது. ஒன்றின் அழிவை, ஒருவரின் துயரத்தை நேசிக்கக்கூடியது. தீய நிகழ்வுகளின் தூண்டுகோலாக இருப்பது நெகட்டிவ் எனர்ஜி. இத்தகைய இரண்டு எனர்ஜிகளின் பிறப்பிடம், வாழ்விடம் எது? மனிதனின் சிந்தனை அறைதான்.

இரு சக்திகளும் ஒரே அறையில்தான் வித்தாக விழ்கிறது. அதில் எந்த விதை செடியாகும், எந்த விதை மரமாகும் என்பது அம்மனிதனுக்குக் கிடைக்கிற சூழ்நிலையே முதலில் முடிவு செய்கிறது.

மனிதன் தனக்குக் கிடைக்கிற சூழ்நிலையால் சிந்தனைகளைப் பெறுகிறான். இயல்பாகவே நல்ல சூழ்நிலையை பெறுகிறவன் பாக்கியசாலிதான். அவனுக்கு நற்சிந்தனை, நல்ல செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு எளிதில் கிட்டிவிடும். சமூகம் ’நல்லவர்’ என்ற பட்டியலில் சீக்கிரமே இணைத்துக் கொள்ளும்.

இவர், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை வாழ்த்தும் உணர்வு போன்ற பண்புகளால் கட்டமைக்கப்படுவார். இவரிடம் நெகட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும். இவரது ஆளுமையில் மற்றவர்கள் கட்டுண்டு போவர். எதிர்பாராதவிதமாக நல்ல சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றம் அடையும். நெகட்டிவ் எனர்ஜி ஆளுமை செய்ய முற்படும். எனினும் அவரது நற்சிந்தனை அனுபவத்தால் அது நிரந்தரமாகி விடாமல் பாசிட்டிவ் எனர்ஜியை நோக்கி உடனுக்குடன் மீண்டு கொள்வார்.

கடலில் எவ்வாறு ஒவ்வொரு நாளும் நீர் தளும்பலில் உள்வாங்குதல், வெளி தள்ளுதல் ஏற்படுகிறதோ, அப்படி ஒரு நிகழ்வு போல மனிதனின் மன நிலையில் இத்தகைய ஏற்ற இறக்கங்களை சூழ்நிலைகள் நாளொரு பொழுதும் உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

இயல்பிலேயே நல்ல சூழ்நிலை, குடும்பநிலை அமையாதவர்கள், சூழ்நிலையின் பாதிப்பால் வாழ்வில் தன்னம்பிக்கை இழந்து, விரக்தி நிறைந்து, பயம், கோபம் மிகுந்து. மற்றவர்களை ஏக்கத்தோடும், பொறாமையோடும் காண்பவர்களாகவும், தன்னையே தனக்குள் தாழ்த்தி கொண்டும் வாழ்வர். இவரிடம் எளிதில் நெகட்டிவ் எனர்ஜி வெற்றி கொள்ளும். ஆளுமை செய்யும். பாசிட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும். எதிர்பாராதவிதமாக தீய சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றமடையும். அடங்கிக் கிடந்த பாசிட்டிவ் எனர்ஜி துளிர்க்கும். எனினும் அது நிரந்தரமாக வளர்ந்து விடாமல் அதுநாள் வரை ஆதிக்கம் செய்த நெகட்டிவ் எனர்ஜி கண்காணிக்கும். ஒவ்வொரு நாளும் இந்த எனர்ஜி மாற்றம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

பலமுறை நிகழும் இத்தகைய மாற்றங்களில் அதிகமாக எந்த எனர்ஜி அவரை வழி நடத்துகிறதோ அதன் பலன்களை, பாதிப்புகளை அவரது வாழ்விலும், அவரைச் சேர்ந்தவர்கள் வாழ்விலும் எதிரொலிக்கும். உதாரணமாக பாசிட்டிவ் எனர்ஜி மிகுந்த ஒருவரை டிராஃபிக்கில் கெட்ட வார்த்தையால் ஒருவன் திட்டி விடுகிறான் என வைத்துக்கொள்வோம். திட்டியவனைத் திரும்ப மோசமான கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டும் என தோன்றும். முடியாது. அப்போது மனதில் நெகட்டிவ் எனர்ஜி எழும். திட்டியவன் மீது பாய வேண்டிய நெகட்டிவ் எனர்ஜி சம்மந்தமே இல்லாமல் அலுவலகத்தில் பணி செய்யும் எளிய ஊழியரின் சிறு தவறைச் சுட்டிக்காட்டி அவர் மீது பாய்ந்து விடும். அவர் என்ன செய்வார் அவருக்குச் சாதகமான இடத்தில் வெளியிடுவார். இப்படியாக இது பரவும்.

ஆக உள்வாங்கப்படும் எனர்ஜியைப் பொறுத்து சார்ந்தவர்களையும் பாதிக்கும், அல்லது பலனளிக்கும்.

மனிதர்கள் தங்களுக்குள் எழுப்பிக்கொள்ளும் எனர்ஜிகளில் ஒவ்வொரு நாளும் எந்த சக்தியின் ஆதிக்கம் அதிகரிக்கிறதோ, அதற்கான விளைவுகளை அவர் சார்ந்துள்ள சமூகமும், இந்த உலகமும் சந்திக்கிறது.

இத்தகைய பலப் பரிட்சை, அதனால் எழும் விளைவுகளால்தான் இந்த உலகம் பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த மனிதகுலம் அனைத்திற்கும் முழுமையாகவும், முழுநேரமும் பாசிட்டிவ் எனர்ஜி சூழ்ந்திருக்க உத்தேசித்தே மதங்களின் உபதேசங்கள், வழி நடத்தைகள் அமைந்திருக்கின்றன. உலகில் மதங்கள் அனைத்துமே நற்சிந்தனைகள், நற்செயல்களை வழிமொழிகின்றன.

நான் எப்போதோ படித்த நிகழ்வு ஒன்றை இங்கே நினைப்படுத்துகிறேன். ’மகிழ்ச்சியை விதைப்பவர்’ என்ற பெயரில் அதைப் படித்த நினைவு. ஒருவர் தினமும் காலையில் பத்து ரூபாய்க்கு ஒரு ரூபா நாணயங்களாக மாற்றிக்கொண்டு நடைப்பயிற்சிக்குச் செல்வாராம். செல்லும்போது வேண்டுமென்றே அங்கொன்றும், இங்கொன்றுமாக நாணயங்களை வேண்டுமென கிழே போட்டு வைப்பாராம். காலையில் அதைக் கண்டெடுக்கும் பிற மனிதர்கள் ’இன்று அதிஷ்ட நாள்’ என சிறு மகிழ்ச்சிக்கு உள்ளாவர் இல்லையா? அதற்காகத்தான் அப்படிச் செய்வாராம். ஏனெனில் அம்மகிழ்ச்சி அலைகள் சமூகத்திற்குத்தானே திரும்பவும் கிடைக்கும். அதற்காக அப்படி நடந்துகொள்வாராம் அம்மனிதர்.

சூழ்நிலை தான் ஒரு மனிதனுக்கு சிந்தனைத் தருகிறது. அச்சிந்தனையே அவனிடமிருந்து சொல்லாக வெளிவருகிறது. அச்சொல்லே அவனது செயலாகிறது. தொடர்ச்சியான செயலே பண்பாகிறது. அப்பண்பே அம்மனிதன் மரபணுவில் பதிவு பெறுகிறது. அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

எனவே வாழும் வீட்டில் சமூகத்தில், நாட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை பரவ விடுங்கள். அதை உருவாக்குங்கள். உங்களுக்கும் சமூகம் பாசிட்டிவ் எனர்ஜியையே திரும்ப வழங்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.