எளிய முறை குண்டலினி...
எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம். காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம். புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும். ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்.
மனம் வேறு உயிர் வேறு என்று தான் பொதுவாக மக்கள் கருதுகிறார்கள். அப்படியல்ல. உயிரே தான் படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. உயிர் உடலில் இயங்கும் போது எக்காரணத்தாலும் உடலில் எந்தப் பகுதியிலேனும் அணு அடுக்கச் சீர் குலைந்து போனால் உயிருக்குத் துன்ப உணர்ச்சி ஏற்படுகிறது.
அவ்வுணர்ச்சியிலிருந்து மீள ஒரு பொருளோ, செயலோ, பிறர் உதவியோ தேவைப்படுகின்றது. அப்போது தேவை என்ற மனநிலையாக உயிர் ஆற்றல் ஓங்கி நிற்கின்றது. பின் அதுவே முயற்சி, செயல், இன்ப துன்ப விளைவுகள், அனுபோகம், அனுபவம், தெளிவு, முடிவு என்ற நிலைகளாகப் படர்ந்து இயஙகுகின்றது. இந்த உண்மை யோகத்தின் முதல் படியாகிய ஆக்கினை தவப்பயிற்சியால் தெளிவாக விளங்கும்.
ஆக்கினை சக்கரம்...
உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும். உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும்.
அவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பனவாகும். அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம்.
ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது.
மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.
தனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவு பெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும்.
தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும் தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டு சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவுக்குத் திறமை பெருகும். மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில் ஆக்கினைச் சக்கர யோகமேயாகும். ஆசானால் எழுப்பப் பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க விரைவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கும். உடல்நலம், மனநலம் ஓங்கும். முகம் அழகு பெறும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.