மத்திய அரசின் திட்டமான ஏழை மாணவரகளுக்கு அவர்கள் விரும்பும் பள்ளியில் பயிலும், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா என்பதை கல்வித் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலவச கட்டாயக் கல்வி சட்டம்: மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். 6 முதல் 14 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கும் வகையில், மத்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த கல்வி சட்டத்தை கொண்டு வந்தது.
இதன்படி, தனியார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள், சமூகத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.
மேலும், எல்கேஜி போன்ற தொடக்க நிலை வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது. எட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் ஃபெயில் ஆக்கக் கூடாது. அவர்களை அடிக்கவோ, மன ரீதியாக துன்புறுத்தவோ கூடாது போன்ற பல்வேறு விதிமுறைகள் இலவச கட்டாய கல்வி சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
படிப்பு செலவு: அரசு பள்ளிகளில் ஒரு மாணவருக்கு செய்யப்படும் செலவு அல்லது தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்படும் கல்விக் கட்டணம் இதில் எது குறைவோ அந்த தொகை நிர்ணயிக்கப்படும்.
இந்த நிதியை பெறுவதற்காக தனியார் பள்ளிகள் தனி வங்கிக் கணக்கை பராமரிக்க வேண்டும். உரியதொகை அந்த கணக்கில் ஆன்லைனில் (இ.சி.எஸ்.) செலுத்தப்படும்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க வரும்போது, வயது சான்றிதழ் இல்லை என்ற காரணத்தினால் மாணவர் சேர்க்கையை நிராகரிக்கக் கூடாது. பிறப்பு சான்றிதழ் கொண்டுவராத பட்சத்தில் குழந்தை பிறந்த மருத்துவமனையில் கொடுத்த ஆவணத்தையோ, அங்கன்வாடியில் வழங்கப்பட்ட ஆவணத்தையோ ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இதுவும் இல்லாவிட்டால் பெற்றோர் அல்லது குழந்தையின் பாதுகாவலர் பிறந்த தேதியை குறிப்பிட்டு அளிக்கும் உறுதி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பள்ளிகள் அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கும் போது அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிப்போம் என உறுதிமொழி பெறப்படுகிறது. இந்த உறுதிமொழியை மீறினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளும், தங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள பள்ளியில், இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ், கல்வி கற்க உரிமை உள்ளது.
ஆரம்பக் கல்வி பெற, குழந்தைகளோ அல்லது பெற்றோரோ நேரடியாக மற்றும் மறைமுகமாக (சீருடைகள், பாடப் புத்தகங்கள், மதிய உணவு, போக்குவரத்து) எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. குழந்தைகளின் ஆரம்பக் கல்வி பூர்த்தியாகும் வரை, கல்விக்கான அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும்.
பள்ளிச் சேர்க்கை நெறிமுறைகள்: நாட்டிலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
இச்சட்டத்தின் கீழ் குழந்தைகளை சேர்க்க மறுக்கும் பள்ளிகள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம், மெட்ரிக். பள்ளிகளின் ஆய்வாளர்களிடம் புகார் அளிக்கலாம்.
பள்ளிகள் சேர்க்க மறுப்பு: இச்சட்டத்தின் படி ஒரு பள்ளியில் 100 மாணவர்கள் (6 வயது முதல் 14 வயது வரை) படித்தால் அதில் 25 மாணவர்கள் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் பயில வேண்டும். ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் இச்சட்டத்தை ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளை சரிகட்டிக் கொண்டு, இந்த நடைமுறையை பின்பற்ற மறுக்கின்றனர்.
எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் எந்தெந்த வகுப்பில் எத்தனை மாணவர்கள் இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்களை பள்ளி தொடங்கிய ஒரு மாதம் வரை பதாகையாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
அப்போது தான் இந்த சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகத்தினர் சிலர் கூறியதாவது:
இச்சட்டம் மகத்தான திட்டமாகும். இத்திட்டம் ஏழை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உகந்ததாகும். ஆனால் பள்ளி நிர்வாகத்துக்கு ஏற்புடையதல்ல. தற்போதுள்ள சூழலில் கடுமையான போட்டிகளுக்கிடையில் பள்ளிகளை நடத்துவது மிகவும் சிரமம் வாய்ந்தது.
அதில் 25 சதவீத மாணவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் நாங்கள் சேர்ப்பது எங்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துவதாகும். அதையும் பொருட்படுத்தாமல் இத்திட்டத்தை அமல்படுத்தினால், ஆசிரியர் நியமனத்தில் இருந்து அனைத்து நடைமுறைக்கும் இத்திட்டத்தில் பள்ளிக்கு பல்வேறு விதிமுறைகள் நியமிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஒரு மாணவரின் கல்வி தொகையை பெற ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஒரு மாணவருக்கான ஆவணங்களை 6 நகல் எடுத்து அனுப்ப வேண்டும். அதே போல் அந்த தொகை கல்வி ஆண்டின் இறுதியில் தான் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
சில நேரங்களில் இரண்டு ஆண்டுகள் சேர்த்து கூட வழங்கப்படுகிறது. மேலும் அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
எனவே பள்ளி நிர்வாகத்தினருடன் மத்திய அரசு கலந்தாலோசித்து, சில விதிகளை தளர்த்தினால் மட்டுமே இத்திட்டத்தில் பள்ளி நிர்வாகத்தினர் ஆர்வமுடன் மாணவர்களை சேர்க்க முடியும் என்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.