14/08/2021

ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்...

 


ஆஸ்திரேலியாவின் அடிலைடு நகரிலிருந்து 850 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூப்பர் பெடி நகரம், விலையுயர்ந்த கற்களுக்கான சுரங்கங்களுக்குப் பெயர் பெற்றது.

தெற்கு ஆஸ்திரேலியாவின் சிம்சன் பாலைவனத்தை ஒட்டியுள்ள இந்த நகரத்துக்கு 80 ஆண்டுகளுக்கு முன் சுரங்கத் தொழிலாளர்கள் வந்து குடியேறினர்.

அவர்கள், இங்கு வீசும் மணற்புயல், கோடை வெயிலிலிருந்து தப்பிப்பதற்கு (அது உச்சபட்சமாக 47 டிகிரி செல்சியசாக இருக்கும்) நிலத்தடியில் வசிப்பதை வசதியாகக் கருதினர்.

இந்த வறண் ட, மரங்களற்ற நகரின் சுண்ணாம்புக் கல் குன்றுகளைக் குடைந்து 'டக்கவுட்' எனப்படும் நிலத்தடி வீடுகள் உருவாக்கப்பட்டன.

குடைவுப் பணி முடிந்ததும் சுவர்களில் ஓர் இயற்கை 'வார்னிஷ்' பூசப்படுகிறது, தரையில் கான்கிரீட் இடப்படுகிறது.

நவீனமான 'டக்கவுட்'டுகள் அனைத்திலும் சுவர் கம்பள அமைப்பு, வழக்கமான வீட்டு உபயோகப் பொருட்கள், மேஜை, நாற்காலிகள், குடிநீர், மின்சார இணைப்பு உண்டு. கூப்பர் பெடி நகரில் இந்த நிலத்தடி வீடுகள் மட்டுமின்றி, மூன்று நிலத்தடி தேவாலயங்களும் உண்டு.

நல்ல காற்றோட்ட வசதியுடன் இந்தக் குகை வீடுகளின் வெப்பநிலை எப்போதும் நிலையாக வைத்திருக்கப்படுகிறது.

கொஞ்சம் வெளிச்சக் குறைவு, இலேசான எதிரொலி, பூமியின் உப்பு வாசனை தவிர இந்த வீடுகளில் வாழ்க்கை சாதாரண வீடுகளைப் போல இயல்பாகவே இருக்கிறது.

இந்த நகரத்தின் ஆயிரத்து 900 குடும்பங்களில் 70 சதவீதம் பேர் நிலத்தடி வீடுகளிலேயே வசிக்கின்றனர்.

இந்த வீடுகள் தவிர வேறு எங்கும் தங்களுக்கு வாழப் பிடிக்காது என்று அவர்கள் கூறுகின்றனர்.

புதிதாக இடம் வாங்கி ஒரு 'டக்கவுட்'டை உருவாக்குவதற்கு ஏறக்குறைய 17 லட்ச ரூபாயும், ஏற்கனவே தயாராக உள்ள, மூன்று அறைகள் கொண்ட 'டக்கவுட்'டை வாங்குவதற்கு 30 லட்ச ரூபாயும் ஆகிறது.

ராபர்ட் கோரோ என்பவர் இங்கு 'டெசர்ட் கேவ்' என்ற நான்கு நட்சத்திர நிலத்தடி ஓட்டலை நடத்தி வருகிறார்.

உலகில் இதுதான் ஒரே நிலத்தடி ஆடம்பர ஓட்டல் என்கிறார் அவர்.

தனது ஓட்டலில் வேறு எங்கும் இல்லாத அமைதியை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம், அவர்கள் தமது அறைக் கதவை மூடிவிட்டால் எந்த வெளிச்சத்தமும் கேட்காது என்று கூறுகிறார் ராபர்ட் கோரோ.

நிலத்தடி கட்டிடங்களின் ஒரே குறைபாடு தூசிதான்.

தரை, மேஜை மற்றும் உணவிலும் கூட குறிப்பிட்ட நேரத்தில் ஒரு படலமாக தூசி படர்ந்து விடும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.