06/05/2017

இறைவன் எந்த மதத்தவன்?



இறைவன் இருக்கிறான் என்பதை நம்பாதவர்கள் கூட மனித சக்திக்கு மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்..

கோடானு கோடி உயிர்கள், உலகங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள் எல்லாம் நம் கற்பனைக்கும் எட்டாத அண்டவெளியில் துல்லியமாக இயங்கிக் கொண்டிருக்கிறன என்பதைப் பார்க்கும் போது அதை இயக்குகின்ற ஒரு மாபெரும் சக்தி இருக்கத்தான் வேண்டும் என்பதை நாத்திகர்களாலும் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

இன்று அந்த இறைவனைத் தங்கள் மதத்தவராக பல மதத்தவரும் ஆணித்தரமாக நம்புகிறார்கள். அவன் பெயரால் தர்மங்களும் நடக்கின்றன. அதர்மங்களும் நடக்கின்றன. இறைவனின் பெயரால் யுத்தங்களும், சண்டைகளும் சர்வசகஜமாக நடப்பதை வரலாறு பதிவு செய்கிறது. கடவுளின் பெயரால் மனிதர்கள் என்னென்னவோ செய்கிறார்கள். செத்து மடிகிறார்கள்.

உண்மையில் இறைவனுக்கு என்று ஒரு மதம் இருக்கிறதா? இருந்தால் இறைவன் எந்த மதத்தவன்? பல மதங்கள் தங்களுடையவன் என்று உரிமை கொண்டாடுகின்றனவே, உண்மையில் பல மதக் கடவுள்கள் இருக்கின்றனரா?

பல மதக் கடவுள்கள் இருந்திருந்தால் இந்த உலகில் இன்று நடைபெறும் மதச்சண்டைகள் போல கடவுள்களுக்கும் யார் சிறந்தவன் என்ற போட்டி ஏற்பட்டு இருக்கும். அண்ட சராசரங்கள் ஸ்தம்பித்துப் போய் இருக்கும். அது இது வரை நிகழவில்லை, பிரபஞ்சம் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதால் பல மதக் கடவுள்கள் இருக்க வாய்ப்பேயில்லை. எனவே இறைவன் ஒருவனாக அல்லது ஒரே சக்தியாகத் தான் இருக்க முடியும் என்று சுலபமாகக் கணிக்க முடிகிறது.

இருப்பது ஒரு இறைவன் என்றால் அவன் ஒரு மதத்தவனாக இருக்க முடியுமா? அப்படி ஒரு மதத்தவனாக இறைவன் இருந்திருந்தால் அந்த குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் ஓஹோ என்று சுபிட்சமாகவும், சகல சௌபாக்கியங்களுடனும் இருக்க மற்ற மதத்தினர் எல்லாம் கீழான நிலைகளிலும், சொல்லொணா கஷ்டங்களுடன் இருக்க வேண்டும். அது தான் லாஜிக்காகத் தெரிகிறது.

ஆனால் இன்றைய உலகில் எல்லா மதத்திலும் சுபிட்சமாக உள்ளவர்களும் இருக்கிறார்கள், எதிர்மாறாக மிகவும் கஷ்டப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது இறைவன் ஒரு மதத்தைச் சார்ந்தவன் என்ற நிலைபாடும் அடிபட்டுப் போகிறது.

இருப்பது ஒரு இறைவன், நாமெல்லாரும் அவன் சிருஷ்டிகள் என்றால் மதம் என்ற பெயரிலும், தங்கள் கடவுள் என்ற பெயரிலும் மனிதர்கள் சண்டை போடுவது எதற்காக?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.