22/05/2024

ஒடிசாவை தமிழன் ஆளக்கூடாதா?

 


தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று சொன்னால் இங்குள்ள பாரதமாதா புத்திரர்களுக்கும், திராவிட மாதா புத்திரர்களுக்கும் கோபம் வரும். 

ஏனெனில், நாமெல்லாம் இந்தியர்கள், நாமெல்லாம் திராவிடர்கள்,  மாநிலத்திற்குள் இனம், மொழி பிரிவினை பேசக்கூடாது, நல்லவர் எவரும் எந்த மாநிலத்தையும் ஆளலாம் என்பதுதான் அவர்களின் கோட்பாடு.

எப்போதும் பாரத மாதா பஜனை பாடும் மோடிக்கும், அமித்ஷாவிற்கும் திடீரென்று மண்ணின் மைந்தர் கொள்கை மீது பற்று வந்துள்ளது.

ஒடிசாவில் மீண்டும் நவீன் பட்நாயக் ஆட்சிக்கு வந்தால் ஒரியர்கள் யாரும் இனிமேல் ஆட்சிக்கு வரமுடியாது என்று இருவருமே தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்கள்.

ஒடிசாவில் நவீன் பட்நாயக் கட்சியில் வி.கே.பாண்டியன் என்னும் தமிழன் செல்வாக்கோடு விளங்கி வருகிறார்.

நவீன் பட்நாயக்கிற்குப் பிறகு அவர் தான் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு என்று அங்குள்ள ஊடகங்கள் எழுதி வருகின்றன. இதை மண்ணின் மைந்தர்களான ஒரியர்கள் எதிர்த்தால் அதை வரவேற்கலாம். 

ஆனால் ஒரு தமிழன் முதல்வரானால் பாரத மாதா பஜனை பாடும் மோடிக்கும், அமித்ஷாவிற்கும்  ஏன் வலிக்கிறது? 

தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழ் மொழியையும், தமிழரையும் உயர்த்திப் பேசும் அதே மோடி தான் ஒடிசாவிற்கு சென்று தமிழன் ஆளக்கூடாது என்று பேசுகிறார். 

குஜராத்தி இனத்தை சேர்ந்த நானே இந்தியாவையே ஆளும் போது, ஒரு தமிழன் ஒடிசாவை ஆள்வது தவறில்லை என்று பேசியிருந்தால் அவரின் பாரதீய ஜனதா கொள்கையின் பரந்த மனப்பான்மையை காட்டியிருக்கும்.

மோடிக்கு தமிழர் வரலாற்றுப் பெருமை மீது எப்போதும் காழ்ப்புணர்ச்சி உண்டு. அதை ஒடிசாவில் நின்று கொண்டு வெளிப்படுத்தியுள்ளார்.

மோடிக்கு தமிழர் மீதான காழ்ப்புணர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் ஒரு உண்மையை போட்டுடைத்துள்ளார்.

இந்தியா ஒரே நாடல்ல, பல்வேறு தேசிய இனங்களை உடையது. அந்தந்த தேசிய இனங்களின் மைந்தர்களே நாட்டை  ஆள வேண்டும் என்பதே அந்த உண்மையாகும்.

"அவனவன் நாட்டை அவனவன் ஆள்க! 

மற்றயல் நாட்டை சுரண்டல் அடியோடு வீழ்க! " என்று எங்கள் பாட்டன் பாரதிதாசன் ஏற்கனவே பாடி வைத்து சென்றுள்ளான். அதைத் தான் தமிழ்தேசியர்களும் வழி மொழிந்து பேசி வருகிறோம். 

மோடிக்கோ, அமித்ஷாவிற்கோ  தமிழ்த்தேசியர்களைப் போல, மண்ணின் மைந்தர் கொள்கை மீதெல்லாம் பற்று இல்லை. அவர்கள் இதே கருத்தை மற்ற மாநிலங்களில் பேச மாட்டார்கள்.

ஒடிசாவில்  நின்று பேசுவதற்கு காரணம் தமிழர் மீதான இன வெறுப்பு அரசியலைத் தவிர  வேறொன்றுமில்லை.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.