சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக்கால் ஆன முட்டை மற்றும் காய்கறிகள் இந்தியச் சந்தைகளில் அதிகளவு விற்பனை செய்யப்படுவதாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கக் கோரி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வழக்கறிஞர் சுக்ரிவா துபே மூலமாக டெல்லி உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி அனு மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சமூக ஆர்வலர் சந்த் ஜெயின் நேற்று பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக்கால் ஆன முட்டை மற்றும் காய்கறிகள் ஏராளமாக இந்தியச் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அத்தகைய பொருட்களின் தரத்தை ஆய்வு செய்வது மிகவும் அவசியம். குறிப்பாக பெருநகரங்களில்தான் இத்தகைய கலப்பட பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுபோன்ற பொருட்களை சேமித்து வைத்துள்ள இடங்களில் சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அத்தகைய பொருட்களின் தரத்தை ஆய்வு செய்வது முக்கியம்.
இவ்வாறு மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.
இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், மத்திய அரசு தகுந்த விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். மேலும், அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
ரசாயன கலவைகள் மூலம் செயற்கை கோஸ் தயாரிப்பது பற்றிய வீடியோவும் பிளாஸ்டிக் முட்டையை எப்படி கண்டறிவது பற்றிய வீடியோவும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் ஏற்கெனவே வெளியாகியுள்ளது குறிப்பிடத் தக்கது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.