இங்கிலாந்து, அமெரிக்க பல்கலைக் கழகங்களின் தலை சிறந்த விஞ்ஞானிகளும் பேராசிரியர்களும் (Sir William Crooks, Dr, F.W.H.Miyers. Sir Oliver Lodge, Richardd Hodson, Edmmund Gurney, Frank Padmore, R.D. Own, Prof.Aksakof, Russel Wallace, C.N.Jones) ஒன்று சேர்ந்து சில ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்கள்.
இவர்களால் மனோதத்துவ ஆராய்ச்சியாளர் சங்கம் (Society for the Psychical Research) என்ற ஓர் அமைப்பு 1885 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
எஸ்.பி.ஆர் என்று பிரபல்யமாகிய இச்சங்கத்திற்கு அமெரிக்காவிலும் ஒரு கிளை இருந்தது.
மனிதன் இறந்த பின் வேறொரு நிலையில் வாழ்கிறான் என்ற அபிப்பிராயத்தை யார் தெரிவித்தாலும் அவர் கிறிஸ்தவ உலகின் பலத்த கண்டனதுக்கு ஆளாகக்கூடிய கால கட்டத்தில் இச்சங்கம் தமது ஆராய்ச்சிகளின் முடிவுகளைத் துணிவுடன் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது.
எஸ்.பி.ஆர். என்று பிரபலமாகிய இச்சங்கத்தினர் ஆவி உலக இடையீட்டாளர்கள் (Mediums) மூலமே தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தினார்கள்.
இந்தச் சங்கத்தின் முதல் தலைவராக இருந்த டாக்டர் மையர்ஸ் தான், இறந்த பின் தனது நண்பர் சேர்.ஒலிவர் லொட்ஸ் உடன் தொடர்பு கொள்வதாக வாக்களித்திருந்தார். அவ்வாறே தொடர்பு கொண்டு பயனுள்ள பல தகவல்களைக் கொடுத்தும் உதவினார்.
இறந்தவர்களுடைய ஆவிகள் இவ்வுலகில் உள்ள தங்கள் உறவினர்களுடன் மீடியம்கள் மூலம் தொடர்பு கொண்டு குடும்ப விவகாரங்கள் பற்றிய விடயங்களைக் கூறிய சந்தர்ப்பங்கள் ஏராளமாக உள்ளன.
இறக்கும் பொழுது மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ஆவல் காரணமாக தங்கள் ஆசைகளை வெளிப்படுத்துவதற்கு ஆவிகள் மீடியம் களை உபயோகிப்பதுண்டு.
பிலிப்ஸ் என்ற ஒரு ஆங்கிலேயரும் அவரது மனைவியும் 25 வருடங்களுக்கும் மேலாக செய்த தீவிர ஆராய்ச்சிக்குப் பின் இறப்புக்குப்பின் வாழ்வு என்ற ஒரு நூலை வெளியிட்டிருக்கின்றனர்.
பல ஆண்டுகளாக ஆவிகளுடன் தொடர்புக் கொள்ளும் அனுபவங்களையும், பல நாடுகளில் ஆவிகளோடு தொடர்பு வைத்துக் கொண்டிருப்பவர்கள் மறு உலகத்தைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதைப் பற்றியும் பிலிப்ஸ் தம்பதியர் நூலில் விளக்கியுள்ளனர்.
அந்நூலில் அடங்கிய ஏராளமான தகவல்களில் முக்கியமானதொன்று, இலண்டனில் 19 -ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி.
இங்கிலாந்தில் முதன்முறையாக புகைக்கூண்டுகளின் உந்து சக்தியைக் கொண்டு பறக்கவிடப்பட்ட ஆகாய விமானம் திசைத் தப்பிப் போய் எங்கோ விழுந்து நொருங்கிவிட்டது.
அதில் சென்ற தலைமைப் பொறியியலாளரின் ஆவி.. எவ்வாறு இலண்டனில் உள்ள விமானக் கம்பெனியின் மேலதிகாரியையும் ஒரு பிரபல அரசியல்வாதியையும் மீடியம் மூலமாகத் தொடர்புக் கொண்டு விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறுகளைப் பற்றித்தெரிவித்தது என்பதே அது.
இந்நூலில் கூறப்பட்ட இன்னொரு சுவராசியமான சம்பவம்.. மார்க் என்னும் ஒரு பத்திரிகை நிருபர் பற்றியது.
இவர் இலண்டனில் ஆவிகளுடன் தொடர்புக் கொள்ளும் ஒரு குழுவில் உறுப்பினராக இருந்தார். வழக்கம் போல் ஒரு இரவு, இக்குழு ஆவிகளுடன் தொடர்பு ஏற்படுத்திப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு ஆவி, உனக்கு யுத்த முனையில் நிருபராக கடமையாற்றும்படி அழைப்பு வரும். போகாதே என்று மார்க்கை எச்சரித்தது.
யுத்த முனையில் கடமையாற்ற வேண்டும் என்ற துடிப்பும் ஆர்வமும் கொண்ட மார்க் அழைப்புக் கிடைத்தவுடன் ஆவியின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது யுத்த முனைக்குச் சென்று விட்டார்.
சில நாட்களுக்குப் பின்னர் மார்க் உறுப்பினராக இருந்த குழு, ஆவிகளுடன் தொடர்புக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஆவி உலகில் இருந்து மார்க்கினுடைய ஆவி பேசியது.
இங்குள்ள எனது வழிகாட்டி நண்பரின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது யுத்த முனைக்குச் சென்றேன். அங்கு கடமையில் ஈடுபட்டிருக்கும் பொழுது யாருக்கோ குறிவைத்து குண்டு ஒன்று எனது நெஞ்சில் பாய்ந்து விட்டது. மறுகணம் எனது உடலையே நான் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். பின்னர் எப்படியோ இங்கு வந்து சேர்ந்து விட்டேன் என்றது அது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.